ADVERTISEMENT

அனைத்து தொகுதிகளிலும் வென்றதும் உண்டு தோற்றதும் உண்டு... பாமகவின் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வரலாறு!

01:24 PM Feb 19, 2019 | santhoshkumar

ADVERTISEMENT


2019 நாடாளுமன்ற தேர்தல், யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு மீதும் மாநில அரசு மீதும் மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது என்று சொல்லப்படும் நிலையில் அதிமுக எந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது என்ற கேள்வி இருக்கிறது.

ADVERTISEMENT

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல். இந்தத் தேர்தலில் கண்டிப்பாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்ததற்கு ஏற்ப, பாஜகவின் தமிழக பொறுப்பாளரான பியூஷ் கோயல் கடந்த வாரம் ஒரு நாள் நள்ளிரவில் தமிழகம் வந்து, அதிமுக தொகுதி பங்கீட்டாளர் குழுவை சந்தித்துவிட்டு சென்றார். இன்று காலை பாமகவுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. திடீரென அடையாரிலுள்ள க்ரௌண் பிளாஸா ஹோட்டலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்துப் பேசி பின்னர் கூட்டணியை உறுதி செய்துள்ளனர். பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வருவதற்கு முன்பு பாமக திமுகவுடன் கூட்டணி வைக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். அதை உடைக்கும் வகையில் தற்போது அதிமுகவும் பாமகவும் கூட்டணியில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி 1989ஆம் ஆண்டு ராமதஸால் உருவாக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல்களில் 1991ஆம் ஆண்டிலிருந்து போட்டியிட்டாலும் 1996ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக இந்த கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. அப்போது மதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமை வகித்த திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாமக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. சுமார் 15 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது, ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

மத்தியில் தேவ கௌடாவின் ஆட்சி கவிழ்ந்தபின் 1998ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுகவுடன் கைகோர்த்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது பாமக. இந்தத் தேர்தலில் பாமக 5 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது, அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராகப் பதவி ஏற்றார்.

இந்த ஆட்சி 13 மாதங்களிலேயே கவிழ, திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது. இதற்கு முன்பாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த பாமக இந்தத் தேர்தலிலும் அதையே தொடர்ந்தது. இத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்தக் கூட்டணியும் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றார்.

2004ஆம் ஆண்டு தேர்தலில் பாமக திமுகவுடன் கூட்டணி வைத்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது. ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஐந்து தொகுதிகளிலுமே வெற்றிபெற்றது. மத்தியிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது. மன்மோகன் சிங் பிரதமராகப் பதவி ஏற்றார்.

2009ஆம் ஆண்டில் அதிமுகவுடன் கடைசி கட்டத்தில் கூட்டணி வைத்து பாமக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாமல் போனது. அதிமுக தலைமையில் உருவான இந்த கூட்டணி, தேசிய கட்சிகளுடனான கூட்டணியில் சேராமல், தேர்தலுக்குப் பின்பே பாஜகவுக்கு ஆதரவு அளித்தது.

2014ஆம் ஆண்டில் பாமக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் பாஜக-தேமுதிக-மதிமுக-ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து தமிழகத்தில் கூட்டணி அமைத்தது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றில் பாமகவும், மற்றொன்றில் பாஜகவும் வெற்றிபெற்றன. பாமக சார்பில் தர்மபுரியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் வெற்றிபெற்றார். மத்தியில் பாஜகதான் ஆட்சியும் அமைத்தது, நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.

இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வரலாறு. பாமக, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல முறை இரு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றும் தனித்தே போட்டியிடுவோம் என்றும் கூறி வந்துள்ளது. அது போல ஓரிரு சட்டமன்ற தேர்தல்களில் செயல்பட்டும் உள்ளது. இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தல்களை கூட்டணியுடன்தான் சந்தித்து வருகிறது. பாமக நாடாளுமன்ற உறுப்பினர்களில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் மத்திய அமைச்சர்களாகவும் பதவி வகித்துள்ளனர். இந்த முறை பாமக எடுத்துள்ள கூட்டணி முடிவு அதற்கு எத்தகைய பலன்களை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT