ADVERTISEMENT

“இபிஎஸ் இன்னிக்கு ஜெயிக்கலாம்... ஆனா டெல்லி கணக்கு வேற” - ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் நம்பிக்கை

06:08 PM Feb 28, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பைத் தந்துள்ளது உச்சநீதிமன்றம். இதனால் ஒட்டுமொத்த ஓ.பி.எஸ். முகாமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

கடந்த 20 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., கட்சியின் சீனியர்களிடம் தனிப்பட்ட முறையில் விவாதித்தபோது... பா.ஜ.க. மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். அதுகுறித்து நம்மிடம் மனம் திறந்த ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவு மா.செ.க்கள்...

"கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு சீனியர்களுடன் தனியாக விவாதித்த ஓ.பி.எஸ்., பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார். கட்சியின் பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்துவிட்டால் ஏக மகிழ்ச்சியில் முப்பெரும் விழாவை நடத்தலாம். அந்த விழா, கட்சியின் தொண்டர்கள் நம்மிடம்தான் இருக்கிறார்கள் என்ற இமேஜை துரோகிகளுக்கு ஏற்படுத்தும். அதனால், ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் பேசுகிறபோது மோடி, அண்ணாமலை, பா.ஜ.க., தி.மு.க. பற்றி யாரும் விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார் ஓ.பி.எஸ்.


தி.மு.க., பா.ஜ.க.வைப் பற்றி நாம் ஏன் விமர்சிக்கக் கூடாது? என்கிற கேள்வி சீனியர்களிடம் இருந்தது. அதனால், "எடப்பாடியும் அண்ணாமலையும் சேர்ந்து கொண்டுதான் உங்களுக்கு எதிரான அரசியலை பா.ஜ.க.விடம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கூட்டுச் சதியை நம் நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொண்டால்தானே நமக்கான அரசியலை முன்னெடுக்க முடியும்? பா.ஜ.க.வுக்கு நாம் ஏன் பயப்பட வேண்டும்?” என்றெல்லாம் ஓ.பி.எஸ்.ஸிடம் சீனியர்கள் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு, "கட்சியின் பொதுக்குழு வழக்கு குறித்து டெல்லியில் பேசிக் கொண்டிருக்கேன். வழக்கின் தீர்ப்பு வரட்டும். பிறகு முடிவு செய்யலாம்” என்று சொல்லி அவர்களின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஓ.பி.எஸ். ஆனாலும், எடப்பாடியின் மகுடிக்கு கட்டுப்பட்டு ஆடும் பாம்பாகத்தானே பா.ஜ.க. இருக்கிறது? இல்லைன்னா… இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு கிடைத்திருக்குமா? நம்மளை நம்ப வைத்து ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றெல்லாம் பல விசயங்களை சீனியர்கள் சொல்ல, "அப்படியெல்லாம் யோசிக்காதீர்கள். இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணிதான் ஜெயிக்கும். சின்னம் கிடைத்தும் எடப்பாடி தோற்றுப் போனார் என்கிற சூழல்தான் வரும். இதைத்தான் டெல்லியும் எதிர்பார்க்கிறது. அப்படி ஏற்படும் தோல்வியை வைத்தே அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் தங்களின் திட்டத்திற்கு எடப்பாடியை சம்மதிக்க வைக்க முடியும் என பா.ஜ.க. நினைக்கிறது. அதற்காகத்தான் எடப்பாடி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது போல டெல்லி பார்த்துக்கொண்டது. மேலும், ‘நீண்ட காலம் காத்திருந்துவிட்டீர்கள்; இன்னும் கொஞ்சநாள் காத்திருங்கள். எல்லாம் சரியாகும்’ என எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள் பா.ஜ.க.., அதனால் பொறுமையை நாம் இழந்துவிட வேண்டாம்.


பொதுக்குழு வழக்கில் நமக்கு சாதகமான தீர்ப்பு வருகிறதா? என பார்ப்போம். டெல்லியிலிருந்து எனக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கையின் உண்மையை அந்த தீர்ப்பை வைத்து முடிவு செய்யலாம்” என விளக்கமளித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அதற்கேற்ப, ஆலோசனை கூட்டத்தில் பேசிய சீனியர்களும் பா.ஜ.க.வை பற்றியோ, அண்ணாமலை பற்றியோ விமர்சிக்கவில்லை என்றனர் மா.செ.க்கள்.


எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் பா.ஜ.க.வை ஓ.பி.எஸ்.ஸும் மாநில நிர்வாகிகளும் கடுமையாக விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்த்த கட்சி நிர்வாகிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எடப்பாடியின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சிக்கக் கூட ஓ.பி.எஸ். தயாராக இல்லை எனும்போது யாருக்காக இவர்கள் பயப்படுகிறார்கள்? என்கிற முணுமுணுப்புகள் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடம் எதிரொலிக்கவே செய்தன.


ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டவர்களை மா.செ.க்களும் மாவட்ட நிர்வாகிகளும் சந்தித்து, தங்கள் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறார்கள். அப்போது, "எந்த ஒரு விசயத்திலும் நமக்கு சாதகமான சூழல்கள் இல்லாதபோது எந்த நம்பிக்கையில் நாங்கள் அரசியல் செய்வது? மாவட்டத்திலுள்ள எடப்பாடியின் எம்.எல்.ஏ.க்களும் ஆதரவாளர்களும் எங்களிடம் வந்து, ‘ஓ.பி.எஸ்.ஸை நம்பி அரசியல் எதிர்காலத்தை இழக்காதீர்கள்; தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் எடப்பாடி விரும்புகிறார். கட்சி தலைமையும் எடப்பாடிக்கு சாதகமாகும். அதனால் எங்கள் பக்கம் வந்துவிடுங்கள்' என அழைக்கிறார்கள். நாங்களோ அதற்கு மயங்கிவிடாமல், எடப்பாடிக்கு எதிரான அரசியலை வேகமாக முன்னெடுக்க விரும்பினால்... நீங்கள் என்னவோ கூட்டத்தை உப்பு சப்பில்லாமல் முடித்திருக்கிறீர்கள். இப்படியே போனால் தொண்டர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது'' என்று தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தநிலையில்தான் பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஓ.பி.எஸ். தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், ‘ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுவின் முடிவுகள் செல்லும். அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ்.ஸை நீக்கியது செல்லும். சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு நடந்துள்ளதால், அதன்மீது எவ்வித உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை’ என்று உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. ஒற்றைத் தலைமையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதும் ஓ.பி.எஸ்.ஸை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் என்பதும் ஓ.பி.எஸ். தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.


அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கத் தொடங்கியுள்ளார் ஓ.பி.எஸ். "பா.ஜ.க.வை நம்பி மோசம் போன ஓ.பி.எஸ்., தனிக்கட்சி ஆரம்பிப்பது தவிர வேறு வழியில்லை” என்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT