ADVERTISEMENT

வடக்கத்தி சாமியார்களும் தெற்கத்தி சாமியார்களும்!

12:56 PM Apr 26, 2018 | vasanthbalakrishnan

நாடு முழுவதும் பாஜகவினர் மீது சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், மோடிக்கு நெருங்கிய குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆசாராம் பாபு

ADVERTISEMENT


அந்தச் சாமியாரும் 16 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்தான் தண்டனை பெற்றுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த அசுமல் சிருமலானி பின்னாளில் தனது பெயரை ஆசாராம் என்று மாற்றிக்கொண்டு சபர்மதி ஆற்றங்கரையில் சிறு குடிசையில் ஆசிரமம் தொடங்கினார். அதன் பிறகு அவருக்கு சீடர்களும் பக்தர்களும் அதிகரித்தனர். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் 400 ஆசிரமங்களை அவர் தொடங்கினார். உத்தரப்பிரதேசம் ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது சிறுமி இவருடைய ஆசிரமத்தில் சேர்ந்தார். மத்தியப்பிரதேசம் மாநிலம் சின்வாரா நகரில் உள்ள ஆசாராம் ஆசிரமத்தில் ஆன்மிக போதனைகளை கற்றுவந்தார்.

2013 ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் பாபு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வந்தார். அப்போது அந்த சிறுமியை அங்கு அழைத்துவர ஏற்பாடு செய்தார். அந்த ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய விடுதலை நாளன்று சிறுமியை தனது பாலியல் இச்சைக்கு பலியாக்கினார். சிறுமி அலறியடித்து, ஆசிரமத்திலிருந்து வெளியேறி பெற்றோரிடம் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து சாமியார் ஆசாராம் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு சீடர்கள் 4 பேருடன் கைது செய்யப்பட்டார். அப்போது சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் 5 ஆண்டுகளில் 12 முறை பல்வேறு நீதிமன்றங்களில் ஜாமீன் கேட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் அவருடைய வழக்கில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆயுளுக்கும் அவர் வெளியே வரமுடியாதபடி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த கேடுகெட்ட சாமியாருக்கு ஆதரவாக வன்முறை ஏற்படும் என்று கருதியதால், சிறைக்கே சென்று நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். ஆனால், வடக்கே குற்றம் புரிந்த சாமியார்களுக்கு ஆதரவாக நடக்கும் வன்முறைகளைப் போல தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு தந்தை பெரியாரால் இந்த மண் பக்குவப்பட்டிருக்கிறது.

பிரேமானந்தா


தமிழகத்தில் சாமியார்கள் இல்லை என்றோ, மூடநம்பிக்கைகள் இல்லை என்றோ சொல்லிவிட முடியாது. வடக்கத்தி மாநிலங்களில் இருப்பதைப் போல இங்கே கேவலமாக இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். வடக்கில் சுதந்திரமாக திரிவதைப் போல அகோரி அம்மண சாமியார்கள் தமிழ்நாட்டில் நடமாடிவிட முடியாது. கங்கை நீரில் அகோரி சாமியார்கள் பெண்களின் தலையில் கால் வைத்து ஆசி கொடுப்பதைப் போல இங்கே பார்க்கமுடியாது.

ஒரு பிரேமானந்தா கற்பழிப்பு வழக்கில் சிக்கியபோது அவருக்கு ஆதரவாக போராட அவருடைய ஆதரவாளர்கள் யாரும் முன்வரவில்லை. ஒரு நித்தியானந்தா பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி சீரழிந்தபோது அவருக்கு ஆதரவாக அவருடயை சீடர்கள் யாரும் போராட முன்வரவில்லை. இந்திய குடியரசுத்தலைவரிலிருந்து, மத்திய அரசாங்கம் வரை தனது அதிகாரத்தை செலுத்திவரும் காஞ்சி மட சாமியார் ஜெயேந்திரனும், விஜயேந்திரனும் பாலியல் மற்றும் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டபோது யாரும் அவர்களுக்காக பொங்கி எழவில்லை.

ஜக்கி


நேரடியாக மதத்துடன் தொடர்புடைய சாமியார்கள் தவிர, யோகா, மனவளம் என்ற போர்வையிலும் தமிழகத்தில் ஒரு சாமியார் வளர்ந்து வருகிறார். ஆடம்பர சாமியார் வரிசையில் வரும் இந்த மாதிரி ஆசாமிகள் பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதிமான்கள் என்று பலமான பின்புலத்தை ஏற்படுத்தி தாங்கள் நடத்தும் மடத்துக்குள் என்ன நடக்கிறது என்பதையே ரகசியமாக வைத்திருக்க முடிகிறது.

பல்வேறு கிரிமினல் பின்னணி இருப்பதாக கருதப்படும் ஜக்கி வாசுதேவ் மீது பல்வேறு தரப்பினரும் புகார் கூறிப் பார்த்தார்கள். வனவிலங்குகள் நடமாடும் காடுகளை அழித்து ஆசிரமம் கட்டியதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுந்தது. அரசு வனப்பகுதியை ஆக்கிரமித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜக்கியுடன் தமிழக அமைச்சர்களும், முதல்வரும் கைகோர்த்து காட்சி அளிக்கிறார்கள். நீதிபதிகளும் சினிமா நட்சத்திரங்களும் மேடையில் நிற்கிறார்கள்.

நித்தியானந்தா


ஒரு பக்கம் வனத்தை அழித்துவிட்டு, மறுபக்கம் நதிகளைக் காப்போம் என்று நாடகம் நடத்தும் ஜக்கியின் ஏமாற்று வேலை சாதாரணமான நபர்களுக்கே புரிகிறது. ஆனால், அவருக்கு உறுதுணையாக அமைச்சர்களும் முதல்வரும் இருந்தால் என்ன செய்ய முடியும்? ஆனால், தன்னை கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் வடக்கத்தி சாமியார்களின் ஆதரவாளர்கள் நடத்தும் ரவுடித்தனத்தையும், வியாபாரத் தந்திரத்தையும் அந்த மக்கள் புரிந்துகொள்ள மறுப்பதும், அந்த போலிச் சாமியார்களை அரசியல் கட்சிகள் தங்களுடைய நலனுக்காக தலையில் தூக்கிச் சுமப்பதும் வேதனையாக இருக்கிறது. மாடுகளுக்காக மனிதர்களைக் கொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது பகுத்தறியும் அறிவு எங்கே இருக்கப்போகிறது?

ஹரியானா மாநிலம் சிர்ஸாவில் குர்மீத்சிங் என்ற சாமியாரால் 5 மாநிலங்களை கலவர பூமியாக மாற்ற முடிகிறது. இத்தனைக்கும் கடவுள் என்று சொல்லிக்கொள்ளும் அந்த சாமியார் சினிமாவில் நடிப்பதையும், ஜிகினா டிரெஸ் மாட்டி மேடைகளில் பாட்டுக் கச்சேரி நடத்துவதையும், மகள் வயது பெண்களுடன் சல்லாபம் நடத்துவதையும் பார்த்தால் குமட்டிக்கொண்டுவருகிறது. ஆனால், இவ்வளவு கேவலமான அந்தச் சாமியாருக்கு ஆதரவாக அவருடைய ஆதரவாளர்கள் காட்டுமிராண்டிகளைப் போல வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஒரு நாட்டின் நீதித்துறைக்கே சவால் விடும் போக்கு இந்தியாவில் சாமியார்களால் மட்டுமே முடிகிறது.

குர்மீத்சிங்


ஆம். வெறும் நம்பிக்கை என்ற வார்த்தையை பயன்படுத்தி தமிழகம்மட்டுமின்றி தென்னிந்தியாவே செழித்து முன்னேற வழிவகுக்கும் சேதுசமுத்திர திட்டத்தையே காலி செய்ய நமது நீதித்துறை துணையாக இருக்கும். அந்த வகையில் கற்பழிப்பு சாமியார் குர்மீத் சிங்கிற்கு இரண்டு கற்பழிப்பு வழக்குகளிலும் மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த சாமியாரைப் போலவே இதே ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸார் என்ற இடத்தில் ஆசிரமம் கட்டி கூட்டம் சேர்த்தவர் சத்குரு ராம்பால்ஜி மகராஜ். இவர் 2006ஆம் ஆண்டு ஆர்ய சமாஜ் அமைப்பினரை கடுமையாக விமர்சித்தார். அதையடு்தது இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் உருவானது. உடனே சாமியார் ராம்பால் ஆர்ய சமாஜத்தினரை சுடும்படி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 56 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராம்பால் கைது செய்யப்பட்டு 22 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


சத்குரு ராம்பால்ஜி மகராஜ்


பின்னர் ராம்பாலுக்கு ஜாமீன் கிடைத்தது. அதன்பிறகு இவரை விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன்கள் அனுப்பப்பட்டன. சுமார் 40 முறை சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையிலும் அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சாமியார் ஆசிரமத்துக்குள் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கூடி அவரை கைது செய்ய விடாமல் தடுத்தனர். அவர்களை மனிதக் கேடயமாக்கி சாமியார் தப்ப முயன்றார். மக்களை வெளியேற்றி சாமியாரை போலீஸார் கைது செய்தனர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். பின்னர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சாமியார் மீது தேசவிரோத குற்றச்சாட்டும், அரசு ஊழியர்களை பணியைச் செய்யவிடாமல் தடுத்து கலவரத்தை தூண்டிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன. அந்த வழக்குகளில் இவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாபா ராம்தேவ்

இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறார் சாமியார் பாபா ராம்தேவ். இவர்மீது இன்னும் கொலை, கற்பழிப்பு புகார்கள் வரவில்லையே தவிர, இவருடைய ஆயுர்வேத மருந்துக் கம்பெனியில் மனித எலும்பு, மாட்டு சாணம், மாட்டு சிறுநீர் ஆகியவை பயன்படு்ததப்படுவதாக சோதனையில் நிரூபிக்கப்பட்டன. மதத்துவேசம், ஒரு சார்பு அரசியல் என்று தனது பாதையை திட்டமிட்டு வகுத்துக் கொண்டவர். யோகா என்ற பேரில் அரசியல் ரீதியாக இவர் அடைந்த பலன்கள் கொஞ்சமல்ல. மோடியை புரமோட் செய்வதற்காக அன்னா ஹஸாரே நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு வகித்தார். பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷத்தை ஏற்க மறுப்பவர்களின் தலையை வெட்ட வேண்டும் என்று பேசி கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியவர்.

பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு வழங்கப்படும் இஸட் பிளஸ் பாதுகாப்பு இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பிரதமருக்கு ரொம்ப வேண்டியவராக இருப்பதால் இன்னும் இவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன. அரசியல் நிலவரம் மாறினால் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் அப்போது வெளியே வருவார்கள். இவரும் உள்ளே போவார் என்று உறுதியாக நம்பலாம்.





ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT