ADVERTISEMENT

பிரசாந்த் கிஷோரின் முதல் சாய்ஸ் அதிமுக... திமுக போட்ட கண்டிஷன்... திமுக பாணியில் எடப்பாடியின் புதிய திட்டம்!

01:03 PM Mar 02, 2020 | Anonymous (not verified)

தமிழக சட்டமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் செயல் திட்டத்திற்காக பிரபல தேர்தல் வியூக வல்லுநரான பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்துடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. பாணியில் அ.தி.மு.க.வும் தேர்தல் ப்ராண்டிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ADVERTISEMENT



குறிப்பாக, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் "டெமோஸ் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துடன் அ.தி.மு.க. பேசுவதாகவும், அதற்கு முன்னோட்டமாக, நான்காம் ஆண்டில் பயணிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த நிறுவனம் வாழ்த்து தெரிவித்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்திருக்கிறது அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்.

இதன் பின்னணி குறித்து தேர்தல் வியூக வல்லுநர்கள் தரப்பில் விசாரித்தபோது, "பிரசாந்த் கிஷோரின் "ஐ பேக்' நிறுவனத்தில் கிஷோருக்கு இணையாக இருந்த சுனிலை கவர்ந்து தங்களுக்கு ப்ராண்டிங் செய்யுமாறு அவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். தி.மு.க.வுக் காக 2016 சட்டமன்றத் தேர்தலில் சுனிலும் தேர்தல் வியூக வல்லுநராக செயல்பட்டார். 2011 தேர்தலில் எதிர்க் கட்சி அந்தஸ்தை இழந்திருந்த தி.மு.க., சுனிலின் வியூகத்தில் 2016 தேர்தலில் பலமான எதிர்க்கட்சியாக வெற்றி பெற்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 38 இடங்களை கைப்பற்ற உதவியதும் சுனிலின் யுக்தியே.

இப்படிப்பட்ட சூழலில், 2021 தேர்த லுக்காக ஐ பேக்கின் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தி.மு.க. தலைமை திட்டமிட்டது. ஒரு கட்டத்தில், "பிரசாந்துடன் நீங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்' என சுனிலிடம் தி.மு.க. தலைமை சொல்ல, அதனை மறுத்ததுடன், இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தி.மு.க.விடமிருந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு வெளியேறினார் சுனில். அதேசமயம், ஐ பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது தி.மு.க. தலைமை.

ADVERTISEMENT



இந்த நிலையில்தான் தி.மு.க.வுக்கும் ஐ பேக் நிறுவனத்துக்கும் போட்டியாக அ.தி.மு.க.வை கையிலெடுக்க டெமோஸ் ப்ராஜெக்ட் நிறுவனம் களத்தில் குதித்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருப்பவர்கள் இளைஞர்கள். அவர்களில் பலரும் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக்கில் வேலை பார்த்தவர்கள். குறிப்பாக, பிரசாந்த் கிஷோரை உதறிவிட்டு ஐ பேக்கிலிருந்து வெளியேறி தி.மு.க.வுடன் இணைந்த சுனில், ஒரு கட்டத்தில் ஐ பேக்கில் பணிபுரிந்த தமிழக இளைஞர்கள் 15 பேரை வெளியே கொண்டுவந்தார். அவர்களுக்காக உருவாக்கப் பட்டதுதான் டெமோஸ் ப்ராஜெக்ட் நிறுவனம். தி.மு.க.வுக்காக சுனில் பணிபுரிந்த காலகட்டத்தில், அவரிடம் சப்- காண்ட்ராக்டாக பணிபுரிந்தது டெமோஸ். சுனில் வெளியேறியதையடுத்து, தி.மு.க.வின் கிச்சன் கேபினெட்டை அணுகிய டெமோஸ், தங்களின் நிலை குறித்துப் பேசியிருக்கிறது. ஆனால், அவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால், சுனிலிடமே டெமோஸ் விவாதித்துள்ளது. இந்த நிலையில்தான், அ.தி.மு.க.வை கையிலெடுக்க திட்டமிட்டது டெமோஸ். அதற்காக முதல்வர் எடப்பாடியை சந்திக்க முயற்சித்தனர், மறுத்துவிட்டார் எடப்பாடி'' என சுட்டிக்காட்டுகிறார்கள் தேர்தல் வியூக வல்லுநர்களோடு தொடர்புடையவர்கள்.

அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்க்கில் விசாரித்தபோது, "குறிப்பிட்ட நிறுவனம் கடந்த நவம்பரில்தான் வெளிப்படையாக லான்ச் ஆகியிருக்கிறது. அதில் பணிபுரியும் நபர்களெல்லாம் இளைஞர் கள். மாநில முதல்வர்கள் மற்றும் முதல்வர் வேட்பாளர்களாக அறியப் பட்ட அரசியல் தலைவர்களோடும் அரசியல் கட்சிகளோடும் நேரடியாக பணிபுரிந்த எந்த அனுபவமும் டெமோஸுக்கு இல்லை. மேலும், பிரசாந்த் கிஷோர் அளவுக்கு அனுபவம் வாய்ந்த வியூக வகுப்பாளர்கள் யாரும் அந்த நிறுவனத்தில் இல்லை. தி.மு.க.வை வீழ்த்த சுனிலின் ஏற்பாட்டில்தான் அ.தி.மு.க.வை டெமோஸ் அணுகியதாக எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.


தி.மு.க.வுடன் இணைவதற்கு முன்பு அ.தி.மு.க.வுக்காக வேலை செய்ய பிரசாந்த் கிஷோர் முதலில் அணுகியது எடப்பாடியைத்தான். ஒருமுறை டெல்லி சென்றிருந்த எடப்பாடியை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். அப்போது அவர் முன்வைத்த சில நிபந்தனைகளை எடப்பாடி ஏற்கவில்லை. அதன்பிறகு, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இது குறித்து எடப்பாடி ஆலோசித்தபோது, "இந்த மாதிரி நிறுவனங்கள் நமக்குத் தேவையில்லை' என சொன்னதை ஏற்று, "கார்ப்பரேட் அரசியல் கான்செப்ட்டே அ.தி.மு.க.வுக்கு தேவையில்லை' என முடிவு செய்தனர்.

கொஞ்சகாலமாக அமுங்கிக் கிடந்த இந்தப் பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. ஆனால், டெமோஸ் நிறுவனத்துடன் எடப்பாடியின் சந்திப்போ, அவர்களுடனான ஒப்பந்தமோ எதுவும் இதுவரை நடக்கவில்லை. அதேசமயம் அ.தி.மு.க.வை எப்படியும் இழுத்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான கருத்துக்களை சோசியல் மீடியாக்களில் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். அதற்காக, முதல்வர் எடப்பாடியை வாழ்த்தி தங்களது வாட்ஸ்அப்பில் உலவ விட்டிருக்கிறார்கள்'' என்கிறார்கள் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT