ADVERTISEMENT

''எங்களை எங்களது போக்கில் விட்டால்...'' - பொள்ளாச்சி பாலியல் கொடூரம்! அடுத்தடுத்து சிக்கும் அ.தி.மு.க தலைகள்! 

12:50 PM Jan 12, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இப்பொழுது கைது செய்யப்பட்ட அருளானந்தம், ஹெரான்பால், பாபு ஆகியோரை கைது செய்வதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சி.பி.ஐ. முடிவெடுத்துவிட்டது. இதில் அருளானந்தம் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்து கைதானதும் கட்டம் கட்டப்பட்டிருப்பவர்.


மூவருக்கும் எதிரான ஆதாரங்களை சி.பி.ஐ பல மாதங்களுக்கு முன்பே திரட்டிய நிலையில், "அ.தி.மு.க. நிர்வாகி மீது இப்பொழுது கை வைக்க வேண்டாம், தேர்தல் நேரத்தில் அதற்கான உத்தரவு வரும் என மத்திய உள்துறை தெரிவித்துவிட்டதால், இத்தனை மாதங்கள் காத்திருந்து ஜனவரி முதல் வாரத்தில் இந்தக் கைது நடவடிக்கையை சி.பி.ஐ. மேற்கொண்டுள்ளது'' என்கிறார்கள் இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள்.

"இந்த விவரம் முதல்வர் எடப்பாடிக்கும் தெரியும். இது தொடர்பாக பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யைக் கூப்பிட்டு, எடப்பாடி விசாரித்துள்ளார். அப்பொழுது, "நான் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வேன்'' என எடப்பாடியிடம், அவர் மிரட்டியிருக்கிறார். அதனால் "அந்த பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யை பொள்ளாச்சி கட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்க வைக்கக்கூடாது என அவரை திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளராக இடம் மாற்றினார் எடப்பாடி" என்கிறார்கள் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க.வினர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய சி.பி.ஐ. அதிகாரிகள், சில அதிர்ச்சிகரமான தகவல்களைக் கூறினார்கள். "கைது செய்யப்பட்ட அருளானந்தம், பொள்ளாச்சி நகரில் உள்ள மூன்று மதுக்கடைகளில் பார் நடத்தி வருகிறார். பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் இரண்டாவது மனைவியின் மகன், மற்றும் ஏற்கனவே பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸாரால் விடுவிக்கப்பட்ட பார் நாகராஜ் மற்றும் பாபு, ஹெரான்பால் ஆகியோர் ஒரு டீமாகவே கார்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் சுற்றித் திரிந்து பெண்களை வேட்டையாடுவதை தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

இந்த அணியின் மொத்த எண்ணிக்கை 20. இதுவரை இவர்களோடு சேர்த்து எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதில் பார் நாகராஜ்தான் முக்கியமானவன். இந்த பார் நாகராஜும் பார் அருளானந்தமும் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். வேலுமணி, பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. இருவரும் கேட்டுக்கொண்டதால்தான் பார் நாகராஜின் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி வருகைதந்தார்.

பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கு மிக நெருக்கமான முன்னாள் பொள்ளாச்சி நகராட்சித் தலைவரும், தற்போதைய அ.தி.மு.க. நகரச் செயலாளருமான கிருஷ்ணகுமார், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரான ஜேம்ஸ்ராஜா, பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் உதவியாளரும் அவரது இரண்டாவது மனைவிக்கு நெருக்கமானவருமான வீராசாமி ஆகியோருடன் இணைந்து இந்த வேட்டையை பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் மகன் நடத்தியுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு பெண்ணை ஓடும் காரில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றபோது, அந்தப் பெண் காரிலிருந்து தலைகீழாகக் குதித்து விபத்துக்குள்ளானார். அதில் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி., தனது இரண்டாவது மகனை காப்பாற்றினார்.


அதேபோல் வீராசாமி மீது ஏகப்பட்ட பாலியல் புகார்கள் எழவே… அவரை ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கினார். அதன்பிறகு ஓ.பி.எஸ். ஆதரவுடன் ஜெயலலிதாவை ஏமாற்றி கும்பலோடு கும்பலாக அ.தி.மு.க.வில் இணையவைத்தார் அந்த பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. இந்த வீராசாமி, கிருஷ்ணகுமார், ஜேம்ஸ்ராஜா ஆகியோர் சி.பி.ஐ. யின் விசாரணைப் பட்டியலில் இருக்கிறார்கள்.

பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. மீது பல பாலியல் புகார்கள் ஏற்கனவே வந்தது. அதையெல்லாம் சமாளிக்க உறுதுணையாக இருந்தவர் இந்த வீராசாமி. இவரை சி.பி.ஐ. கைதுசெய்து கஸ்டடியில் எடுத்து விசாரிக்கத் தயாராகி வருகிறது'' என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.

‘இந்த வழக்கில் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கு நெருக்கமானவர்களும் அவரது இரண்டாவது மகன் மற்றும் அமைச்சர் வேலுமணி ஆகியோருடன் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யும் முதல் குற்றவாளியாக சிக்குகிறார்’ என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

ஆக… சி.பி.ஐ. இப்பொழுதுதான் பாயத் தொடங்கியிருக்கிறது. "எங்களை எங்களது போக்கில் விட்டால் உண்மையில் பொள்ளாச்சி காமக்கொடூர விவகாரத்தில் என்ன நடந்தது என நாங்கள் வெளியே கொண்டுவருவோம்'' என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.



இதற்கிடையே அருளானந்தம் கைது, அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "தேர்தல் நேரத்தில் பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி. போன்றவர்களை கைது செய்தால் அது பெரும் பின்னடைவாக அமையும்" என அ.தி.மு.க. சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால், சி.பி.ஐ. தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள பொள்ளாச்சி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுவதாக இல்லை.

இதுநாள் வரை அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பயந்திருந்த பல இளம் பெண்கள் இப்பொழுது சி.பி.ஐ. வசம் சாட்சியங்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். "இந்த வழக்கு நேர்மையாக நடந்தால் பலர் சிக்குவார்கள். பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் இரண்டாவது மகன் தலைமையில் இயங்கிய இந்த காமக்கொடூரக் கும்பலில் இன்னும் 12 பேர் கைதாகவிருக்கிறார்கள். இதுதவிர கிருஷ்ணகுமார், ஜேம்ஸ்ராஜா, வீராசாமி, பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி., பொள்ளாச்சி அ.தி.மு.க. வி.ஐ.பி.யின் இரண்டாவது மகன் மற்றும் அமைச்சர் வேலுமணி என நடவடிக்கை பாயும்'' என்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT