ADVERTISEMENT

"எடப்பாடி பழனிசாமி என்ன சுதந்திர போராட்ட தியாகியா... சசிகலாவுக்கு மாவட்டச் செயலாளர்களை நீக்கும் அதிகாரம் கூட இருக்கு.." - புகழேந்தி கொதிப்பு!

12:10 PM Nov 25, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (24.11.2021) சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது. அதில் மூத்த தலைவர்கள் சிலருக்கு இடையே கடும் வாக்குவாதங்கள் எழுந்ததாகவும், முடிவில் தங்களுடைய ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சமாதானப்படுத்தினார்கள் என்ற தகவலும் வெளியானது. மேற்கூறிய தகவல்கள் உண்மையா, கட்சி அலுவலகத்துக்குள் என்ன நடந்தது என்பதை அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தியிடம் கேள்விகளாக நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ராயபேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கியதும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மூத்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவரை முன்னாள் அமைச்சர் தாக்க முயன்றதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த செய்தியின் உண்மைத் தன்மை என்ன, அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற சம்பவம் எதை உணர்த்துகிறது?

அதிமுக தலைமையகம், அம்மா இருந்தவரை கோயிலாக நாங்கள் வழிபட்ட இடங்களில் ஒன்று. அதிமுக கட்சியில் இருக்கும் யாரும் அதை மறுக்க இயலாது. அம்மா இருந்தவரையில் அங்கு நடைபெறும் கூட்டங்கள் எவ்வளவு கட்டுக்கோப்பாக நடைபெற்றது என்பதை நாடறியும். ஆனால் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் என்ன நடந்தது. இருதரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. கட்சியின் மூத்த உறுப்பினர் அன்வர் ராஜாவை சிலர் அவதூறாகப் பேசியதுடன் அவரை வெளியேற வற்புறுத்தியுள்ளனர். இந்த சண்முகம் போன்ற ஆட்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக்கொண்டு மூத்த உறுப்பினர்களை அவமதிக்கிறார்கள். சிறுபான்மை மக்களின் தலைவராக, கட்சியின் மூத்த உறுப்பினராக இருக்கும் ஒருவரை, ‘வெளியே செல்லுங்கள், இல்லை என்றால் அவ்வளவுதான்’ என்று மிரட்டுவதெல்லாம் அம்மா இருந்தால் நடந்திருக்குமா? சிறைச்சாலையில் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கிய இவர் போன்றவர்கள் எல்லாம் அன்வர் ராஜாவிடம் தன் வீரத்தைக் காட்டப் பார்க்கிறார்கள். நீங்கள் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கியபோது அருகில் இருந்து பார்த்தவன் நான். உங்களின் வீரம் எல்லாம் யாரிடம் காட்டுவீர்கள் என்று தெரியும்.

எடப்பாடி பழனிசாமி என்ன சுகந்திர போராட்ட தியாகியா? அவரை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி நடத்திவிட முடியுமா? எடப்பாடி பழனிசாமி என்ன சாதனை படைத்துவிட்டார், உங்களுக்குப் பணம் கொடுத்திருப்பார், காண்ட்ராக்ட் கொடுத்திருப்பார், இதனால் அவருக்கு ஜால்ரா போடுகிறீர்கள். இன்னொரு முக்கிய விஷயம் இருக்கு. இதை நீங்கள் தலைப்பாக வைத்தால் கூட எனக்குப் பிரச்சனை இல்லை. வரப் போகிற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அதிமுகவுக்கு வர இருக்கிற இரண்டு இடங்களை இவர் உள்ளிட்ட 100, 150 பேருக்கு கட்சித் தலைமை தரவிருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. அதனால்தான் இந்த சண்முகம் போன்ற ஆட்கள் எல்லாம் குதிக்கிறது, அராஜகம் பண்ணுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அதிமுக அலுவலகம் உங்கள் அப்பவின் வீட்டு சொத்து அல்ல, அங்கே அராஜகம் பண்ணி எம்ஜிஆரும், அம்மாவும் கட்சியை இந்த நிலைக்கு வளர்க்கவில்லை. உங்கள் ஆட்டத்திற்கெல்லாம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். நீண்ட நாட்களுக்கு அராஜகம் வெற்றிபெறாது. அதிமுக அலுவலகம் ரவுடி ராஜ்ஜியம் நடத்த புரட்சித்தலைவரால் துவங்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி ஒரு தலைவர் இல்லை என்று நிரூபிக்க இது ஒன்றே போதும்.

சசிகலா தொடர்பாக பன்னீர்செல்வம் ஒரு கருத்தை முன்வைக்கிறார், அதற்கு மற்றொரு தரப்பு நேற்றைய கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கட்சியில் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயத்தை எதற்காக பொதுவெளியில் பேசுகிறீர்கள் என்றுதானே அவர்கள் பிரச்சனை செய்கிறார்கள்?

அதற்கு முன்னாள் ஒரு கேள்விக்குப் பதில் சொல்கிறேன், சசிகலாவை அதிமுகவுக்கு வர வேண்டாம், சேர்க்க முடியாது என்று சொல்ல அதிமுகவில் ஒருவருக்கும் தகுதியில்லை. அடுத்து ஒரு முக்கிய விஷயத்துக்கு வருகிறேன். பன்னீர்செல்வம் யாரு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே! எதிர்க்கட்சித் தலைவர் எல்லாம் சட்டமன்றத்தில்தான். முதலில் எடப்பாடி பழனிசாமி அதை ஞாபகம் வைத்திருக்க வேண்டும். வாய் இருக்கிறது என்று பேசினால் போதுமா, யாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பதை தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டாமா? ஓபிஎஸ் அண்ணன் சொல்வதைக் கேளுங்கள், எடப்பாடி பழனிசாமி வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியதுதானே. ஏன் அவர் பிரச்சனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. 2017ஆம் ஆண்டு சசிகலாவை தேர்வு செய்த பொதுக்குழு செல்லுமா இல்லையா என்று, அதில் சசிகலாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் இவர்களால் என்ன செய்ய முடியும்.

இப்போது உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன், சசிகலா நினைத்தால் மாவட்டச் செயலாளரை மாற்றலாம், ஒன்றியச் செயலாளரை மாற்றலாம். அவர்களுக்கு அதிமுகவில் அனைத்து விதமான அதிகாரங்களும் இருக்கிறது. ஆனால் அவர்கள் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கு என்கிற காரணத்தால் சசிகலா அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டுவேன் என்கிறார்கள். ஏற்கனவே கூட்டிய பொதுக்குழு முடிவே நீதிமன்றத்தில் இருக்கின்றபோது இவர்களின் இந்த முடிவு யாரையும் கட்டுப்படுத்தாது. இவர்களுக்குக் கட்சியை நடத்தவும் தெரியவில்லை, சட்டம் என்ன சொல்கிறது என்று புரிந்துகொள்ளும் அறிவும் இல்லை. அவர்கள் கைகளில்தான் அதிமுக சிக்கி சின்னாபின்னமாக உள்ளது. நான் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுகிறேன், மூத்த தலைவர்கள் யார் மீதாவது கைவைத்துப் பாருங்கள், அப்புறம் என்ன நடக்கிறது என்று. ஸ்டாலின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவர்கள் எல்லாம் நிச்சயம் உள்ளே செல்வார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT