Skip to main content

ரபேல் விவகாரத்தில் லாபம் பெற துடித்த காங்கிரஸ்! வானதி சீனிவாசன் பதிலடி (சிறப்பு பேட்டி)

Vanathi Srinivasan
‘ரபேல் விவகாரத்தில் இந்திய பங்குதாரர் ஒப்பந்தத்தை அனில் அம்பானிக்கு கொடுத்தது யார்? ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ‘பைபாஸ் அறுவை சிகிச்சை’ செய்தபோது ராணுவ அமைச்சக அதிகாரிகள் ஏதேனும் அதிருப்தி தெரிவித்தனரா?’ ஆகிய கேள்விகளை தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ள ராகுல்காந்தி, இந்த வீடியோவை பார்த்துவிட்டு பகிர வேண்டும் என்றும், அந்த கேள்விகளை ஒவ்வொரு இந்தியனும், பிரதமரிடமும், அவரது மந்திரிகளிடமும் கேட்குமாறும் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், 

 

டசால்ட்ஸ் நிறுவனம் தனது பார்ட்னர்ஸை தேர்வு செய்வது முழுக்க முழுக்க அவர்களுடைய சுதந்திரமான உரிமை. அரசாங்கம் டசால்ட்ஸ் நிறுவனத்தோடு விமானம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடும்போது அதில் குறிப்பிட்ட சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என்ற அந்த கட்டளையை மட்டுமே அரசாங்கம் சொல்ல முடியுமே தவிர, யாரிடம் வாங்க வேண்டும் என்பதைப் பற்றி இந்திய அரசாங்கம் கவலைப்படாது. 

 

ஏனென்றால் முழுக்க முழுக்க அது டசால்ட்ஸ் நிறுவனத்தினுடைய சுயவிருப்ப உரிமை. அந்த வகையில் அவர்கள் அனில் அம்பானியினுடைய நிறுவனத்தோடு மட்டுமல்ல, இன்னும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் கோவையைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்பட அடக்கம். 


 

தன்னுடைய விமான உதிரி பாகங்களுக்கு இந்திய நாடு முழுவதும், இந்தியாவில் தயாரித்துக்கொண்டிருக்கக்கூடிய நிறுவனங்களோடு அவர்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தம் இந்திய அரசாங்கத்திடம் அவர்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர்களை பொறுத்தமட்டில் இந்திய அரசாங்கம் கேட்ட விமானங்களை மட்டும் கொடுக்க வேண்டும். இரண்டாவது அந்த விமான தயாரிப்பில் குறிபிட்ட சதவீத பொருட்கள் இந்தியாவில் வாங்க வேண்டும். ஆக எந்த நிறுவனத்தோடு அவர்கள் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள் என்பது முழுக்க முழுக்க அவர்களுடைய சுய விருப்பம் உரிமை சார்ந்த ஒன்று. அனில் அம்பானி நிறுவனத்தை தேர்வு செய்தது டசால்ட்ஸ் நிறுவனம் மட்டுமே. 

 

இரண்டாவது கேள்விக்கு பதில்,  ‘பைபாஸ் அறுவை சிகிச்சை’ செய்கிறபோது ராணுவ அமைச்சகம் அதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தாலோ, சட்ட விரோதம் இருந்தால் மட்டுமே குரல் எழுப்ப முடியுமே தவிர, பிரதமரின் அத்தனை முடிவுகளுக்கும் எதிர்க்குரல் எழுப்பிக்கொண்டிருந்தால் அரசாங்கத்தில் ஒரு வேலையும் நடக்காது.  

rahulgandhi
இதற்கு முன்பாக பேச்சுவார்த்தை மட்டுமே 10 வருட காலம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் அரசு, தற்போது நமது விமானப் படைக்கு ரபேல் விமானங்கள் உடனடி தேவையாக இருப்பதால் அரசாங்கம் விரைவாக இந்த முடிவை எட்டியிருக்கிறது. 

 

ரபேல் விமான விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஏதோ ஒரு வகையில் லாபம் பெற துடித்தது. அது நடக்காததால் இன்று பாஜக அரசு மீது இருக்கின்ற கோபத்தில் தனக்கு ஆதாயம் கிடைக்கவில்லை என்று பொய் குற்றச்சாட்டுக்களை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட திரும்ப திரும்ப எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

 

2019 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றால் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கிரிமினல் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளாரே?
 

அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா ஆகட்டும் பிறகு பார்க்கலாம். 

 

தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகிறது. அதைப்பற்றி...

 

பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கடந்த ஜூலை மாதமே அறிவித்துவிட்டார். கூட்டணி அமைக்கப்போவது உறுதி. 
 

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?
 

எந்தக் கட்சியோடு கூட்டணி, எத்தனை தொகுதி என்பதெல்லாம் தேர்தல் நெருங்க நெருங்க முடிவாகும். பேச்சுவார்த்தைப் பற்றி இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை.
 

இவ்வாறு பதில் அளித்தார். 


 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்