ADVERTISEMENT

7 தொகுதியிலும் தோல்வி - நான் எடுத்த சரியான முடிவு...

12:47 PM May 25, 2019 | rajavel

ADVERTISEMENT

அதிமுக - பாமக கூட்டணி அமைத்தது பிடிக்கவில்லை என கூறி பாமகவில் இருந்து விலகி 'அனைத்து அரசியல் மக்கள் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கினார் ராஜேஸ்வரி ப்ரியா. கட்சி தொடங்கிய வேகத்தோடு தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:-

ADVERTISEMENT

தேர்தல் களத்தில் அனுபவம் எப்படி இருந்தது?

21 நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து பழக்கியுள்ளனர் என்பது நன்றாகவே தெரிகிறது. நாங்கள் பிரச்சாரத்திற்கு சென்றபோது எங்களிடம் சிலர் பணம் தொடர்பாக பேசினர். அப்படிப்பட்ட அரசியலை நாங்கள் முன்னெடுக்கவில்லை என்று கூறிவிட்டோம். இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக என மூன்று கட்சிகளும் பணம் கொடுத்துள்ளது. அதையும் மீறி புதிய கட்சிகளான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் வாக்குகளை பெற்றுள்ளது வரவேற்க வேண்டிய விஷயம்தான்.

புதிய கட்சிகள் வந்தாலும் திமுக, அதிமுக கட்சிகள் அதிக வாக்குகள் பெற்றுள்ளதே?

அதிமுக, திமுக அதிக வாக்குகள் வாங்குகிறது என்பது உண்மைதான். அதேநேரத்தில் புதிய கட்சிகளின் வாக்கு சதவீதம் கூடியிருப்பது ஒரு வித்தியாசமான ஒரு அரசியல் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. மூன்று கட்சிகளும் பணம் கொடுத்துள்ளது. இதில் சில இடங்களில் அமமுகவையும் முந்தி பணம் கொடுக்காத கட்சியும் வந்திருக்கிறது. அப்போது மக்கள் மத்தியில் பரவலாக வேறுவிதமான எண்ண ஓட்டம் வந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அதிமுக இடைத்தேர்தலில் பண விநியோகம் செய்தது. பணத்தை கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் ஓட்டுப்போடும்போது யாருக்கு வேண்டுமானாலும் போடலாம் என்ற மனநிலையில் உள்ளனர்.

பாஜக அகில இந்திய அளவில் 300 தொகுதிகளுக்கு மேல் வந்துள்ளது...

தேர்தலில் தேர்தல் பணிகளில் காவல்துறை பணியாற்றியது, அரசு ஊழியர்கள் பணியாற்றினார்கள். ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு மட்டும் பிரதமர் நன்றி சொல்வதில் இருந்தே சந்தேகத்தை எழுப்புகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு அளிப்பது என்பது மிகப்பெரிய மோசடி. அமெரிக்காவில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும்போது இங்கு ஏன் அதனை பின்பற்றவில்லை. தேர்தல் சீர்திருத்தம் வேண்டும். இதனை வலியுறுத்தி இனி வரும் காலங்களில் போராட உள்ளோம்.




காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லையே...

சில வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை ஏற்காத மனநிலையில் மக்கள் இருப்பதையும் காண முடிகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான் பிரதமர் வேட்பாளர் என அறிவிக்காததுதான் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தோல்வி. இங்கே எப்படி பாஜகவுக்கு எதிரான கருத்துக்கள் அதிகமாக இருக்கிறதோ, அதைப்போல வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களை பாஜகவினர் பெரிய அளவில் பரப்பியுள்ளனர்.

அதிமுக - பாமக கூட்டணி அமைந்ததால் பாமகவில் இருந்து விலகினீர்கள். இந்த தேர்தலில் பாமக 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளதே...

அவர்கள் வைத்த கூட்டணி பிடிக்கவில்லை என்று நான் நேர்மையாக, வெளிப்படையாக சொல்லிவிட்டு அக்கட்சியில் இருந்து வெளியே வந்தேன். மேலும் பொதுவாக இளைஞர்கள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும், ஒரு இடத்தில் வேலையில் இருந்தாலும் தங்களுக்கு பிடிக்காத இடத்தில் இருக்க வேண்டாம் என்று ஒரு அறிவுரையாக சொல்லிவிட்டுத்தான் வந்தேன். கட்சிக்குள் இருந்துக்கொண்டே தலைமை வைத்த கூட்டணியை ஏற்காமல், ஓட்டை மாற்றிப்போட நான் விரும்பவில்லை. அதனால் வெளியேறினேன்.


அரசியல் பக்குவம் இல்லாமல், அவசரப்பட்டு விலகிவிட்டோமோ. அவர்கள் சரியான முடிவு எடுத்திருக்கிறார்களோ என்று சில நேரங்களில் நினைத்தேன். ஆனால் இந்த சின்ன வயதிலேயே, குறுகிய கால அரசியல் அனுபவத்தில் ஒரு துணிச்சலான முடிவு எடுக்கக்கூடிய அளவுக்கு எனக்கு தலைமை பண்பு இருப்பதை தேர்தல் முடிவு வந்தவுடன் உணர்கிறேன். அதிமுக கூட்டணியில் உள்ள வாக்குகள் மோடி எதிர்ப்பு அலை என்ற பெயரில் திமுகவுக்கு போயுள்ளது.

பாமக தனித்து போட்டியிட்டிருந்தால் தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் வெற்றிப் பெற்றிருப்பார். அரக்கோணத்தில் போட்டியிட்டிருந்தாலும் வெற்றி பெற்றிருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இனி பாமக தனித்து நின்றாலும் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படுமா என்பது கேள்விகுறியே...


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT