ADVERTISEMENT

ரத்தம் சிந்தாமல் வடகொரியாவில் மக்கள் அரசு! கொரியாவின் கதை #12

12:26 PM Sep 01, 2018 | Anonymous (not verified)



வடகொரியாவை கைப்பற்றிய சோவியத் ரஷ்யாவின் செஞ்சேனை பியாங்யாங் நகருக்குள் நுழைந்தது. செஞ்சேனை நுழைந்த பகுதியில் எல்லாம் மக்கள் குழுக்கள் அந்த ராணுவத்தை வரவேற்றன.

புகழ்பெற்ற விடுதலைப் போராட்டத் தலைவர் சோ மேன்-சிக் தலைமையில் கொரியா விடுதலைக்கு தயாரிப்பு வேலைகளில் ஒரு குழு ஈடுபட்டிருந்தது. அந்தக் குழுவை சோவியத் செஞ்சேனை தனக்கு உதவியாகக் கொண்டது.

சோவியத் தளபதியான டெரென்ட்டி ஷ்டைகோவ் சோவியத் மக்கள் நிர்வாகக் குழுவை அமைத்தார். அந்தக் குழு எல்லா கிராமங்களிலும் மக்கள் குழுக்களை அமைத்தது. அந்தக் குழுக்களில் கம்யூனிஸ்ட்டுகள் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர்.

கொரியாவின் விடுதலை குறித்தும், புதிய அரசு அமைப்பது குறித்தும் சோவியத் மற்றும் அமெரிக்கா பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் கூட்டங்களில் டெரண்ட்டி பங்கேற்றார். அதேசமயம், தென்கொரியா குறித்த விவகாரங்கள் குழப்பமான நிலையை எட்டியிருந்தது. ஆனால், 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சோவியத் செஞ்சேனை வடகொரியாவில் இடைக்கால அரசாங்கத்தை அமைத்தது. அந்த அரசாங்கம் கிம் இல்-சுங் தலைமையில் அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

சோ மேன்-சிக்

ADVERTISEMENT



கிம் இல் சுங் வட கொரியா தலைநகர் பியாங்யாங் அருகே 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி பிறந்தவர். இவருடைய பெற்றோர் புராட்டெஸ்டெண்ட் கிறிஸ்தவ பிரிவில் முக்கியமான பொறுப்புகளில் இருந்தார்கள். ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்ததால் அரசின் மிரட்டலுக்கு அஞ்சி, 1920ல் மன்சூரியாவுக்கு குடியேறினார்கள். 1910 ஆம் ஆண்டு கொரியாவை ஜப்பான் ஆக்கிரமித்தவுடன் ஏராளமான கொரியா குடும்பங்கள் மன்சூரியாவுக்கு குடிபெயர்ந்தன. கிம் இல் சுங்கின் பெற்றோர் ஜப்பான் ஆதிக்கத்தை எதிர்த்து போராடினார்கள். 1912 ஆம் ஆண்டு 52 ஆயிரம் பேரை ஜப்பான் ராணுவம் கைது செய்து சிறையி்ல் அடைத்தது. இத்தகைய ஒடுக்குமுறைகள்தான் ஏராளமான கொரியா்களை மன்சூரியாவுக்கு தப்பி ஓடச் செய்தது.


மன்சூரியாவில் தனக்கு 14 வயதான சமயத்தில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சங்கத்தை கிம் இல் சுங் அமைத்தார். அதே ஆண்டு வாசுங் ராணுவ பயிற்சிக் கழகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். அங்கு கொடுக்கப்பட்ட பயிற்சி மிகவும் பழசாக இருப்பதாக கருதினார். 1927ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறினார். பின்னர் சீனாவில் உள்ள ஜிலின் மாகணத்தில் நடுநிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1930ஆம் ஆண்டுவரை அங்கு படித்தார். அங்கு படிக்கும்போதுதான் கொரியாவின் மூத்த தலைமுறையின் பழைய நிலபிரபுத்துவ நடைமுறைகளை கைவிட்டு கம்யூனிஸ்ட் கொள்கைகளில் ஈடுபாடு காட்டினார். அவருடைய புரட்சிகர நடவடிக்கைகளைக் கண்ட போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

சீனாவில் 17 வயதிலேயே தலைமறைவு கம்யூனிஸ்ட் உறுப்பினராக ஆனார். 20 பேர் கொண்ட குழுவில் இவரே இளையவர். இவர்களை ஹோ சோ என்ற மூத்த தோழர் வழிநடத்தினார். தெற்கு மன்சூரியா கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கம் என்ற பிரிவை இவர்கள் தொடங்கினார்கள். 1929 ஆம் ஆண்டு இந்தக் கிளை தொடங்கப்பட்ட மூன்றே வாரத்தில் போலீஸ் கண்டுபிடித்தது. 1929 ஆம் ஆண்டு கிம் இல் சுங்கை கைதுசெய்து பல மாதங்களுக்கு சிறையில் அடைத்தது.


கிம் இல் சுங்



1931 ஆம் ஆண்டு கிம் விடுதலையானவுடன் சீனா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கொரியா கம்யூனிஸ்ட் கட்சி தேசியவாதத்தை அதிகமாகக் கொண்டிருந்ததால் அது கலைக்கப்பட்டது. சீனாவின் வடக்குப் பகுதியில் இயங்கிய ஜப்பான் எதிர்ப்பு கொரில்லாக் குழுக்களில் இணைந்து செயல்பட்டார். மன்சூரியா ஜப்பான் ஆக்கிரமிப்பதற்கு முன்னரே, அங்கு வாழ்ந்த ஜப்பானியருக்கு எதிராக மன்சூரியர்கள் ஆத்திரம் அடைந்திருந்தனர்.

அந்த ஆத்திரம் காரணமாக 1930 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி ஜப்பானியர்களுக்கு எதிராக திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். திட்டமிடப்படாத, நோக்கமற்ற இந்தத் தாக்குதலில் பல கிராமங்கள் அழிக்கப்பட்டன. ஆனால், அரசு நிர்வாகம் இந்த தாக்குதலை எளிதாக முறியடித்தது.


இந்தத் தோல்விக்குப் பிறகு 1931 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி மன்சூரியாவில் இளம் கம்யூனிஸ்ட் அமைப்பில் கிம் பேசினார். அப்போது, இதுபோன்ற திட்டமிடப்படாத எழுச்சிகள் பலனளிக்காது என்று எச்சரிக்கை விடுத்தார்.

1935 ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி ஜப்பான் எதிர்ப்பு ராணுவம் ஒன்றை அமைத்தது. கொரில்லா போராளிக் குழுவான இதில் கிம் இல் சுங்கும் இடம்பெற்றார். அதே ஆண்டு, 160 வீரர்கள் அடங்கிய பிரிவுக்கு இவர் தலைவராக பொறுப்பேற்றார். இந்த பிரிவில்தான் வெய் ஸெங்மின் என்ற தோழரை சந்தித்தார். இவருக்கு முன்னோடியான வெய், மாவோவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த காங் செங் என்பவருக்கு தினமும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவர்.


கிம் இல் சுங் - மாவோ



1935 ஆம் ஆண்டுதான் தனது பெயரை கிம் இல் சுங் என்று மாற்றினார். அதுவரை அவருடைய பெயர் கிம் என்பது மட்டுமே. கிம் இல் சுங் என்றால் சூரியனாகப் போகும் கிம் என்று அர்த்தம். 1937 ஆம் ஆண்டு 24 ஆவது வயதில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட கொரில்லா பிரிவுக்கு தளபதியானார். அந்தப்பிரிவு கிம் இல் சுங்கின் பிரிவு என்றே அழைக்கப்பட்டது. இவர் தலைமைப் பொறுப்பேற்ற சமயத்தில் 1937, ஜூன் 4 ஆம் தேதி கொரியாவின் எல்லைக்குள் உள்ள போச்சோன்போ என்ற நகரின் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றினார். பின்னர் அதை ஜப்பான் மீட்டாலும், இது மாபெரும் வெற்றியாக கருதப்பட்டது.


கிம் பெற்ற இந்த வெற்றி, சீனாவின் கொரில்லா குழுக்கள் மத்தியில் அவருக்கு புகழைப் பெற்றுக் கொடுத்தது. ஜப்பானியரின் தேடப்படுவோர் பட்டியலில் இவருடைய பெயர் இடம்பெற்றது. இவரைப் பிடிப்பதற்காக கிம் ஹை சன் என்ற பெண்ணை ஜப்பானியர் கடத்தினார்கள். அந்தப் பெண் கிம்மின் முதல் மனைவி என்கிறார்கள். அவரை பிணையாக வைத்து கிம்மை பிடிக்க ஜப்பானியர் முயன்றனர். ஆனால், கிம் சரணடையவில்லை. அந்தப் பெண்ணை ஜப்பானியர் கொன்றுவிட்டனர். அதன்பிறகு, சீனாவின் கொரில்லா ராணுவப் பிரிவுகளை ஜப்பான் ராணுவம் வேட்டையாடியது. இதையடுத்து, 1940 ஆம் ஆண்டு கடைசியில் எஞ்சியிருந்த கொரில்லா வீரர்களுடன் சோவியத் யூனியனுக்கு தப்பிச் சென்றார் கிம். அங்கு சோவியத் செஞ்சேனை கிம் உள்ளிட்ட கொரியா கொரில்லா வீரர்களுக்கு மறுபயிற்சி அளித்தது. செஞ்சேனையில் கிம் மேஜர் அந்தஸ்து பெற்றார்.


இரண்டாம் உலகப்போரில் சோவியத் செஞ்சேனையில் கிம் இல் சுங்கின் பங்கும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. கொரியாவின் வடக்குப்பகுதியை சோவியத் ராணுவம் கைப்பற்றிய சமயத்தில், அந்தப் பகுதிக்குத் தலைவராக கொரியா கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரை பரிந்துரைக்கும்படி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதையடுத்து, கிம் இல் சுங்கின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் கிம் கொரியாவில் இல்லை. வேறு பகுதியில் இருந்த கிம் இல் சுங் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆண்டுகளுக்குப் பிறகு கொரியாவுக்குள் நுழைந்தார்.

கிம்மிற்கு கொரியா மொழி தெரியுமே தவிர, வாசிக்கத் தெரியாது. அவர் படித்தது முழுக்க சீன மொழியில் என்பதால், அவசர அவசரமாக கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு அறிக்கையை வாசிக்க அவர் விரைவாக பயிற்சிபெற்றார். 1945 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரியா கம்யூனிஸ்ட் கட்சியின் வடகொரியா பிரிவின் தலைவராக கிம் நியமிக்கப்பட்டார். இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தாலும், சோவியத் பிரதிநிதியான ஷ்டைகோவ் தலையீடுதான் அதிகமாக இருந்தது.

ஷ்டைகோவ்



தற்காலிக அரசு அமைக்கப்பட்டவுடன் 1946 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வடகொரியாவில் மிகப்பெரிய நிலச்சீர்திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஜப்பானியருக்கும் நிலபிரபுக்களுக்கும் சொந்தமான நிலம் முழுவதும் கையகப்படுத்தப்பட்டது. அவை அனைத்தும் ஏழை விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. நிலம் சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருந்த நிலை மாற்றப்பட்டு நிலம் அனைவருக்கும் சொந்தம் என்று மாற்றப்பட்டது. வடகொரியாவில் இந்த நடவடிக்கையின்போது பெரிய அளவில் வன்முறை ஏதும் நிகழவில்லை என்று அமெரிக்காவே பதிவு செய்திருக்கிறது. அதுவரை அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த கிராமத் தலைவர்களின் அதிகாரம் பிடுங்கப்பட்டது. அதேசமயம், அவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிடாமல் தடுக்கும் நடவடிக்கையிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. நிலம் பறிக்கப்பட்ட முன்னாள் முதலாளிகள் தென்கொரியாவுக்கு தப்பி ஓடினார்கள். அந்த வகையில் 4 லட்சம் வடகொரியா மக்கள் தென்கொரியாவுக்கு ஒடிவந்தனர் என்று அமெரிக்கா ராணுவம் தெரிவித்தது. ஜப்பானிய ஆதிக்கத்தில் தென்கொரியாவில் விவசாயத்தையும், வடகொரியாவில் தொழிற்சாலைகளையும் உருவாக்கினார்கள். எனவே, வடகொரியாவில் இருந்த முக்கியத் தொழிற்சாலைகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது.

வடகொரியாவில் ரத்தமின்றி கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை நிறுவிய சோவியத் ராணுவம் 1948 ஆம் ஆண்டு வடகொரியாவை விட்டு வெளியேறியது.

(இன்னும் வரும்)

முந்தைய பகுதி:

கொரியா ஒற்றுமையை நிராகரித்த அமெரிக்கா! கொரியாவின் கதை #11

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT