ADVERTISEMENT

பொள்ளாச்சி கொடூரம்! வி.ஐ.பி.யையும் குற்றவாளிகளையும் தப்ப வைக்க முயற்சி!

04:03 PM Jul 23, 2021 | rajavel

ADVERTISEMENT

பொள்ளாச்சி காமக்கொடூர வழக்கில் ஆரம்பத்திலேயே அதை மறைக்கும் வேலைகள் தொடங்கி விட்டன. அதனால்தான் அந்த வழக்கில் பொள்ளாச்சி வி.ஐ.பி. மகன் சிக்கவில்லை என அ.தி.மு.க. வட்டாரங்களில் இருந்தே செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

பொள்ளாச்சி வி.ஐ.பி. போலவே செல்வாக்கு மிக்கவரும் மக்கள் நீதி மையத்தில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவருமான மகேந்திரன் அதே சமூகத்தவர். பொள்ளாச்சி விவகாரத்தில் வி.ஐ.பி.க்கு எதிராக போராட்டம் நடத்தியவரும், நக்கீரன் வெளிச்சமிட்ட வீடியோவில், காமுகர்களின் பெல்ட் அடிதாங்காமல் கதறும் பெண்ணை அடையாளம் கண்டவருமான ம.நீ.ம.வின் மூகாம்பிகாவை வேட்பாளராக்க விடாமல் செய்தவர் மகேந்திரன்தான் எனக் கட்சிக்குள் முணுமுணுப்பு உண்டு.

சி.பி.ஐ. விசாரணையில் உள்ள பொள்ளாச்சி விவகாரத்தில் வி.ஐ.பி.க்கு ஆதரவாக மகேந்திரன் உள்ளிட்டவர்கள் களமிறங்குவார்களோ என்ற கவலை பலருக்கும் உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய வெங்கடேஷ் என்ற அ.தி.மு.க. பிரமுகர் இப்போது தெம்பாக இருக்கிறார் என்று சொந்தக் கட்சிக்காரர்களே நம்மிடம் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் முதலில் புகார் கொடுத்த பெண்ணின் பெயரை, விதிகளுக்குப் புறம்பாக போலீஸ் வெளியிட்டது. குற்றவாளிகளான சபரிராஜனும், திருநாவுக்கரசும் போலீசில் சிக்குவதற்கு முன்பே அவர்களைப் பிடித்து ஒரு பங்களாவில் வைத்து உதைத்து அவர்கள் கையில் இருந்த வீடியோக்களை கைப்பற்றியது ஒரு டீம். புகார் கொடுத்த பெண்ணின் அண்ணன் டீம் அது எனச் சொல்லப்பட்டது. அந்த வீடியோக்களுடன், குற்றவாளிகளை இவர்கள் உதைக்கும் வீடியோவும் வெளியானதுதான், பொள்ளாச்சி விவகாரத்தின் திருப்புமுனை.

உண்மையில் குற்றவாளிகளை அடித்து உதைத்தது பொள்ளாச்சி வி.ஐ.பி.யின் ஆட்கள். அந்த வீடியோ வெளியானதால், வி.ஐ.பி. உஷாராகி விட்டார். முதலில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரின் வாயை அந்த வி.ஐ.பி. மூடிவிட்டார். அடுத்தகட்டமாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் அ.தி.மு.க. மாணவரணி செயலாளரான அருளானந்தம் ஹெரேன்பால், பைக் பாபு, ஆகியோரும் எதுவும் பேசவில்லை. ஆனால் உண்மையான ‘ட்விஸ்ட்டே’ பொள்ளாச்சி வெங்கடேசிடம்தான் இருக்கிறது. இவர்தான் அந்தப் பெண்ணின் சார்பில் குற்றவாளிகளை அடித்து உதைத்த வீடியோவில் இருக்கும் நபர்.

கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தம், பொள்ளாச்சி வி.ஐ.பிக்கு நெருக்கமான ஜேம்ஸ்ராஜா, கிருஷ்ணகுமார் ஆகியோரின் நிழலாக இருப்பவர். இந்த காமக் கொடூரத்துக்கும் வி.ஐ.பி.யின் மகனுக்கும் பாலமாக இருந்தவர். இதில் ஜேம்ஸ்ராஜா, அருளானந்ததுக்கு கார் கொடுத்து உதவியவர் என சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டு இருக்கிறார்.

குற்றவாளிகளிடம் இருந்த வி.ஐ.பி. மகன் தொடர்பான வீடியோக்களைக் கைப்பற்றி வி.ஐ.பிக்கு கொடுத்தவர் வெங்கடேஷ். தி.மு.க ஆட்சி வந்ததும் தலைமறைவாகி விட்டார். மாட்டியவர்களை குற்றவாளியாக்கி விட்டு, அவர்கள் அடித்து உதைத்த வீடியோ வெளியானதினால், அந்தப் பெண்ணை வைத்து புகார் கொடுக்கவைத்து தனது மகனை தப்பிக்க வைத்து விட்டார் பொள்ளாச்சி வி.ஐ.பி. என்கிறார்கள் உண்மை நிலவரம் அறிந்தவர்கள்.

புகார் கொடுத்த பெண் தரப்பிலிருந்து இன்றுவரை வழக்கு விசாரணைக்கான ஒத்துழைப்பு சரியாக இல்லை. மழுப்பலாகவே பதில் சொல்கிறார்கள். இந்த மர்மங்களை உடைக்கவேண்டிய சி.பி.ஐ., இதுவரை இந்த வழக்கின் இறுதிக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. பொள்ளாச்சியில் நடந்த காமக்கொடூரத்தின் ஒரு பகுதிதான் சி.பி.ஐ. விசாரணைக்கு போயிருக்கிறது. இன்னமும் வெளிவராத பல பகுதிகள் இருக்கின்றன. அவற்றில் பொள்ளாச்சி வி.ஐ.பி.மகன் சம்பந்தப்பட்ட பல கொடுமையான கதைகள் இருக்கின்றது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிப் படி, தி.மு.க. அரசு இவற்றை வெளிக்கொண்டுவரும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். வி.ஐ.பி. குற்றவாளிகள் சிக்குவார்களா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT