ADVERTISEMENT

 ‘இந்தியா’ கூட்டத்திற்கான மாநிலத் தேர்வுகளும்; பின் இருக்கும் அரசியலும்!

02:21 PM Jul 19, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவை அடுத்து யார் ஆளப்போவது என்கிற போட்டி தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த ரேசில் பாஜக தலைமையில் என்.டி.ஏ, காங்கிரஸ் தலைமையில் ஐ.என்.டி.ஐ.ஏ(INDIA) எனத் தற்போது இரு அணிகளாகப் பிரிந்து இருக்கின்றன.

பா.ஜ.க.வின் 9 வருட ஆட்சியில் பண மதிப்பிழப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல், இதுவரை இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான வன்கொடுமை என ஏகப்பட்ட இன்னல்களை மக்கள் சந்தித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், மோடி தலைமையிலான பாஜக உலகத்தையே இந்தியாதான் வழி நடத்தப் போகிறது, ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்திருக்கிறோம், காங்கிரஸ் காலத்தில் பின்னோக்கிப் போன இந்தியாவை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என்று பாஜகவினர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2019ல் வெற்றிபெற்றபோது

2014ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. குஜராத் முதல்வராக இருந்த மோடியைப் பிரதமராக தேர்ந்தெடுத்தது. ஒரு சாமானியன் முதல்வராகி குஜராத் என்ற மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியிருக்கிறார் என்று கட்டமைக்கப்பட்ட பிம்பத்துடன் பிரதமர் நாற்காலியில் அமர்ந்த மோடியைப் பார்த்து, சற்று மக்களும் பூரிப்பு அடைந்தார்கள் என்பது மறுக்கக முடியாத ஒன்று.

அதானி, நீரவ் மோடி உள்ளிட்ட முதலாளிகளுக்கு வெண்சாமரம் வீச, மக்களின் அடி வயிற்றில் அடிக்கிறது பாஜக என்று எதிர்க்கட்சிகளும், ஏன் மக்களில் ஒருசாராருமே குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், 2019 தேர்தலில் அசுர பலத்துடன் தனிப் பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடித்தது பாஜக.

தொடர்ந்து 9 ஆண்டுகால ஆட்சியில் பாஜக செய்த திட்டங்களை எல்லாம் அது தனது குட்புக் லிஷ்டில் தான் வைத்திருக்கிறது. ஆனால், பொது சிவில் சட்டம், குடியுரிமைச் சட்டம், பண மதிப்பிழப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, மணிப்பூர் கலவரம், இந்தித் திணிப்பு என இந்திய மாநிலங்களில் இருக்கும் மக்களின் எதிர்ப்பு மனநிலையை நேராகவோ, மறைமுகமாகவோ பாஜக தற்போது சம்பாதித்துள்ளது. அதனால், ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு தற்போது பாஜகவிற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

ஆட்சி அதிகார அரசியலில் பாஜக ஆப்ரேஷன் லோட்டஸ் என்ற திட்டத்தின் மூலம் கொள்ளைப் புறமாக ஆட்சி அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக பரவலாகப் பேச்சு இருக்கிறது. இப்படிச் சொல்வதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிப்பது, அதற்கு அந்த கட்சி ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அந்தக் கட்சியை இரண்டாக உடைத்து அதில் இருக்கும் எம்.எல்.ஏக்களை தன்பக்கம் இழுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவது என அதன் வரலாறும் அப்படியே இருக்கிறது.

இதற்கு உதாரணமாக அடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கவிருக்கும் மகாராஷ்ட்ரா மாநில அரசியலையே கூறலாம். மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும், உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகச் செயல்பட்டனர். பின்பு சட்டபேரவையில் உத்தவ் தாக்கரேவை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.

இதனைப் பயன்படுத்திக்கொண்ட பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவு எம்.எல்.ஏக்களைத் தனது கூட்டணிக்கு இழுத்து ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கி மீண்டும் அங்கு ஆட்சியைப் பிடித்தது. பின்பு சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது. ஆனால், உத்தவ் தாக்கரே நடத்தி வரும் பத்திரிகையில், ஏக்நாத் ஷிண்டேவின் 20 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் மீண்டும் உத்தவ் தாக்கரே தலைமையில் இணையவுள்ளதாகக் கட்டுரை வெளியிட்டது. இந்தச் செய்தி வெளியான சில வாரங்களில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களைத் தன் பக்கம் இழுத்துக் கூட்டணி பலத்தை பாஜக பெருக்கிக்கொண்டது.

இப்படி பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவரும் நிலையில், எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்டி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டு, பின்பு தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறார் நிதிஷ்குமார். இதனைத் தொடர்ந்தே பாஜகவிற்கு எதிரான மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலைச் சந்திக்கும் முன்னெடுப்புகளை மேற்கொண்டார். ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளைச் சந்தித்து நிதிஷ் குமார் பேசினார். அதன் விளைவாக பீகாரில் கடந்த மாதம் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை “ஃபோட்டோ ஷூட் கூட்டம்” என்று அமித்ஷா விமர்சனம் செய்தார்.

எதிர்க் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் நடத்த பொறுப்பேற்றுக் கொண்டது. அதுவும் தனிப்பெரும்பான்மையில் பாஜகவை வீழ்த்திய கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடத்துவதாக அறிவித்து ஜூலை 17 & 18ல் நடத்தியும் காட்டியது. அடுத்தக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகார், கர்நாடகா அடுத்து மகராஷ்டிரா என எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த மாநிலங்களைத் தேர்ந்தெடுப்பதிலேயே ஒரு உள்நோக்கம் இருப்பதாகப் பலரால் பேசப்பட்டு வருகிறது. இதற்கான காரணமாக, ‘ஆப்ரேஷன் லோட்டஸ்’ மூலம் நேராகவோ, மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இந்த பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளது என்கிறார்கள் அரசியலை கூர்ந்து கவனிப்பவர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT