Skip to main content

விஸ்வரூபம் எடுக்கும் ஓபிஎஸ்... மறைமுக அரசியல் செய்யும் எடப்பாடி... அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு!

"இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாகவே செயல்படுகிறோம். தி.மு.க.வினர் தான் சிண்டு முடிகிறார்கள் என்றும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். சீர்குலைக்கும் முயற்சிகள் பலிக்காது என்றும் அமைச்சர்கள் தரப்பிலிருந்து யாராவது ’வாய்ஸ்’ கொடுப்பார்கள். சால்வை அணிவிப்பது, பூங்கொத்து தருவது போன்ற இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். படங்களை அவ்வப்போது வெளியிட்டு இருவருக்குமான ஒற்றுமையை நிரூபித்த வண்ணம் இருக்கிறது எங்க கட்சி. திரைமறைவில் நடப்பதோ முற்றிலும் வேறானது'' இப்படி நம்மிடம் ஆதங்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் நடந்தவற்றை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார்.

 

admk"அண்ணனும் அவர் பையனும் இப்ப அமெரிக்கா போயிருக்காங்கள்ல. அதுபத்தி பெரிய அளவுல மீடியாவுலயோ, சோஷியல் மீடியாவுலயோ எதுவும் வரக்கூடாதுன்னு எடப்பாடி மகனோட டீம் சைலன்ட்டா வேலை பார்த்துக்கிட்டிருக்கு. இப்பல்லாம் நமது அம்மா பேப்பர்ல ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்புங்கிற பேர்லதான் அறிக்கை வெளியிடறாங்க. இதெல்லாம் தங்கமணி, வேலுமணி பண்ணுற வேலை தான். "நமது அம்மா' கட்சி பேப்பர்தான. அதுல கூட்டுறவு வங்கியில பொறுப்பு கொடுத்ததுக்கு நன்றி தெரிவிச்சு விளம்பரம் வருது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி படம் ஃபுல் சைஸ்ல. ஓ.பி.எஸ். படம் பார்த்தீங்கன்னா ஸ்டாம்ப் சைஸ்ல. கட்சிக்காரர் ஒருத்தர் அப்படியே இந்த மாதிரி ஒரு விளம்பரம் தந்தாலும், அதைச் சரிபண்ண வேண்டாமா? பதவிக்கு ஓ.பி.எஸ். அண்ணன் மரியாதை தர்றாரு. அவ்வளவுதான். அந்த மரியாதை எடப்பாடி தரப்புல இருந்து கிடைக்குதா? இல்லியே!
 

admkஅன்னைக்கு நைட் ஓ.பி.எஸ். அமெரிக்கா கிளம்புறாரு. அப்ப தமிழ்நாட்டுல இருந்து மட்டுமில்ல.. கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரில இருந்தெல்லாம் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள்லாம் வந்துட்டாங்க. கட்சித்தலைவர் இவருதான்னு பொக்கே கொடுக்கிறதுக்கு வரிசை கட்டி நிக்கிறாங்க. கட்டுக்கடங்காத கூட்டம். அதே மாதிரி தான்.. சென்னை தலைமைச் செயலகத்துலயும் கூட்டம். ஓ.பி.எஸ்.ஸுக்கு இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும்போது, நாம போயி பார்க்கலைன்னா நல்லா இருக்காதுன்னு சி.எம்.மும் ஓ.பி.எஸ். வீட்டுக்கு கிளம்பி வந்துட்டாரு. உடனே இவரு போயி அவரை ரிசீவ் பண்ணுறாரு. சால்வை போட்டு பொக்கே எல்லாம் கொடுத்து போட்டோ எடுத்துக்கிட்டாரு சி.எம். ஆனா.. மறுநாள் ஒருசில பேப்பர்ல அது எப்படி வருதுன்னா.. துணை முதல்வர் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் போறதுன்னால, முதல்வரை சந்தித்து சால்வை அணிவித்து ஆசிபெற்றார்ன்னு வருது. சி.எம். வெளிநாடு போறப்ப, அவரு வீட்டுக்கு ஓ.பி.எஸ். போயி மரியாதை நிமித்தமா சால்வை போட்டுட்டு வந்தாரு. ஓ.பி.எஸ். எடப்பாடிக்கு சால்வை போட்ட அந்தப்படம்தான் இப்ப போட்ட மாதிரி வருது.


பளிச்சின்னு வெளிய தெரியாத, ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரான குசும்பு வேலை அங்கே நெறய நடந்துக்கிட்டிருக்கு. இதுக்கெல்லாம் தங்கமணியும் வேலுமணியும் உடந்தை. ஆனா.. கட்சித் தொண்டர்கள் இத விரும்பல. இப்பல்லாம் எடப்பாடியோட பேச்சே மாறிருச்சு. அம்மா ஆட்சின்னு சொல்லிக்கிட்டிருந்தவரு "என் ஆட்சியில்'னு பேசுறாரு. அம்மா ஆட்சி... பொது வாழ்க்கைல என்னை இந்த இடத்துக்கு கொண்டுவந்த அம்மாவுக்கு இந்த விருதுகளெல்லாம் சமர்ப்பணம்னு சொல்லுறாரு ஓ.பி.எஸ். என் ஆட்சின்னு எடப்பாடி சொல்லுறத தொண்டர்கள் எப்படி விரும்புவாங்க? இவங்க எவ்வளவு தூரம் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரா சதிவேலை பண்ணுறாங்க தெரியுமா? ஓ.பி.எஸ்.ஸுக்கு இப்ப இருக்கிற ஆறுதல் அவரோட பையன் ரவீந்திரநாத்குமார்தான். அதனாலதான்.. வயித்துல இருக்கிற பையில குட்டியைத் தூக்கி வச்சிக்கிற கங்காரு கணக்கா.. வெளிநாட்டுக்கும் அவரைக் கூட்டிட்டுப் போயிருக்காரு. வெளில பார்க்கிறதுக்கு வேணும்னா வாரிசு அரசியலா தெரியும். ஆனா.. இதுல கட்சியோட எதிர்காலமும் அடங்கியிருக்கு.


ஜெயலலிதாவ அம்மான்னு சொன்ன மாதிரி... எல்லாரும் தன்னை அய்யான்னு சொல்லணும்னு எதிர்பார்க்கிறாரு எடப்பாடி. இல்லைன்னா.. தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் தியேட்டர்களில் வெளியான விளம்பரத்தில், குருக்களிடம் ஒரு பெண், ‘நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா பெயருக்குத் தான் அர்ச்சனை’ என்று பேசுவதுபோல் ‘சீன்’ வைத்திருப்பார்களா? எடப்பாடி யோட கண்ணசைவில் ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிரான வேலை பார்க்கிறதுல முக்கிய பங்கு யாருக்குன்னா.. சி.எம். அலுவலகத்துல பொறுப்பான ஒரு இடத்துல இருக்கிற கவுண்டர் ஒருத்தருக்குத்தான். தமிழ்நாட்டுல இருக்கிற முக்கியமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிங்க எல்லாருமே கவுண்டருங்கதான். ஓ.பி.எஸ். அண்ணன் நடக்கிறதயெல்லாம் வேடிக்கை பார்த்துட்டு, கட்சிதான் முக்கியம்னு அமைதி காத்துட்டு இருக்காரு. அதனாலதான்.. கட்சியில தொண்டர்கள் மத்தியில ஓ.பி.எஸ்.ஸுக்கு செல்வாக்கு கூடிக்கிட்டே இருக்கு. எடப்பாடி டீமும் ஓ.பி.எஸ். பெயரை எந்த வழிலயாச்சும் இருட்டடிப்பு பண்ணணும்னு துடியா துடிக்குது. உள்ளத சொல்லுறேன். இன்னும் சரியா சொல்லணும்னா.. தென் மாவட்டத்துல இருக்கிற எங்க கட்சிக்காரங்க எல்லாருக்குமே எடப்பாடி மேல வருத்தம் இருக்கு. ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்துனாருல்ல. பார்த்துக்கிட்டே இருங்க.. ஒருநாள் விஸ்வரூபம் எடுப்பாரு'' என்று கொட்டித் தீர்த்தார்.

ஆதரவாளர்கள் உள்ளுக்குள் எத்தனை குமுறினாலும் எதையும் கண்டுகொள்ளாதவராகவே ஓ.பி.எஸ். தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்