ADVERTISEMENT

"சிசிடிவி காட்சிகளை காட்டுங்கள் அப்போது தெரியும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று.." - பியுஷ் மனுஷ் காட்டம்!

06:18 PM Jun 26, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை, மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார் சமூக செயற்பாட்டாளர் பியுஷ் மனுஷ். இதுதொடர்பாக அவர் பேசும்போது, "சாத்தான்குளம் விவகாரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளார்கள். அதில் ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னுடைய கேள்வி ரொம்ப சிம்பிள். நடவடிக்கை என்றால் அவர்கள் கொடுத்த புகாரில் ஒரு எப்ஐஆர் போட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஏன் அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருந்தால் பலபேரின் தவறுகள் தெரிய வந்திருக்கும். அவர்கள் இருவரும் இறந்து நான்கு நாட்கள் ஆகின்றது. ஆனால் மக்கள் ஒரு எப்ஐஆர் வாங்க தவித்து கொண்டு இருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்வதற்காக பெரிய போராட்டம் செய்ய வேண்டியுள்ளது. நினைத்து பார்த்தாலே மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது. ஐவிட்னஸ் சாட்சி இருக்கின்றது.

பின்பக்கமாக அழுத்தி குத்தியிருக்கிறார்கள், 7 வேட்டி நனைந்திருக்கின்றது. அந்த அளவுக்கு ரத்தம் வந்துள்ளது, கடுமையாக தாக்கி உள்ளார்கள். எத்தனை துணி மாத்தினாலும் வருகின்ற ரத்தம் நிற்கவில்லை. ரத்தம் ஓட, ஓட அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்கள். அங்கு அவர்கள் இருவரும் சரியான உடல் நிலையுடன் இருப்பதாக சர்டிபிகேட் வாங்கி இருக்கிறார்கள். இந்த தாக்குதலை நடத்திய எஸ்ஐ போட்டோக்களை மட்டுமே போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அந்த இன்ஸ்பெக்டர் போட்டோவையும் ஊடகங்கள் போட வேண்டும். அவர்தான் முக்கிய குற்றவாளி. அப்புறம் அந்த எஸ்பி அருண், அவர்கள் இருவரும் இறந்த அன்றே அவர்கள் நெஞ்சுவலியால்தான் செத்து போய்விட்டார்கள் என்று எப்படி இந்த எஸ்பி சொல்கிறார், அவருக்கு எப்படி தெரியும்.

அதை நம்முடைய முதலமைச்சரும் தற்போது சொல்கிறார். என்ன ஒரு கொடுமையா இருக்கு. உயிருக்கு என்ன உத்திரவாதம் இருக்கின்றது. இருபது வழக்குகளை நானும் வாங்கி வைத்துள்ளேன். தப்பு செய்த அவர்கள் மீது கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். தவறு செய்த யாரும் தப்பிக்கக்கூடாது. காவல் நிலையத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஒப்படையுங்கள். நாங்கள் தான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறீர்களே, அப்புறம் எதற்கு வழக்கமான நடைமுறைகளை செய்ய காவல்துறையினர் மறுக்கின்றார்கள். நாங்கள் அவர்களை அழைத்து வந்தப்படியே அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினோம் என்று ஏன் காவல்துறை நிரூபிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அவர்கள் தாக்கியது அனைவருக்கும் தெரியும். அவர்கள் யாரையும் விட்டுவிடக்கூடாது. சட்டத்தின் முன் தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT