ADVERTISEMENT

’காமத்துப்பாலும் ஹைக்கூவும்’ -பெண்ணியம் செல்வகுமாரியின் நூல் வெளியீடு!

10:12 AM Aug 10, 2020 | rajavel

ADVERTISEMENT

புதுவை மாநிலக் கவிஞரான முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி எழுதிய ‘காமத்துப்பாலும் ஹைக்கூவும்’ என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா, கரோனா நெருக்கடிக்கு நடுவிலும் கடந்த 7-ந் தேதி மாலை இணைய விழாவாக அரங்கேறியது.

ADVERTISEMENT

இந்த நூல், வள்ளுவரின் இன்பத்துப்பாலில் உள்ள குறட்பாக்களின் ஹைக்கூ வடிவமாகும். திருக்குறளின் சுவையாக இன்பத்துப்பால் வரிகளை, கொஞ்சமும் சுவை குன்றாதவாறு, அப்படியே இனிமை மிக்க ஹைக்கூ கவிதைகளாகப் படைத்திருக்கிறார் பெண்ணியம் செல்வகுமாரி.

சர்வதேச அளவில் நடந்த இந்த வெளியீட்டு விழாவிற்கு முனைவர் பாட்டழகன் தலைமை ஏற்க, புதுவை பேராசிரியர் இர.பிரபா நிகழ்ச்சியை பெருமிதக் குரலில் தொகுத்து வழங்கினார்.

நூலை இலக்கியத் தம்பதிகளான கவிஞர் ஆரூர் தமிழ்நாடனும் அமுதா தமிழ்நாடனும் சேர்ந்து வெளியிட, அதை இளம் தம்பதியரான குணசேகரனும் பிரியங்காவும் பெற்றுக்கொண்டனர். இவர்கள் அண்மையில் திருமணமான வங்கி ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகி ரோஜாவின் அழகிய தமிழ்ப் பாடலுடன் நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கியது. வாழ்த்துரை வழங்கிய ஆரூர் தமிழ்நாடன், “உலகின் தலை சிறந்த காதலன் வள்ளுவன் தான். அவனுக்கு நிகராக காதலின் மெல்லுணர்வில் திளைத்த புலவர்கள் எவரும் இல்லை. அவனது இன்பத்துப்பாலை பெண் படைப்பாளர்கள் கையில் எடுத்திருப்பது சிறப்பானதாகும். வள்ளுவனின் குறட்பாக்கள் சொல்வதையும் தாண்டி, அவை உணர்த்த வேண்டியவற்றையும், தனது ஹைக்கூக்களில் சுவை கூட்டிச் சொல்லியிருக்கிறார் செல்வகுமாரி. ஔவையார், ஆண்டாள், நாச்சியார் வழியில் கட்டுடைக்கும் இதுபோன்ற நூல்கள்தான் இன்றைய தேவை.” என்றார்.

கனடா டொரோண்டா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த திருமதி உமை.பற்குணராசன் (கவிஞர் வசந்தி), “ வள்ளுவனின் தமிழும் சிந்தனையும் செல்வகுமாரியின் ஹைக்கூவில் இனிக்கிறது. அது உளவியல் மருத்துவத்தையும் இதமாக செய்கிறது” என்று பாராட்டினார். செம்மலர் துணை ஆசிரியர் சோழ.நாகராசனும் “இது போன்ற படைப்புகள் பெருகவேண்டும். பெண்களின் அகக்குரல்கள் இன்னும் இன்னும் உரக்க எழவேண்டும்” என்று வாழ்த்தினார்.

திருக்குறள் அறிவியல் நிறுவனம் டாக்டர் தங்கமணி “அறத்துப்பாலையும், பொருட்பாலையும் தூக்கிக்கொண்டாடுவோர் இன்பத்துபாலைக் கண்டு தயங்குகிறார்கள். உள்ளத்தைப் பண்படுத்தும் இன்பத்துப்பாலை மாணவர்களுக்குப் பாடமாக வைக்கின்ற நிலைவேண்டும்.” என தன் வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

இலங்கை கவிஞர் நசீரா எஸ்.ஆப்தீனின் அழகான வாழ்த்துரைக்கு நடுவில், பாராட்டுரை வழங்க வந்த, புதுவைத் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் கவிஞர் மு.பாலசுப்பிரமணியன் “நூலாசிரியர் செல்வகுமாரி உயர்ந்த சிந்தனையாளர், தீவிரமாக படிப்பவர். நெய்தல் நிலக் கடற்கரையிலேயே வாழ்கிறவர். கடலின் தாலாட்டை அன்றாடம் ரசிக்கிறவர். அதனால் அழகியல் ததும்ப இந்த நூலைப் படைத்திருக்கிறார். வள்ளுவனின் சிந்தனைகளை அழகாக ஹைக்கூவில் அள்ளித்தந்திருக்கிறார். அவை எல்லா வகையிலும் மேம்பட்ட நிலையில் அமைந்திருக்கின்றன” என்று பெருமிதமாய் வாழ்த்தினார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து வெளிவரும் தமிழ்ச்சாரல் இதழின் ஆசிரியர் காங்கோ இராசகுரு கார்பாலன் “திருக்குறளின் வெளிச்சம் உலகமெங்கும் பரவிவருகிறது. அதை செல்வகுமாரியின் நூல் எதிரொளிக்கிறது” என்று பாராட்ட, பாவலர் சிங்கப்பூர் கிருஷ்ணமூர்த்தி ”செல்வகுமாரியின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. எனினும், காமம் கட்டுக்குள் வைக்கப்படவேண்டிய ஒன்று” என்று குறிப்பிட்டார்.

இவர்களின் வாழ்த்துரைக்கு முன்பாக பேசிய, அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர் ’தேன்மதுரத் தமிழ்’ கிரேஸ் “இன்றைய சமூகம் காதலையும், காமத்தையும் புரிந்துகொள்ளவில்லை. அதனால் அது தனது வாழ்க்கையைச் சிக்கலாக்கி கொண்டிருக்கிறது. எனவே, வள்ளுவனின் இன்பத்துப்பால் இந்த சமூகத்துக்கு தேவை. அதை உணர்ந்து நூலாசிரியர் இந்த நூலைப் படைத்திருக்கிறார்” என்று புகழுரை வழங்கினார். உரையாற்றிய பலரும், திருக்குறளையும் அதற்கு இயைபாக செல்வகுமாரி எழுதிய ஹைக்கூவையும் ஒப்பிட்டுக் காட்டி, மகிழ்ந்தனர்.

நிறைவாக நூலாசிரியர் பெண்ணியம் செல்வகுமாரி ஏற்புரை நிகழ்த்தினார். அப்போது அவர், “இன்று பாலியல் சிக்கல்களும், அதனால் குற்றச்செயல்களும் பெருகி வருகின்றன. இப்படிப்பட்ட சமூகத்துக்கு பாலியல் தெளிவு வேண்டும். இந்த சாமூகம் காதலின் மென்மையை உணரவேண்டும். இந்த எண்ணத்தில்தான் இந்த நூலைப் படைத்தேன்” என்றார் நெகிழ்வோடு. நிகழ்ச்சியை முனைவர் பாட்டழகனும், பிரான்ஸ் ’தமிழ்நெஞ்சம்’ அமீனும் சிறப்புற ஒருங்கிணைத்திருந்தனர்.

முனைவர் அனிதா பரமசிவம் நன்றியுரை வழங்கினார். திருக்குறளின் அகச்சிந்தனைகளை எதிரொளிக்கும் வகையில் அமைந்திருக்கும் ’காமத்துபாலும் ஹைக்கூவும்’ நூல், தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படவேண்டிய படைப்பாகும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT