Skip to main content

உயர்நீதிமன்றம் தலையிடவில்லை என்றால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் திருத்தப்பட்டிருக்கும் - பொன்ராஜ் பகீர் பேட்டி!

 

kl;

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு பொன்ராஜ் பதிலளிக்கின்றார். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, 

 

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. உயர்நீதிமன்றமே நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார். தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

இந்தியக் குற்றவியல் சட்டம் எந்த அளவுக்கு ஓட்டை உடைசலாக இருக்கிறது என்பதை இந்த வழக்கு எப்படி வெளிக்கொண்டு வந்துள்ளது என்றுதான் நான் பார்க்கிறேன். மதுரை உயர்நீதிமன்றம் மட்டும் இந்த வழக்கில் தலையிடாமல் இருந்திருந்தால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூட திருத்தி எழுதப்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஒரு முதலமைச்சர் மூச்சுத் திணறலால்தான் அவர்கள் இறந்தார்கள் என்று சொல்கிறார், அதை அமைச்சர்களும் அச்சு மாறாமல் சொல்கிறார்கள். இன்னும் முழுமையாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை என்றாலும் ஒரு நீதிபதியின் மேற்பார்வையில் அந்தச் சம்பவம் நடந்து முடிந்துள்ளது. கொல்லப்பட்ட இருவரும் வியாபாரிகள் என்பதால் வணிக சங்கங்கள் அதைப் பெரிய விஷயமாகக் கொண்டு வரச் செய்தார்கள். ஊடகங்கள் இந்தச் செய்திக்கு அதிக முக்கியத்துவம் தந்தார். 

 

எந்தக் குற்றமும் செய்யாத இருவரை அடித்தே கொலை செய்கிறார்கள் என்றால் அதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா? மனிதத் தன்மை இருக்கின்ற யாரும் இதைச் செய்ய மாட்டார்கள். சக மனிதன் என்ற எண்ணமே இல்லாதவர்கள்தான் இந்த மாதிரியான சம்பவத்தைச் செய்ய முடியும். இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதில் பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தில் எப்படி உலகமே கண்டனம் தெரிவித்ததோ அதைப் போன்று இந்த வழக்கில் ஒட்டுமொத்த சமூகமே தலையிட்டதால்தான் நீதிமன்றம் நேரடியாக இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது. அதற்குக் காரணம் ஊடகத்தின் வெளிச்சம். அந்த ஃபோக்கஸ் காரணமாகவே இந்தச் சம்பவம் தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

 

http://onelink.to/nknapp

 

இந்தக் குற்றவியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு என்னென்ன ஜனநாயக உரிமைகள் இருக்கிறது என்பதைச் சரியான முறையில் வரையறுத்து வைத்துள்ளார்கள். ஒருவரை கைது செய்தால் அவரை 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட்டிடம் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். பிறகு அவரின் மேற்பார்வையில் அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படுவார். தேவை ஏற்படுமாயின் நீதிமன்றக் காவலில் இருந்து போலிசார் அவர்களை விசாரணை செய்வார்கள். இதுதான் காலங்காலமாக வழக்கமாக உள்ள நடைமுறை. இதைத்தான் அனைத்து மாநில காவல்துறை அதிகாரிகளும் பின்பற்றுகிறார். அதற்கு முன்பு கைது செய்யப்பட்டவர்களை மருத்துவர்கள் சோதனை செய்து சான்றிதழ் கொடுக்க வேண்டும். அதனை நீதிபதி சரிபார்த்து, அனைத்தும் சரியாக இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சிறைக்கு அனுப்புவர்கள். ஆனால் இந்த வழக்கில் அத்தகைய எந்த நடமுறையையும் பின்பற்றப் படவில்லை என்பதே நம்முடைய குற்றச்சாட்டாக உள்ளது.  அதை சி.பி.ஐ. முறையாக விசாரிக்க வேண்டும். 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்