ADVERTISEMENT

வானளாவிய அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம்... இனி எல்லாமே ராஜபக்சே குடும்பம்தான்! அதிகாரப்பூர்வ சர்வாதிகாரம்!

10:45 AM Sep 14, 2020 | rajavel

ADVERTISEMENT

இலங்கையின் சர்வாதிகாரியாக உருவெடுக்கிறார் அதிபர் கோத்தபாய ராஜபக்சே. இதற்காக இலங்கையின் அரசியலமைப்பு சட்டம் திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அக்டோபரில் கூடும் நாடாளுமன்றத்தில் இது சட்டமாக்கப்படும் என்கின்றன கொழும்புவிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

ADVERTISEMENT

இலங்கை அதிபருக்கான நிறைவேற்றும் அதிகாரம் முந்தைய அதிபர் மைத்ரிபால சிரிசேன ஆட்சியில் குறைக்கப்பட்டிருந்தது. கடந்த வருடம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான கோத்தபாய ராஜபக்சே, அதிபருக்கான அதிகாரத்தை கூடுதலாக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நினைத்தாலும் அப்போதைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாததால் கோத்தபாய ராஜபக்சேவின் விருப்பம் நிறைவேறவில்லை.

இந்த சூழலில், அண்மையில் நடந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றியது. பிரதமரானார் கோத்தபாயவின் சகோதரர் மகிந்த ராஜபக்சே. இன படுகொலை களின் போர்க் குற்றவாளிகளான கோத்தபாய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆக்டோபஸ் கரங்கள் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை முழுமையாக கபளீகரம் செய்திருப்பதால் அரச ஜன நாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எதிரொலிக்கச் செய்தன.

இந்த நிலையில்தான், அதிபருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கும் வகையில், இலங்கை அரசியலமைப்பில் 20-வது சட்டத் திருத்தத்தை செய்திருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே. அரசியலமைப்பு சட்டத்தில் 20-வது திருத்தம் செய்வது குறித்து ஆராய மூத்த வழக்கறிஞரும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு நெருக்கமானவருமான ரமேஷ் டி சில்வா தலைமையில் ஒரு குழுவை அமைத்திருந்தார் கோத்தபாய. இந்த குழு, கோத்தபாயவின் அதிகாரத்தை அரசியல்ரீதியாக எந்தெந்த வழிகளில் வலிமையாக் கலாம் என ஆராய்ந்து பல்வேறு ஷரத்துகளை பரிந்துரைத்தது. அந்த ஷரத்துகளை கோத்தபாய ராஜ பக்சே, மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் ஆராய்ந்து சின்னச் சின்ன மாற்றங்களை செய்தனர். இதனையடுத்து, கோத்தபாயவுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கும் 20வது சட்டத்திருத்தம் இலங்கை அரசின் அரசிதழில் (கெஜெட்) வெளியிடப்பட்டுள்ளது.

அந்த சட்டத் திருத்தத்தில், நாடாளுமன்றம் பொறுப்பேற்று ஒரு வருடம் முடிந்த நிலையில், அதிபர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம். இலங்கையின் பிரதமர் உள்பட அமைச்சர்கள் அனைவரையும் பதவியிலிருந்து அதிபர் நீக்கலாம். இதனை எதிர்த்து அதிபருக்கு எதிராக விசாரணை அமைப்புகள் எதுவும் உத்தரவிட முடியாது. நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்கிற நெறிமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம். தேர்தல் ஆணையம், பணியாளர்கள் தேர்வாணையம் உள்ளிட்ட முக்கிய ஆணையங்களின் தன்னாட்சி அதிகாரம் கலைக்கப்பட்டுள்ளன. அதே சமயம், அந்த ஆணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அதிபருக்கு வழங்கப்பட் டுள்ளது. அடிப்படை உரிமை என இதனை எதிர்த்து யாரும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த சட்டத்திருத்தம் தற்போது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சர்வதேச அளவில் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கேற்ப சட்டத் திருத்தங்கள் இருக்கும் என்றே சர்வதேச நாடுகளும், இலங்கையில் சிங்களவர்கள் அல்லாத சிறுபான்மை மக்களும் நினைத்தி ருந்தனர். ஆனால், இலங்கையின் சர்வாதிகாரியாக கோத்தபாயவை நிலை நிறுத்தும் வகையில் சட்டத்திருத்தங்கள் செய்யப்படும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

கோத்தபாயவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் இந்த சட்டத்திருத்தம், இலங்கையில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) கஜேந்திரன் செல்வராசாவிடம் நாம் கதைத்தபோது, "இலங்கையின் ஜனாதிபதியாக ஜே.ஆர். ஜெய வர்த்தனா 1978-ல் இருந்தார். அப்போது, நிறைவேற்றும் அதிகாரம் தம்மிடமே இருக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கேற்ப அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி அமைத்தார் ஜெயவர்த்தனே. அதன்மூலம், இலங்கையின் சர்வ அதிகாரமும் அவரிடம் அடைக்கலமானது. நிறைவேற்றும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருப்பது ஜனநாயக கோட்பாடுகளில் பல்வேறு சிக்கல்களை உருவாக்குவதாக சர்ச்சைகள் தொடர்ச்சியாக எதிரொலித்தபடி இருந்தது. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், அதிபர் மைத்ரிபால சிரிசேன- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் முந்தைய ஆட்சி காலத்தில் ஜனாதிபதிக்கான நிறைவேற்றும் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் அரசியலமைப்பின் 19-வது சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. அதில் பிரதமருக்கென சில அதிகாரங்கள் இருந்தன.

இவை, அதிபர் கோத்தபாயவின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. நடந்து முடிந்த தேர்தலில் ராஜபக்சேக்களுக்கு மிருக பலத்துடன் பெரும்பான்மை கிடைக்க, இதோ, அதிபரின் அதிகாரத்தை வலிமைப்படுத்தவும் பிரதமரை ரப்பர் ஸ்டாம்பாக மாற்றும் வகையிலும் 20-வது சட்டத்திருத்தத்தை செய்து முடித்துள்ளார் கோத்தபாய ராஜபக்சே. இதன் மூலம் இலங்கையின் நாடாளுமன்ற ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருப்பதுடன் ஒட்டு மொத்த ஜனநாயக சக்திகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் அனைத்து தரப்பினருக்கும் இது ஆபத்தானதுதான்.

உள்நாட்டு யுத்தம் முடிந்த பிறகான கடந்த 11ஆண்டுகளில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் அதிகரித்து விட்டது. இனி, இன்னும் அதிகரிக்கும். தமிழர்கள் தரப்பில் வைக்கப்பட்ட எந்த ஒரு கோரிக்கைகளுக்கும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பல்வேறு பிரச்சனைகளை தமிழர்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், அதிபர் கோத்தபாயவிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம், தமிழர்களை அச்சம் கொள்ள வைக்கிறது. நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்படும் போது, அதனை எதிர்த்து வாக்களிப்போம்'' என்கிறார்.

நாடாளுமன்றத்தின் முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கதைத்தபோது, "ராஜபக்சேக்களின் குடும்ப நலனை முன்னிறுத்தியே சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட ஷரத்துகள் ஒவ்வொன்றும் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. அப்படித் திருத்தப்பட்ட ஷரத்துகளில், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என சொல்லப் பட்டுள்ளது. இதன் பின்னணியில் இருப்பது ராஜபக்சேக்களின் குடும்ப நலன்தான். அதாவது, இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கை தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால்தான் அமெரிக்க குடியுரிமையும் பெற்றவரான கோத்தபாய ராஜபக்சே, கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட முயற்சித்தபோது, சட்ட சர்ச்சைகள் எழுந்தன. அதனால், தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தினார். குடியுரிமை ரத்தும் செய்யப்பட்டது. அதன்பிறகே, அதிபர் தேர்தலில் போட்டியிட்டார் கோத்தபாய. தான் இழந்த அமெரிக்க குடியுரிமையை மீண்டும் பெறுகின்ற வகையில் அரசியல் சட்டத்தின் திருத்தத்தை ஏற்படுத்த முடிவு தற்போது செய்துள்ளார்.

கோத்தபாயவை போலவே, இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமைப் பெற்றவர் அவரது மற்றொரு சகோதரரான பசில் ராஜபக்சே. இதனாலேயே, சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பசில் போட்டியிட முடியவில்லை. தற்போது சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருப்பதால், தேர்தலில் இனி அவர் போட்டியிட முடியும். தேர்தலை எதிர்கொள்ளாமலே ஒருவரை அமைச்சராக்கவும் கோத்த பாய ராஜபக்சேவிற்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கைக் கிருந்த கட்டுப்பாடு நீக்கப் பட்டிருப்பதால், இனி தனது குடும்பத்தினர் பலரையும் தனது ஆதரவு ராணுவத்தினரையும் எத்தனை பேரை வேண்டுமானாலும் அமைச்சர்களாக்க கோத்தபாயவால் முடியும்.

ஏற்கனவே அரசின் பல்வேறு திணைக்களங்களின் (துறைகள்) தலைமைப் பொறுப்புகளும், அமைச்சர்களின் செயலாளர் பதவிகளும் ராணுவத் திணைக்களத்தில் பணிபுரிந்த அதிகாரிகளையே நியமித்திருக்கிறார். இப்படி, அரசியலமைப்பு சட்டத்தின் 20-வது சட்டத்திருத்தத்தின் ஒவ்வொரு ஷரத்துகளின் பின்னணிகளையும் முழுமையாக ஆராய்ந்தால், இலங்கையில் முழுமையாக ராணுவ கட்டமைப்பை உள்ளடக்கிய ராணுவ ஆட்சியை நிலை நிறுத்தும் கோத்தபாய ராஜபக்சேவின் திட் டம் அம்பலமாகும். தற்போது அதிபருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் மட்டுமே திருத்தம் செய்துள்ளனர். இது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டதற்கு பிறகு, அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக மாற் றும் வகையில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் திட்டத்திலும் ராஜபக்சே சகோதரர்கள் இருக்கின்றனர். கோத்தபாயவின் 20-வது சட்டத்திருத்தம் இலங்கையின் ஜனநாயகத்துக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவுகள் மிக ஆபத்தானவை'' என்கிறார்.

ஜே.ஆருக்கு (ஜெயவர்த்தனே) பிறகு இலங்கையின் சர்வாதிகாரியாக உருவாகியுள்ளார் ஜீ.ஆர். (கோத்தபாய ராஜபக்சே).

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT