ADVERTISEMENT

என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? ஊரடங்கு இப்போது வேண்டாமா? முதல்வர்களுடன் அவசர ஆலோசனை... கோபத்தில் மோடி!

09:40 AM Apr 06, 2020 | Anonymous (not verified)


கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் விவாதித்தார் பிரதமர் மோடி. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சில மாநிலங்கள் மத ரீதியாக அலட்சியம் காட்டுவதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும்,ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர்களுடன் விவாதிப்பதற்கு முன் கடந்த 31-ந்தேதி பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல்.அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உளவுத்துறைகளான ஐ.பி., ரா உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளுடன் ஒரு அவசர ஆலோசனையை நடத்தியிருந்தார் பிரதமர் மோடி.

ADVERTISEMENT




அந்த ஆலோசனையில், உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச அளவிலான சில வைரலாலஜி ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்து கொடுத்துள்ள ரிப்போர்ட்டுகள் அலசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக,கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது.ஆனால் அவைகள் குறைத்துக்காட்டப்படுகின்றன.

21 நாள் தேசிய ஊரடங்கு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்தாலும் இந்திய மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் மருத்துவ நடவடிக்கைகள் தற்போதுள்ளதைவிட இரு மடங்கு தீவிரப்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஊரடங்கை நீட்டிப்பது அவசியம்.இதில் அலட்சியம் காட்டினால் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை செய்திருக்கிறது.

இந்த எச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதில்,கொரோனாவைக் குறித்த தெளிவு மக்களுக்கே வந்திருப்பதால் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதில் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்.ஆனால், ஊரடங்கை நீட்டிப்பது வேறு பல சிக்கல்களை உருவாக்கும்.ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் இப்போதே பணப்புழக்கம் குறைந்து விட்டதால் ஊரடங்கை உடைத்து வெளியேறலாமா என யோசிக்கிறார்கள்.மளிகைக் கடைகளில் உள்ள பொருட்களும் குறைந்து விட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் உணவுதானியத் தட்டுப்பாடு பல மாநிலங்களில் நெருக்கடியை ஏற்படுத்தும்.அதனால், ஊரடங்கை நீட்டிக்காமல் சூழலைக் கையாள்வதுதான் சரியானதாக இருக்கும் என உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.அதிகாரிகளின் யோசனை அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்களையும் ஆமோதிக்க வைத்திருக்கிறது.



ADVERTISEMENT



கொரோனா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களை கண்காணிப்பதிலும் தொற்று உறுதி சோதனைகளை விரைவு படுத்துவதிலும் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களை மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சைத் தருவதிலும் மாநில அரசுகள் வேகத்தை அதிகரிக்க வேண்டும். ஊரடங்கு முடிவுக்குப் பிறகும் இதே கவனத்தை சுகாதார துறையினர் மேற்கொள்வது அவசியம் என அதிகாரிகள் சொன்ன யோசனைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இதனையடுத்தே, மாநில முதல்வர்களுடன் மீண்டும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

முதல்வர்களுடன் மோடி விவாதித்தபோது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டும்படி இருக்கிறது. இருப்பினும் சமுக தொற்றாக மாறாமல் இருக்க இன்னும் வேகம் வேண்டும். தீவிர கவனம் செலுத்துங்கள். சோதனை மையங்களையும், மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவதிலும் பல மாநிலங்கள் அக்கறை காட்டவில்லை. மேலும், கொரோனாவை தடுப்பதற்காக மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒதுக்கிய நிதிகளில் தவறுகள் நடந்து வருகிறது. அதனை சரி செய்யுங்கள். டெல்லியில் நடந்த மத வழிபாட்டு மாநாட்டில் கலந்து கொண்டு மாநிலங்களுக்கு திரும்பியவர்களை கண்காணிப்பதில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என காட்டமாக பேசிய மோடி, ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து மக்கள் வெளியேறாமல் இருக்க அவர்களுக்குத் தேவையான பொருட்கள் அவர்களது வீடு தேடி செல்வதற்குரிய வழிகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தம்மிடமிருந்த புள்ளி விபரங்களை வைத்து கேள்விகளை எழுப்பினார் மோடி.



மோடியுடன் பேசிய மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ்தாக்கரே, டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தியிருக்கிறோம். அவர்களோடு தொடர்புடையவர்களும் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களின் ஒத்துழைப்பும் திருப்திகரமாக இருக்கிறது. எந்த ஒரு மதத்தின் கூட்டங்களுக்கும் நாங்கள் அனுமதிக்கவில்லை. சோதனைகளின் முடிவுகளை விரைந்து அறிந்துகொள்வதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மூன்றாவது நிலைக்கு போகாமல் இருப்பதற்கான எல்லா மருத்துவ முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. முக கவசம் அணிந்தும், சமூக விலகலை கடைப்பிடித்தும் மதம் சார்ந்த கூட்டங்களில் பங்கேற்க முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்ட முயற்சிகளுக்கும் தேசிய அளவில் தடை விதிக்கலாம் என சொல்லியிருக்கிறார்.

இதே ரீதியில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், ம.பி.முதல்வர் சிவராஜ் சவுகான் உள்ளிட்ட பலரும் பேசினர். தமிழக முதல்வர் எடப்பாடி, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இதுவரையில் எடுக்கப்பட்டு வந்துள்ள நடவடிக்கைகளையும், எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், நோய் தொற்றுள்ளவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் விரிவாகப் பேசினார்.

கொரோனா தடுப்பு நடவடிக் கைகளுக்காக 9 ஆயிரம் கோடி நிதி கேட்டு ஏற்கனவே எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டியதுடன், பல்வேறு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய மேலும் 3 ஆயிரம் கோடி தேவைப்படுவதால் 12 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார் எடப்பாடி. அப்போது மோடி எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்தார் தலைமைச் செயலாளர் சண்முகம். மோடியுடன் விவாதித்த முதல்வர்கள் அனைவருமே தங்கள் மாநிலத்துக்கு இத்தனை கோடி நிதி வேண்டும் என்பதை வலியுறுத்த தவறவில்லை. ஆனால், யாருக்குமே மோடி உறுதி தரவில்லை.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என மோடி கேள்வி எழுப்பியபோது, வேண்டாம் என்றே பெரும்பாலான முதல்வர்கள் தெரிவிக்க, டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்கள் ஊரடங்கு முடியும்போது அப்போ தைய சூழலில் தீர்மானிக்கலாம் என சொல்லியுள்ளனர். இறுதியாக பேசிய மோடி, ஊரடங்கு முடிந்த பிறகும் இப்போதைய மருத்துவ நடவடிக் கைகளே தொடர வேண்டும்.; அதில் அலட்சியம் இருக்கக்கூடாது. அனைத்து மாநிலங்களும் பின்பற் றும் வகையில் கையாள வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வழங் கும் என்பது உள்ளிட்ட சில அறி வுறுத்தல்களை கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான ஆலோசனையை முடித்ததும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அமைச்சர்கள் மற்றும் அதன் உயரதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி. அதுகுறித்து விசாரித்த போது, ’கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வதிலுள்ள சிக்கல்களை களைவதற்காக சில முடிவுகளை எடுத்தனர். குறிப்பாக, இன்வெசிவ் வெண்டிலேட்டர்ஸ், என்-95 ரக மாஸ்க்குகள், மலேரியா நோய் எதிர்ப்பு மருந்துகளான ஹைட்ராசிக் குளோரோகுவினோன், அசித்ரோமைசின், பாதுகாப்பு கவச உடைகள், மல்டி பேராமீட்டர் ஐ.சி.யூ. மானிட்டர்கள் உள்ளிட்டவைகளை கொள்முதல் செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக அவைகளை உற்பத்தி செய்யும் தகுதி வாய்ந்த நிறுவனங் களுக்கு மொத்த மூலதனத்தில் 30 சதவீத மானியம் தருவது உள்பட பல சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது‘’ என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

இந்த ஆலோசனைகளுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை எடப்பாடியை ராஜ்பவனுக்கு அழைத்து விசாரித்தார் கவர்னர் பன்வாரிலால். அப்போது, தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதியுடன் கவர்னரை சந்தித்த எடப்பாடி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து செல்லவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையையும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்தும் கவர்னர் விசாரித்த போது அது குறித்து தயாரிக்கப்பட்டிருந்த ஒரு ரிப்போர்ட்டை கவர்னரிடம் கொடுத்துள்ளார் எடப்பாடி. அதனை படித்துப்பார்த்து சில அதிருப்திகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அது குறித்து விளக்கத்தை தலைமைச்செயலாளர் சண்முகம் விவரித்த நிலையில், வைரலாலஜி சோதனை மையங்களுக்கான உபகரணங்களில் நடந்துள்ள ஒரு ஊழல் குறித்து கவர்னர் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடியும் அதிகாரிகளும் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்துள்ளனர் என்கிறார்கள் ராஜ்பவனுக்கு நெருக்கமான அதிகாரிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT