Skip to main content

திமுக ஆட்சிக்கு வரக் கூடாது... பாஜக போடும் அதிரடி திட்டம்... ரஜினி மூலம் திமுகவிற்கு கொடுக்கும் டென்ஷன்!

"இஸ்லாமியர்களின் தொடர் போராட்டத்திற்குக் காரணமே தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் பேச்சுதான்' என்றார் அமைச்சர் ஜெயக்குமார். "தி.மு.க.தான் காரணம்' என முதல்வர் எடப்பாடியும் சட்டமன்றத்தில் தெரிவித்தார். "போராட்டத்தை தூண்டிவிடுவது தி.மு.க.தான்' என பா.ஜ.க.வின் இல.கணேசனும் பொன்.ராதாகிருஷ்ணனும் திரும்பத் திரும்ப கூறினார்கள்.

இப்படி அ.தி.மு.க.வின் குரலும் பா.ஜ.க.வின் குரலும் ஒரே மாதிரி இருப்பதன் பின்னணியில் பா.ஜ.க.வின் மிகமுக்கிய அஜெண்டா ஒன்று இருப்பதாகச் சொல்லும் அரசியல் விமர்சகர்கள், அதுகுறித்து பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

 

dmkபி.ஜே.பி.யைப் பொறுத்தவரை வலுவாக இருக்கும் மாநில கட்சிகள் தங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி கூட்டணி வைக்காவிட்டாலும் பரவாயில்லை, எந்தக் காரணத்தைக் கொண்டும் காங்கிரசுடன் கூட்டணி சேரக்கூடாது. இதற்கேற்ப வங்கத்தின் மம்தாவும் உ.பி.யின் மாயாவதியும் எடுத்த நிலைப்பாட்டால் கடந்த எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றிபெற முடியாமல் போனது.

அந்த அஜெண்டாவுக்குள் அடுத்தடுத்து விழுந்தவர்கள் தெலங்கானாவின் முதல்வர் சந்திரசேகர் ராவும் ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும். கடந்த வாரம் டெல்லி முதல்வரான கெஜ்ரிவாலும் இந்த அஜெண்டாவுக்குள் ஐக்கியமானார். வடமாநிலங்களில் மெகா வெற்றியடைந்த பி.ஜே.பி.க்கு தென்மாநிலங்களில் -குறிப்பாக தமிழகத்தில் மகா தோல்வி தான் கிடைத்தது. இந்த தோல்விக்குக் காரணம் மாநிலத்தில் வலுவாக இருக்கும் தி.மு.க.தான். அந்த தி.மு.க. தயவால்தான் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரசுக்கு 9 எம்.பி.க்கள் கிடைத்திருக்கிறார்கள். அதனால் தி.மு.க. மீது கடுமையாக குறிவைத்துள்ளது பா.ஜ.க.

 

dmkமு.க.ஸ்டாலின் மிசா கைது குறித்த சர்ச்சை, முரசொலி நில விவகாரம் இதையெல்லாம் கிளப்பி, தி.மு.க.வின் கவனத்தை திசை திருப்பி சோர்வடைய வைப்பதன் மூலம் 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தடுப்பதுதான் இலக்கு.

இன்னொரு பக்கம் ரஜினி மூலம், தி.மு.க.வை டென்ஷனாக்குவது. ரஜினி தனிக் கட்சி தொடங்குவாரா, தொடங்கினாலும் நமது வலையில் விழுவாரா என்ற நினைப்பு பி.ஜே.பிக்கு இருந்தாலும், ரஜினியுடன் பா.ம.க. கூட்டணி, அதில் பா.ஜ.க.வும் இருக்கும் என்ற வியூகங்களெல்லாம் அஜெண்டாவின் ஒரு பகுதிதான்'' என்கிறார்கள்.

டெல்லி முதலாளிகளின் இந்த அஜெண்டாவை நன்றாகப் புரிந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடியும் சமீபத்தில், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி தலைமையிலான உளவுப்படையை இறக்கி, தமிழகம் முழுவதும் ஒரு சர்வே எடுத்துள்ளார். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு 175 தொகுதிகள் கிடைக்கும் என சர்வே ரிசல்ட் சொல்லியதால், ஷாக்கான எடப்பாடி, சுதாரித்து சில அறிவிப்புகளையும் பல காரியங்களையும் செயல்படுத்த ஆரம்பித்துள்ளார்.


இது குறித்து அ.தி.மு.க. சீனியர் ஒருவரிடம் நாம் விசாரித்தபோது, "கடந்த வாரத்தில் ஒரு நாள் இரவு கொங்கு மண்டல அமைச்சர் ஒருவரை அனுப்பி ரஜினியை சந்திக்க வைத்துள்ளார் எடப்பாடி. அதேநேரம் தேர்தல் நேரத்தில் விடுதலையாகி வரும் சசிகலாவை கட்சியில் சேர்த்தால் ஏற்படும் லாப—நஷ்டங்களையும் கணக்குப் போடுகிறார். அந்தக் காரியங்கள் ஒருபக்கம் நடந்தாலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்ததுடன் நில்லாமல் சட்ட சபையிலும் மசோதா தாக்கல் பண்ணிவிட்டார். பள்ளிக்குழந்தைகளுக்கு காலை நேர சத்துணவு, குடிமராமத்துப் பணிகள், முதலீடுகளுக்கான ஒப்பந்தம் என அரசு இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார். இதெல்லாமே பா.ஜ.க. ஆலோசனைப்படி தி.மு.க.வை குறி வைத்துத்தான்'' என்றார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்பவர்களை எதிர்கொண்டு சமாளித்து அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டும் என்ற அஜெண்டாவுடன் களம் இறங்கியுள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். மக்களை நோக்கித்தான் கட்சியினரின் கவனம் இருக்கவேண்டும் என்பதால்தான் நமக்கு நாமே பயணம், கிராமங்களில் ஊராட்சி சபை கூட்டம், சி.ஏ.ஏ.வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம், அதிலும் பஸ்களில் ஏறி பயணிகளிடமும் சாலைகளில் ஆட்டோ டிரைவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகளிடமும் என ஸ்டாலினே கையெழுத்து வாங்கினார்.


இப்படி ஒருபக்கம் மக்களிடம் நெருங்கினாலும் பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக நியமித்தது உ.பி.க்களிடையே முணுமுணுப்பையும் விவாதத்தையும் கிளப்பியது. இந்த நிலையில் தான் கட்சியின் மா.செ.க்கள் கூட்டத்தை கடந்த 17—ஆம் தேதி அறிவாலயத்தில் கூட்டினார் ஸ்டாலின்.

கூட்டத்தில் பேசிய மா.செ.க்கள் பலர் பிரசாந்த் கிஷோரின் எண்ட்ரி குறித்துக் கேட்ட போது, “அவர் நிறுவனம்தான் நம்மிடம் வேலை பார்க்கிறதே தவிர, நாம் அவரது நிறுவனத்துக்கு வேலை பார்க்கப்போவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் நமது ஓட்டு எவ்வளவு, ஒவ்வொரு பூத்திலும் எவ்வளவு ஓட்டு லீடிங் காட்டுவோம் போன்ற தரவுகளை பிரசாந்த் கிஷோரின் டீம் சேகரிக்கும். அவர்களுடன் நமது கட்சியின் நிர்வாகிகளும் இணைந்து செயல்படுவார்கள். நமது உயிரான திராவிட இயக்க கொள்கைக்குள் பிரசாந்த் கிஷோரின் தலையீடு நிச்சயமாக இருக்காது. கலைஞரின் பாதையில்தான் தொடர்ந்து பயணிப்போம்'' என்பதை ஸ்டாலின் உறுதியுடன் சொல்லியிருக்கிறார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...