ADVERTISEMENT

"எஸ்.பி.பிக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள்!" - பகிராததை பகிரும் கவிப்பேரரசு வைரமுத்து 

10:18 AM Oct 08, 2020 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

"என்னைப் பாடாய்ப் படுத்திய எஸ்.பி.பி.!” - கவிப்பேரரசு வைரமுத்து பகிரும் நினைவுகள்

ADVERTISEMENT

கடந்த கட்டுரையில் கவிப்பேரரசு பகிர்ந்த நினைவுகளின் தொடர்ச்சியாக எஸ்.பி.பியுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்கிறார்...

"ஒலிப்பதிவு அறைக்குள் அவரும் நானும் அமர்ந்து கொள்வோம். நான் பாடலைச் சொல்லச் சொல்ல, அவர் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, மடியில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு, தனது தாய்மொழியான தெலுங்கில் எழுதிக்கொள்வார். தாய்மொழியின் மீது அவர் வைத்திருந்த மதிப்பின் அடையாளம் அது. நான் மூன்று பக்கத்திற்கு எழுதிவைத்துச் சொல்வதை அவர் ஒரே பக்கத்தில் எழுதிக்கொள்வார். அப்படித்தான் நான் என் முதல் பாடலையும் அவரிடம் சொன்னேன். அப்போது, 'வானம் எனக்கொரு போதிமரம்' என்ற என் வரியைக் கேட்டதும், என்னை நிமிர்ந்து பார்த்துச் சிரித்து ரசித்தார். "வாட் எ பியூட்டிஃபுல் லைன்'’ என்றார். அந்தப் பாடலுக்கான மூன்றாம் பல்லவியாக...

'இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனையே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்’

- என்று எழுதியிருந்தேன். ஆனால், பாட்டுக்கு நேரமில்லை என்பதால் மூன்றாம் சரணம் ஒலிப்பதிவாகவில்லை. எனினும், அந்தச் சரணத்தை ஆஹா போட்டு வெகுவாக ரசித்த எஸ்.பி.பி., மேடைகளில் பாடும் போதெல்லாம் அந்த மூன்றாவது சரணத்தையும் பாடிவிட்டுத்தான் நிம்மதியடைவார். அது அந்தக் கலைஞனின் அதீத ரசனைக்கு அடையாளம்.

எஸ்.பி.பி முதலில் நல்ல ரசிகர். பண்பாளர். சொல்லும் சொற்களில் கனியிருக்கக் காய் கவராதவர். இன்சொல்லில் மட்டுமே உரையாடக் கூடியவர். என் வளர்ச்சியில் அவர் குரலுக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்பதை நக்கீரன் மூலமாக உலகத் தமிழர்களுக்கு நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

பதினாறு இந்திய மொழிகளில் பாடிய உலகச் சாதனையாளர் எஸ்.பி.பி. அதனால், பாடல் பதிவு தொடங்குவதற்கு முன்பு, நேரம் கொஞ்சம் கிடைத்தாலும் பிறமொழிகளில் அவர் பாடிய - ரசித்த சமகாலப் பாடல்களின் உயரம் எப்படி என்பதை அவருடன் உரையாடித் தெரிந்துகொள்வேன். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஏனைய மொழிகளில் பாடிக்கொண்டிருந்த அவர், அவ்வாறு பாடிய பாடல்களின் கற்பனை நயத்தை என்னிடம் ரசனையோடு விவரிப்பார். அதன்மூலம், என் உயரத்தை நானே சரி பார்த்துக் கொள்வேன். அப்படி ஒருமுறை அவர் சொன்ன ஒரு இந்திப் பாடலின் பல்லவி என்னை வியக்க வைத்தது. காதல் தோல்வியடைந்த அந்தக் கதாநாயகி ஜன்னலோரத்தில் நின்றுகொண்டிருக்கிறாள். வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாடல் தொடங்குகிறது.

'இன்று பூமியில் இரண்டு மழை
விண்ணிலிருந்து ஒரு மழை - என்
கண்ணிலிருந்து ஒரு மழை'

- என்று எழுதியிருந்தார் அந்தப் பாடலாசிரியர். அதைக் கேட்டு, ஆஹா என்று என்னையும் ரசிக்க வைத்தார். இதுபோன்ற அவருடனான உரையாடல்கள், உரையாடுபவர்களையும் தரமுயர்த்தக் கூடியதாகும். பாடலில் இடம்பெறும் ஒற்றெழுத்துக்கள் தொடர்பாக மெல்லிய முரண்பாடுகள் எனக்கும் அவருக்கும் முளைத்ததுண்டு. அவர் மீதிருந்த மதிப்பின் காரணமாகத் திருத்தங்களை ஒலிபெருக்கியில் சொல்லாமல் காதோடு சொல்லவேண்டும் என்று நினைப்பேன். 'ரோஜா' படத்தில், ஏ.ஆர்.ரகுமானுக்கு அவர் முதன் முதலாகப் பாடிய பாடல் 'காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே?' அந்தப் பாடலில், "கண்ணுக்குள் நீதான்... கண்ணீரில் நீதான்... கண்மூடிப் பார்த்தால்... நெஞ்சுக்குள் நீதான்...'’ என்பதில் கண்மூடிப் பார்த்தாலில் "ப்'’ அவருக்கு வரவில்லை. நான், ஒலிப்பதிவு அறைக்குள் சென்று அவர் காதருகே 'ப்' வரவில்லை. 'ப'வின் மீது 'ப்'பைப் போட்டுப் பாடுங்கள் என்றேன். அதற்கு அவர் மெதுவாக... இ"ப்'ப வரும் என்று சொன்னார். பிறகுதான் உச்சரிப்பு சரியாக வந்தது.

இப்படி அவரது உச்சரிப்பில் தவறு வந்துவிடக்கூடாது என்று நான் அதிக கவனம் கொள்வேன். ஏனெனில், களிப்பூட்டுவது மட்டுமே கலையின் வேலையன்று. அது கற்றுக்கொடுக்கவும் வேண்டும். உச்சரிப்பைக் கற்றுக் கொடுப்பதில் பாடல்கள்தான் பாமரர்களின் பள்ளிக் கூடங்கள். பாடலில் ஒற்றுப்பிழை நேர்ந்தால், அதுதான் சரி என்று மொழிப்பிழை நியாயப் படுத்தப்பட்டுவிடும். அதனால்தான் பாடகர்களின் தமிழ் உச்சரிப்பில் நான் பிடிவாதமாக இருக்கிறேன். இந்த வகையில், கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசானாகவும் திகழ்ந்தவர் எஸ்.பி.பி. எந்த மொழியில் பாடினா லும், அதைத் தனது தாய்மொழி போல் உச்சரிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவர் அவர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT