ADVERTISEMENT

எனது குடும்பத்தை தவறாக பேசினால் நான் எதிர்த்து கேள்வி கேட்க கூடாதா..? பியூஷ் மனுஷ் ஆவேசம்!

05:55 PM Sep 06, 2019 | suthakar@nakkh…


சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சில தினங்களுக்கு சேலம் பாஜக அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு இருந்தவர்களால் தாக்கப்பட்டார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் நம்முடன் நடந்த சம்பவம் தொடர்பாக பேசும்போது பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

ADVERTISEMENT



ADVERTISEMENT

சேலம் பாஜக அலுவலகத்துக்கு சென்ற நீங்கள் தாக்கப்பட்டீர்கள். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தீர்கள். இப்போது உடல் நிலை எப்படி இருக்கு?

நான் நன்றாகத்தான் இருக்கிறேன். என்னை அங்கு தாக்க முயற்சி பண்ணி செருப்பில் இருந்து கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு என்னை அடிக்க முற்பட்டார்கள். ஆனால் என்னை அவர்கள் நினைத்த அளவிற்கு தாக்க முடியவில்லை. என் மீது அடி விழவில்லை. மருத்துவமனையில் கூட மருத்துவரிடம் கேட்டேன். அவரும் நன்றாக இருப்பதாக கூறினார்.

நீங்கள் தாக்கப்பட்டதற்கு பெரும்பாலானவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அரசியல்வாதிகள் சிலர் அறிக்கைகளையும் வெளியிட்டார்கள். நீங்கள் எதற்காக அங்கு போக வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள்? அதுவும் அறிவித்து விட்டு சென்றுள்ளீர்கள். இதற்கான காரணம் என்ன?

என் மனைவி குழந்தைகளை பத்தி தப்பா பேசுறாங்க. அதை நான் தானே கேட்க வேண்டும். என் மனைவி என்னை விவகாரத்து செய்துவிட்டாருனு சொல்றாங்க. என் மகளை நான் பலாத்காரம் செய்து விட்டேன்னு சொல்றாங்க. அதை நான் அங்கே போனால் தானே கேட்க முடியும். அதானால்தான் அங்கே சென்றேன்.சேலம் மாவட்ட பாஜக தலைவருக்கு தெரியப்படுத்திவிட்டு சென்றேன். நான் மட்டும்தான் சென்றேன். யாரையும் அழைத்துக்கொண்டு சண்டைக்கு செல்ல வில்லை. நான் எப்போதும் வன்முறையை விரும்புகிறவன் அல்ல. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. சொல்லிவிட்டு சென்ற என் மீது எழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் பலமுறை இதைபோன்று பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளீர்கள், இவ்வாறு செல்வதன் மூலம் என்ன மாற்றம் நடைபெற்றுள்ளதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

அவர்கள் செய்யும் அராஜகத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவேன். என்னுடைய குடும்பத்தை பற்றி தொடர்ந்து அசிங்கப்படுத்தி வந்தால் நான் என்ன செய்ய முடியும். அவர்களுடன் விவாதிக்க தயார் என்று சொல்லிவிட்டு சென்ற என்னையே அவர்கள் கம்புகளை வைத்து தாக்க முயற்சி செய்துள்ளார்கள். அவதூறாக இவர்கள் பேசுகிறார்கள் என்று சைபர் கிரைம் போலிசில் பலமுறை புகார் செய்துள்ளேன். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏழு முறைக்கும் மேல் நான் புகார் கொடுத்துள்ளேன். அதில் ஒரு முறை கூட விசாரணை நடைபெறவில்லை.

நீங்க திமுக சார்பாக செயல்படுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றதே?

10 ஆண்டுகளுக்கு முன்னாலேயே திமுக ஆட்சியில் என் மீது வழக்கு போட்டுள்ளார்கள். எனவே யாரையும் ஆதரிக்கிறேன் என்பது எல்லாம் தவறான குற்றச்சாட்டு. அனைத்து கட்சிகளுக்கு எதிராகவும் நான் போராட்டம் நடத்தியுள்ளேன். கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கூட போராட்டம் நடத்தி உள்ளேன். ஏன் தற்போதைய அதிமுகவுக்கு எதிராக கூட போராடி உள்ளேன். போராட்டத்திற்காக அவர்கள் எல்லாம் என்மீது வழக்கு போடுவார்கள். ஆனால் யாரும் என் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்யவில்லை. என் குடும்பத்தை பற்றி கேவலமாக விமர்சனம் செய்த நிர்வாகிகளை எந்த பாஜக தலைவராவது இதுவரை கண்டித்துள்ளார்களா? பொன்னார் போன்றவர்கள் நடந்து வந்த என்னை தவழ்ந்து போக வைத்திருப்பேன் என்று சொல்கிறார் என்றால் அவர்கள் எவ்வளவு வன்முறை வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இவர்கள் என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் அஞ்ச மாட்டேன். அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டக் களத்தில் இருப்பேன்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT