Skip to main content

தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு! ராமதாஸ்

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

 

ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழம்  அமைத்துத் தருவது தான் ஈழப் பிரச்சினைக்கு சிறந்தத் தீர்வாக அமையும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்.... தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.
 

இலங்கையில் நேற்று நடைபெற்ற 8-ஆவது அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் இலங்கை பொதுஜன கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சேவுக்கும், இலங்கை முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் புதல்வரும், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளருமான சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் தான் கடுமையான போட்டி நிலவியது. இவர்கள்  இருவருமே தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்ற போதிலும், இந்த இருவரில் எவர் மிகவும் மோசமானவர், எவர் கொஞ்சம் மோசமானவர் என்ற அடிப்படையில் தான், அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இலங்கையில் வாழும் தமிழர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது.


 

pmk ramadoss



அதைப்போலவே, ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசா தமிழர்களின் நலன் காக்கப்படும்; தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் விலக்கப்படும்; மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதனால் அவருக்கு தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழர் கட்சிகள் ஆதரவு அளித்தன. அதனால் பிரேமதாசா தமிழர் ஆதரவு வேட்பாளராகவே பார்க்கப்பட்டார்.
 

அதற்கு மாறாக கோத்தபாயா ராஜபக்சே சிங்கள பேரினவாதத்தின் சின்னமாகவே களமிறங்கினார்.  அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே தொடங்கிய இலங்கை பொதுஜன கட்சியின் வேட்பாளராக அவர் போட்டியிட்டாலும், இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் அவருக்கு ஆதரவு அளித்தது. இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் இலங்கை ராணுவம் வலிமைப்படுத்தப்படும்; போர்க்குற்ற விசாரணைகள் அனைத்தும் கைவிடப்படும் என்பன உள்ளிட்ட சிங்கள மக்களிடம் இனவெறியைத் தூண்டும் வகையிலான பிரச்சாரத்தையே கோத்தபாய முன்னெடுத்தார். அவரது இனவெறி பிரச்சாரம் தான் இப்போது அவருக்கு வெற்றியை தேடித்தந்துள்ளது.


 

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரைத் திட்டத்தை கோத்தபாய ராஜபக்சே அறிவித்த போதே, அவர் வெற்றி பெற்றால் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்கை  விடுத்திருந்தேன். இப்போது அவர் வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழர்களுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. 2009-ஆம் ஆண்டு ஈழப் போரில்  ஒன்றரை லட்சம் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள்  எவரும் இனி தண்டிக்கப்பட மாட்டார்கள். போர்க்குற்றவாளியான கோத்தபாய  ராஜபக்சேவே அதிபராக வந்துள்ள நிலையில், எந்தவிதமான போர்க்குற்ற விசாரணையும் இனி நடக்காது. மொத்தத்தில் இதுவரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்கள், இனி நான்காம் தர குடிமக்களாக நடத்தப்படுவர்.

 

இத்தகைய சூழலில் இலங்கையில் வாழும் தமிழர்களின் நலன்களை இனி எவ்வாறு காப்பாற்றலாம்? என்பது குறித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். இலங்கை தேர்தல் முடிவுகள்  இன்னொரு கள எதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளன. தமிழர்களின் எதிரியாக வரித்துக் கொண்டு களமிறங்கிய கோத்தபாயவுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சராசரியாக 10% வாக்குகள் கூட கிடைக்கவில்லை; அதேநேரத்தில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 60 முதல் 70 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. அதேபோல், தமிழர்களின் நண்பனாக காட்டிக் கொண்ட சஜித் பிரேமதாசாவுக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் 80 முதல் 90% வாக்குகளும், மற்ற பகுதிகளில்  40 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. தமிழர்கள் தனித் தீவாகவும், சிங்களர்கள் தனித்தீவாகவும் வாக்களித்திருப்பது இரு இனங்களும் இனி சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்பதையே காட்டுகின்றன. இதை அனைத்து உலக நாடுகளும் புரிந்து கொள்ள முயல வேண்டும்.


 

அதிபர் தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடங்களையும், புதிய அதிபர் தமிழர்களுக்கு எதிராக ஏவுவதற்கு  காத்திருக்கும் அடக்கு முறைகளையும் வைத்துப் பார்க்கும் போது ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழம்  அமைத்துத் தருவது தான் ஈழப் பிரச்சினைக்கு சிறந்தத் தீர்வாக அமையும். அதிபர் தேர்தல் முடிவுகளையே அதற்கான பொதுவாக்கெடுப்பு முடிவாக கருதலாம் என்றாலும் கூட, தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை  பொதுவாக்கெடுப்பு நடத்தியாவது தனித்தமிழீழம் அமைத்துக் கொடுக்க ஐ.நா. அமைப்பு முன்வர வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.