ADVERTISEMENT

உங்க பாச்சா இங்க பலிக்காது... பவார் காட்டிய பவர்... பவரை இழந்த அமித்ஷா, மோடி... 

02:40 PM Nov 27, 2019 | rajavel

ADVERTISEMENT

குஜராத்திலிருந்து வந்த உங்களுக்கே இவ்வளவு என்றால், இந்த மண்ணில் பிறந்த மண்ணின் மைந்தனான எங்களுக்கு எவ்வளவு இருக்கும், இது கோவா இல்ல... எங்கள் மகாராஷ்டிரா... உங்க பாச்சா இங்க பலிக்காதுன்னு அமித்ஷாவிடம் கூறியிருக்கிறது சிவசேனா கூட்டணி.

ADVERTISEMENT

மகாராஷ்டிரா அரசியலில் சரத்பவார் ஆடிய ஆட்டம் கண்டு நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த மாநிலத்தில் சிவசேனா கூட்டணி ஆட்சி எப்படி வந்தது என்ற பின்னணியை பார்ப்போம்.

சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராவதை தடுக்க ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினார் மோடி. இதனால் சிவசேனா கடும் கோபம் அடைந்தது. பாஜகவுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார் என குற்றம் சாட்டியது.

'அப்பாவிடம் (பால் தாக்கரே) நான் சிவசேனா கட்சியை சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவேன் என்று அவர் இறப்பதற்கு முன் உறுதி கொடுத்துள்ளேன், எனவே உயிரே போனாலும் இந்த முறை சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்' என்று பாஜகவுக்கு எதிராக உத்தேவ் தாக்கரே கொந்தளித்தாராம்.

மூத்த அரசியல்வாதிகள், சட்ட வல்லுநர்களிடம் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது. மீறி கோரினால் அதை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் கவர்னருக்கு கிடையாது. மோடி நினைத்தால் மட்டுமே ஜனாதிபதி ஆட்சியை எடுக்க முடியும். அதனால் ஜனாதிபதி ஆட்சியை விலக்க வைக்க என்ன செய்வது? என்று பாருங்கள், அதனைப் பற்றி ஆலோசனை நடத்துங்கள் என்றும், சரத்பவாரிடம் சில விஷயங்களை பேசுங்கள் என சில ஐடியாக்களையும் கூறியுள்ளனர்.


இதையடுத்து உத்தவ் தாக்கரே, சரத்பவாரை சந்தித்து பேசியுள்ளார். பாஜகவுக்கு மிகப்பெரிய அடி கொடுக்கணும். அது உங்களால்தான் முடியும் என்று கூறியுள்ளார். நாங்கள் சொல்வதை நீங்கள் செயல்படுத்துங்கள். உங்களுக்கான இமேஜ் மகாராஷ்டிரா மட்டுமல்ல இந்தியா முழுவதும் உயரும். அதற்கு முன்பு எங்கள் கட்சி எம்எல்ஏக்களை நாங்கள் பத்திரப்படுத்தியுள்ளோம். அதேபோல் உங்கள் கட்சி எம்எல்ஏக்களையும், காங்கிரஸ் எம்எல்ஏக்களையும் பத்திரப்படுத்துங்கள். எந்த வகையிலும் ஒரு எம்எல்ஏ கூட எதிரணிக்கு போகக்கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும் சரத்பவாரிடம் பேசிய உத்தவ் தாக்கரே, எங்களை வேண்டாம் என்று பாஜக எப்போது முடிவு எடுத்ததோ, அதிலிருந்து உங்களிடம் பாஜக பேசிக்கொண்டிருக்கிறது. அஜித்பவாரிடம் பாஜக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறது. இதனை பயன்படுத்த வேண்டும். நீங்க மோடியை சந்திக்கிற வாய்ப்பு இருந்தால், அஜித்பவாரை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள் என்று சரத்பவாரிடம் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அதன்படி செய்தார் சரத்பவார்.

அஜித்பவாரை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சரத்பவார் சொன்னதை உண்மை என்று நம்பிய பாஜக, அஜித்பவாரை வைத்து ஆட்டம் ஆடியது. தங்கள் கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு என அஜித்பவார் கொடுத்த கடிதத்தை வாங்கிய பாஜக, அதனை ஆளுநரிடம் கொடுத்தது. இதையடுத்து ஜனாதிபதி ரூல் விலக்கப்பட்டு, முதலமைச்சரானார் தேவேந்திர பட்னாவிஸ். துணை முதலமைச்சரானார் அஜித்பவார். அதோடு மட்டுமல்ல அஜித்பவார் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. நவம்பர் 30ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிருபிக்க சொன்னார் ஆளுநர்.


சரத்பவார் சொல்லித்தான் அஜித்பவார் பாஜகவுடன் சென்று பதவியேற்றுள்ளார் என்று அனைவரும் சொல்லி வந்த நிலையில், அதனை மறுத்தார் சரத்பவார். அஜித்பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 53 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். விரைவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்றார் சரத்பவார்.

இதையடுத்து சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.என் பின்னால் எந்த எம்எல்ஏவும் இல்லை என்று அஜித்பவார் தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்.


தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்று யாரோ ஒருவர் சொல்லவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர், அக்கட்சியின் மூத்த தலைவர், ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் உறவினர் அஜித்பவார். அவர் சொல்லும்போது நிராகரிக்க முடியுமா? நம்பித்தானே ஆக வேண்டும். அவர் சொன்னதை நம்பிதான் பாஜக ஆட்சி அமைக்க முன்வந்தது என்றார் தேவேந்திர பட்னாவிஸ்.

பட்னாவிஸ் பதவி விலகியதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 28ஆம் தேதி மாலை 6.40-மணிக்கு சிவாஜி பார்க்கில் நடைபெறும் பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் மராட்டிய முதல் மந்திரியாக உத்தவ் தாக்ரே பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழா நடைபெறும் சிவாஜி பார்க்கில்தான் சிவசேனா கட்சியின் நிறுவனர் பால்தாக்கரேயின் நினைவிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தாக்ரே குடும்பத்தில் இருந்து முதல் மந்திரியாக பதவியேற்கும் முதல் நபர் உத்தவ் தாக்ரேதான்.


முதல்வராக தேர்வு செய்யப்பட்ட உத்தவ்தாக்கரே, நான் இந்த தருணத்தில் சோனியா காந்திக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 30 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தவர்கள் எங்களை நம்பவில்லை. ஆனால் நாங்கள் 30 ஆண்டுகளாக யாருக்கு எதிராக போராடினோமோ அவர்கள் என்னை நம்புகிறார்கள். நான் பதவியேற்ற பின்னர் முதலமைச்சராக பிரதமர் மோடியை சந்திப்பேன் என்றார்.

எல்லாக் கட்சியினரும் சந்தர்ப்பவாத அரசியல்தான் செய்கின்றன. ஆனால் அமித்ஷாவின் அரசியல் வித்தியாசமானது. தங்களது சந்தர்ப்பாத அரசியலுக்காக அதிகாரத்தை பயன்படுத்தி எல்லா விதமான சித்து விளையாட்டுக்களையும் செய்கிறார். குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதற்காக பெரும்பான்மை இல்லாத கட்சிகளுக்கு பெரும்பான்மையை நிருபிக்க 15 நாள் அவகாசம் அளிப்பது, அதனை நீதிமன்றம் தலையிட்டு திருத்தி எழுவது போன்றவை தொடர்கதையாகி வந்தாலும் அமித்ஷா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை.

மூன்று கட்சிகளில் இருந்து எப்படியும் அதிருப்தி எம்எல்ஏக்கள் முளைப்பார்கள். அவர்கள் எப்படியும் விவசாயிகள் நலன் என்ற பெயரில் மோடி, அமித்சாவை சந்திப்பார்கள். அவர்களுக்காக அந்த மாநிலத்தில் சொகுசு விடுதிகள் தயாராக இருக்கும். பின்னர் அதிருப்தி எம்எல்ஏக்களை வைத்து சட்டமன்றத்தை முடக்குவார்கள். ஏதோ ஒரு விதத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT