Skip to main content

நாடிஜோதிடம் பார்த்த பகுத்தறிவுக் கவிஞர்! 

 

உவமைக்கவிஞர் சுரதா, தமிழ் இலக்கியத்தில் தனித்தடம் படைத்தவர்.
 

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம் என்பதால், அவர் மீது கொண்ட காதலால், சுப்புரத்தினதாசன் என்று புனைபெயர்  சூட்டிக் கொண்டார்.  ஆரம்பத்தில் சு.ர.தா.  என்று சுருக்கமாகக் கையெழுத்துப் போட்டு வந்தவர்,  காலப்போக்கில் அந்தப் பெயருக்கிடையில் இருந்த புள்ளிகளை விட்டுவிட்டு, சுரதாவாய் ஆகிவிட்டார்.
 

எதையும் புதுமையாகப் பார்க்கும் பார்வை இவருக்குரியது. அதனால், மரபுக் கவிதையில் புதுக்கவிதையின் நுட்பத்தைக் கையாண்டு எழுதினார்.  அதனால் இவரது கவிதைகள் தனிச்சுவையோடு திகழ்ந்தன.

 

suratha


 

’மங்கையர்க்கரசி’ உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களுக்கு புதிய நடையில் வசனம் எழுதினார். ’உன் கை பட்டால் விஷம் கூடச் செத்துவிடும்’ என்பது சுரதா எழுதிய ஒரு ’சுருக்’ வசனம்.  ’அமுதும் தேனும் எதற்கு...’, ’ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ உள்ளிட்ட  100-க்கும் மேற்பட்ட கலத்தால் அழியாத பாடல்களையும் எழுதி பாமர மக்கள் மத்தியிலும் புகழ்பெற்றார்.
 

தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சாவின் முத்தம், எச்சில் இரவுகள் என ஏராளமான நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.

அண்ணா, கலைஞர், எம்ஜி.ஆர் ஆகிய மூன்று முதல்வர்களின் இதயத்தைத் தொட்ட கவிஞர் என்றும் சுரதாவைச் சொல்லலாம். இவர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவர் சுரதா. கலைஞரின் இளைமைக் கால நண்பராகவும் அவர் இருந்தார். சுரதாவின் தலைமையில்தான் கலைஞர் தயாளு அம்மாளைத் திருவாரூரில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தன் நண்பரான சுரதாவை முரசொலியில் தொடர்ந்து கவிதை எழுதச்செய்தார் கலைஞர். அது அவருக்கு ’உவமைக் கவிஞர்’ என்ற புகழ்ச் சிறகைத் தந்தது. அதனால்...
 

’எனது கவிதைகள் இந்த அளவிற்கு
பரவுவ தற்குப் பழைய நண்பர்
கருணா நிதியே காரண மாவார்
அதற்கு எனது ஆயிரம் நன்றி’- என்று அகவல் கவிதையாலே கலைஞருக்கு நன்றி சொன்னார் சுரதா.
 

*
அரங்கங்களிலும் கோயில் மண்டபங்களிலும்தான் பொதுவாக கவியரங்கங்கள் நடக்கும். சுரதாவோ, தெப்பக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், மாட்டு வண்டிக் கவியரங்கம், ரயில் கவியரங்கம் என்று தொடங்கி விமானக் கவியரங்கம் வரை நடத்தி புதுமை செய்தார். அவர் மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காதவர். இவருக்கு அமைச்சர்களும் ஒன்றுதான் கூலித்தொழிலாளியும் ஒன்றுதான். இருவரிடமும் ஒரே மாதிரியாகத்தான் பழகுவார். இளம் படைப்பாளர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவர்தான்.  அதேபோல், யாராக இருந்தாலும் முகத்திற்கு நேராகக் கடுமையாக விமர்சிக்கும் போக்கும் இவரிடம் உண்டு. பகுத்தறிவுக் கொள்கையில் உறுதியானர் சுரதா.
 

எதற்கிந்த வீண்கதைகள்?-இனி எதற்கிந்த வைதீகம்?’ --என்ற அதிரடிக் குரல் சுரதாவினுடையது.
 

’சாதிமதம் பிரித்தாளும் தந்திரங்க ளாகும்!
சாத்திரமும் கோத்திரமும் தடைக்கற்க ளாகும்’-என மடமையின் தலை மீது அடித்தவர் சம்மட்டியால் அடித்தவர் அவர்.
 

*
எதையும் சோதித்துப் பார்த்தே முடிவெடுக்கும் சுரதா, ஒருமுறை சீர்காழி அருகே இருக்கும் வைத்தீஸ்வரன்கோயிலுக்குப் போய்  அங்கிருக்கும் ஒரு புகழ்பெற்ற நாடிஜோதிடரிடம் சென்று ஓலைச்சுவடி பார்த்தார்..


அப்போது ஜோதிடர், இன்னும் ஒரு மாதத்தில் உங்களுக்கு மிகப் பெரிய விருது ஒன்று கிடைக்கப் போகிறது என்று சொல்லி அனுப்பினார். அதேபோல் அடுத்த ஒரு வாரத்திற்குள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், ஒரு லட்ச ரூபாயுடன் கூடிய ராஜராஜன் விருதை சுரதாவுக்கு அறிவித்தது.
உங்களுக்குச் சொல்லப்பட்ட ஜோதிடம் பலித்துவிட்டதே என்று சுரதாவிடம் உற்சாகமாகச் சொன்னபோது, அவர் சொன்னார், ’காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்திருக்கிறது. அவ்வள்வுதான்...’.
 

-இதுதான் பகுத்தறிவில் ஊறிப்போன சுரதா.