ADVERTISEMENT

விமர்சனம் வந்தா வரட்டும், தம்பிக்கு பொறுப்பு கொடுப்பதில் தப்பேயில்லை...

11:31 AM Jul 08, 2019 | Anonymous (not verified)

உதயநிதி பராக்.. பராக்..' என்ற தலைப்பில் கடந்த ஜூன்.22-25 தேதியிட்ட நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இப்போது ஜூலை.04—ஆம் தேதி, தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளரான பேராசிரியர் க.அன்பழகன். உதயநிதி இளைஞரணிச் செயலாளரானதற்குப் பின்னணியில் இருந்த பல முன்னணித் தகவல்கள். தமிழகத்தின் அனேக மாவட்டங்களில் உதயநிதி ரசிகர் மன்றம் சார்பாக நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதை வாடிக்கை யாக வைத்திருந்தார் உதயநிதி. கட்சிக்காரர்கள் விரும்பி அழைக்கும் திருமண நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொள்வார், சில நிகழ்ச்சிகளை இவரே தலைமையேற்று நடத்தியிருக்கிறார்.

ADVERTISEMENT



ஆனால் கலைஞர் இருந்த போதே கட்சி அறிவிக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் தோளில் கருப்பு—சிவப்பு துண்டுடனும் கையில் கட்சிக் கொடியுடனும் முன் வரிசையில் நின்று முழக்கமிடுவார். அப்போதெல்லாம் பத்திரிகை பேட்டிகளில், தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டனாக இருக்கத் தான் ஆசைப்படுகிறேன். எந்தப் பதவியையும் எதிர்பார்த்து கட்சிக் கொடியை கைகளில் பிடிக்கவில்லை' எனச் சொல்லி வந்தார் உதயநிதி. தமிழகம் முழுவதும் "நமக்கு நாமே' சுற்றுப்பயணம் முடிந்து திரும்பிய மு.க.ஸ்டாலினும் கூட எனது குடும்பத்தினர் யாரும் கட்சியின் உயர் பொறுப்புகளுக்கு வரமாட்டார்கள் எனக்கூறியிருந்தார்.

ADVERTISEMENT



நடந்து முடிந்த எம்.பி.தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக மக்களை ஈர்த்தவர் உதயநிதிதான். காரணம் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், வேட்பாளர்களாகி விட்டதால், தங்களின் தொகுதியிலேயே கவனம் செலுத்தினர். அதேபோல் ஸ்டார் பேச்சாளர்களான கூட்டணித் தலைவர்கள் சிலரும் வேட்பாளர்களாக களம் இறங்கினர். அதனால் 38 தொகுதிகளிலும் கிராமம் கிராமமாகச் சென்று, மக்களின் பேச்சு மொழியில் பிரச்சாரம் செய்தார். இளம் வாக்காளர்களிடமும் பெண்களிடமும் சினிமா நடிகரான உதயநிதி பேச்சுக்கு கட்சி கடந்த ஈர்ப்பு இருந்தது.



தேர்தல் முடிந்தது, தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கட்சியில் முக்கியப் பொறுப்பு அண்ணனுக்கு(உதயநிதி) கிடைத்தால் இன்னும் கூடு தல் உற்சாகத்துடன் கட்சிப் பணிகளில் இறங்குவார் என உதயநிதி ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள், அன்பில் மகேஷ் மூலம் வலியுறுத்தத் தொடங்கினார்கள். ஸ்டாலின் குடும்பத்து உறுப்பினர்களும் சித்தரஞ்சன் சாலை வீட்டில் இதை ஆலோசிக்கத் தொடங்கினார்கள். கட்சியின் சீனியர்களும் "விமர்சனம் வந்தா வரட்டும், தம்பிக்கு இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு கொடுப்பதில் தப்பேயில்லை' என ஸ்டாலினிடம் வலியுறுத்தினார்கள். ஆனால் ஸ்டாலினோ, உதயநிதிக்கு பொறுப்பு கொடுப்பதற்கு தயங்கினார். அவரிடம், கமல் அரசியலுக்கு வந்து தேர்தல் களத்தில் இறங்கி 4% ஓட்டு வாங்கிட்டாரு. ரஜினி வரப் போறாரு, விஜய் வரப்போறதா பேச்சு ஓடிக்கிட்டிருக்கு. அதனால இப்போது நமது கட்சிக்கு கிடைத்திருக்கும் இளம் வாக்காளர்களை தக்க வைப்பதோடு, புதிய வாக்காளர்களையும் ஈர்ப்பதற்கு உதயநிதி உதவியா இருப்பார். அதனால் அவருக்கு பொறுப்பு கொடுக்கலாம்'' என ஓ.எம்.ஜி. குரூப்பும் வலியுறுத்தியதை அடுத்து, கலைஞர் பிறந்த நாளான ஜூன்.03—ஆம் தேதி, இளைஞரணிச் செயலாளராக உதயநிதி அறிவிக்கப்பட லாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு தோதாக, இளைஞரணிச் செயலாளராக இருந்த வெள்ளக் கோவில் சாமிநாதனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். துர்கா ஸ்டாலி னின் விருப்பப்படி ஜூலை.04—ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் உதயநிதி. இந்த அறிவிப்பு வெளியான போது சட்டமன்றத்தில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கையில் பேசிக் கொண்டிருந்தார் கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின்.


அறிவிப்பு வெளியானதும் கட்சித் தொண்டர்கள் அறிவாலயத்தில் திரண்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். தி.மு.க.வின் மற்ற அணிகளைவிட இளைஞரணிக்குத் தான் கூடுதல் செல்வாக்கு. ஏனெனில் இது கலைஞரின் அறிவுரைப்படி ஸ்டாலினால் மதுரையில் உருவாக்கப்பட்டது. இப்போது அந்த அணியின் மாவட்ட செயலாளர்களாக இருப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர் நடுத்தர வயதைக் கடந்தவர்கள். ஏற் கனவே இருக்கும் மாநில து.செ.க் கள், உதயநிதியுடன் இணைந்து செயலாற்றுவார்கள் என அறிவித் துள்ளார் பேராசிரியர். இப்போது இருக்கும் து.செ.க்கள் அனைவருமே உதயநிதியைவிட சீனியர்கள்.

அ.தி.மு.க.வில் இளைஞர்கள்—இளம் பெண்கள் பாசறை எப்படி உண்மையாய் இளந்தலைமுறையினருடன் வலுவாக உருவாக்கப்பட்டதோ, அதைப் போல் இளைஞரணி து.செ.க்களை உதயநிதி அரவணைத்துச் செல்வாரா, அல்லது தனக்கு ஒத்த வயதுள்ளவர்களை நியமித்து, சட்டமன்றத் தேர்தலின் போது கட்சிக்கு வலுச்சேர்ப்பாரா என்பதுதான் உ.பி.க்களிடம் இப்போதிருக்கும் கேள்வி. பதவி கிடைத் திருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் தோளில் சுமை கூடியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT