ADVERTISEMENT

சுயமாக சிந்திக்கிற இடத்தில் அதிமுக இல்லை... முத்தரசன் கடும் தாக்கு

04:54 PM Dec 19, 2019 | rajavel

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இரா.முத்தரசன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

ADVERTISEMENT

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் வாழும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுபற்றி ஏற்கனவே பிரதமர் விளக்கம் அளித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?



எடப்பாடி பழனிசாமி சொல்லும்போதே, அதை நான் சொல்கிறேன் என்று சொல்லவில்லை. ''மோடியும், அமித்ஷாவும் எந்த பாதிப்பும் இருக்காது என்று சொல்கிறார்கள்'' என அவர்கள் சொன்னதை சொல்கிறார். அவர்கள் இருவரும் சொன்னதை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார்.


அந்தக் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், தலைமை செயலகத்தில் இருந்து ஒரு துணை அதிகாரி எங்களுக்கு போன் செய்து ஆதரிக்க வேண்டும் என்று சொன்னார். நாங்கள் ஆதரித்தோம் என்கிறார். எந்த தலைமைச் செயலகம்? தமிழ்நாட்டில் இருக்கும் தலைமைச் செயலகமா? டெல்லியில் இருக்கும் தலைமைச் செயலகமா? என்று தெரியவில்லை. நிர்பந்தப்படுத்தி ஆதரியுங்கள் என்கிறார்கள். இவர்கள் ஆதரிக்கிறார்கள்.


கொள்கை ரீதியாக இது சரியா? தவறா? என்பதைப்பற்றி இவர்களுக்கு கவலையில்லை. பாஜக என்ன சொல்கிறதோ அதனை கேட்கிற இடத்தில் இவர்கள் இருக்கிறார்கள். அதைத்தாண்டி இவர்களால் சுயமாக சிந்தித்து கொள்கை ரீதியாக முடிவு எடுக்கிற இடத்தில் அதிமுக இல்லை. பினாமியாக மாறிவிட்டது.

கேரளாவில் எதிரும் புதிருமாக இருக்கிற காங்கிரசும் இடதுசாரிகளும் இணைந்து போராட்டம் நடத்துகிறார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மூன்று பேரணிகள் நடத்திவிட்டார். புதுச்சேரியில் நாராயணசாமி எதிர்க்கிறார். குறைந்தபட்சம் மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லக்கூட இவர் தயாராக இல்லை. மாறாக இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் விளக்கமாக கூறியுள்ளார்கள் என்பதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கிற நிலையில்தான் ஆளும் அதிமுக அரசு இருக்கிறது.

பல்கலைக்கழகங்களில் போராட்டம் நடத்துகின்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறதே?

ஆயுதங்கள் இல்லாமல் போராடுவதற்கு அரசியலமைப்பு சட்டம் உரிமையை வழங்கியிருக்கிறது. ஜனநாயக வழியில், அமைதி வழியில் எத்தகைய போராட்டத்தையும் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை வழங்கியிருக்கிறது. அந்த அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் போராடுகிறார்கள். ஆனால் மத்திய அரசு அடக்குமுறை மூலமாக தாங்கள் நினைத்ததை நிறைவேற்ற முயலுகிறது. இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை, ராணுவ ஆட்சி நடைபெறுகிறது என்பதை டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட இடங்களில் காவல்துறை எப்படி நடந்து கொண்டது என்பதை தொலைக்காட்சிகளில் பார்த்தாலே தெரியும். அடக்குமுறையை கொண்டு வர நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் மாணவர்கள் மீதான தடியடி.


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடும் திமுகவை கண்டித்து 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?

நல்லது நடத்தட்டும். அப்படி அவர் போராட்டம் நடத்தினால்தான் அவர்களுடைய முகம் என்னவென்று தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள். பாஜகவின் முகம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வருகிறது. ஏற்கனவே அவர்கள் பொதுமக்களிடம் வளர்ச்சி, வளர்ச்சி திட்டம், வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் தருவதாக சொன்னார்கள். அந்த முகத்தை பார்த்துதான் மக்கள் வாக்களித்தார்கள். 20ஆம் தேதி போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். அதன் மூலமாக தாங்கள் யார் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாகத்தான் பயன்படும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT