ADVERTISEMENT

'விழிப்புணர்வு பத்தி சொன்னா உடனே காண்டத்தை நினைக்கிறார்கள்' நூரி அம்மாள் கோபம்!

06:31 PM Aug 20, 2019 | suthakar@nakkh…

இளம் வயதில் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டு இன்று அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து வழிநடத்தும் ஆசிரியராக இருப்பவர் நூரி அம்மாள். இந்த நோய் ஏற்படுத்தும் பாதிப்புக்களை விட அவருக்கு இந்த சமூகம் தந்த தொல்லைகள் என்னென்ன? அதை எவ்வாறு கடந்தார் என்பதை அவரிடம் கேள்விகளாக முன்வைத்தோம். அவரின் பதில்கள் வருமாறு,

ADVERTISEMENT

சின்ன வயதிலேயே நீங்கள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டீர்கள். எவ்வாறு அதில் இருந்து மீண்டு இந்த நிலையை அடைந்தீர்கள், அதற்காக நீங்கள் அடைந்த சிரமங்கள் என்னென்ன?

வாழ்கையை கஷ்டமாக நினைத்தால் கஷ்டம்தான். எளிமையா நினைத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். என்னை பொறுத்தவரையில் நான் அதனை நோயாக நினைக்கவில்லை. அது ஒன்றும் கேன்சர் இல்லை. வெட்ட வெட்ட வளர்வதும் இல்லை. அது ஒரு கண்ணுக்கு தெரியாத நோய் கிருமி. உடம்பில் அது எங்கேயோ உலவி வருகிறது. அதையே நினைச்சிகிட்டு இருந்தா உடம்புக்கும் கேடு, மனதுக்கும் கேடு. அதனால் நான் அதை நினைத்துக்கொண்டு என்னை முடக்கிக் கொள்வதில்லை. 80களின் இறுதியில் பெரிய பெண் டாக்டர் ஒருவரிடம் கவுன்சிலிங் சென்றேன். நீங்க எதுக்கு வருகிறீங்கன்னு கேட்டாங்க. அப்ப நான் சொன்னேன், டாக்டர் நான் சின்ன வயசிலேயே ஒருநாளைக்கு 10 முதல் 15 பேர் வரை என்னுடன் உறவில் ஈடுபடுவார்கள். எனக்கு பால்வினை நோய்கள் கூட வந்துள்ளது. எனவே அந்த உறவின் காரணமாக எதாவது நோய் தொற்று இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ளத்தான் வந்தேன் என்று கூறினேன். அவர்கள் பதினைந்து நாட்கள் கழித்து வர சொன்னார்கள். பிறகு அவர்கள் சொன்ன தேதியில் நானும் சென்றேன். அவர்கள் தயங்கியபடியே என்னிடம் பேசினார்கள். நான் அவர்களிடம் எதுவாக இருந்தாலும் கூறுங்கள், நான் தாங்கி கொள்வேன் என்று சொன்னேன். அவர்கள் எனக்கு எய்ட்ஸ் இருப்பதாக தெரிவித்தார்கள். நான் எவ்வளவு நாட்கள் இருப்பேன் என்று கேட்டேன். ஒன்று அல்லது இரண்டு வருடம் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள். அப்போது நான் விதமான ரியாக்ஷனும் காட்டவில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு சற்று வருத்தமாக இருந்தது. நான் சில குழந்தைகளை அப்போது தத்தெடுத்து வளர்த்து வந்தேன். அவர்களுக்காகவாது வாழ வேண்டும் என்ற வைராக்கியம் என் மனதில் பிறந்தது.

ADVERTISEMENT



பிறகு சில நாட்கள் இடைவெளியில் அந்த மருத்துவர்கள் என் வீட்டிற்கு வந்து என்னிடம் பேசினார்கள். அடுத்து என்ன செய்வதாக இருக்கிறாய் என்று கேட்டார்கள். நான் மீண்டும் தொழில் செய்ய விரும்பவில்லை, என்னால் யாருக்கும் இந்த நோய் பாதிப்பு வந்துவிட கூடாது என்று தெரிவித்தேன். அப்படினா சாப்பாட்டுக்கு என்ன செய்வாய் என்று கேட்டார்கள். நான் ஏதாவது வழியை பார்க்கனும் என்று சொன்னேன். உடனே அவர்கள் எங்கள் மருத்துவமனையில் வேலை பார்க்க முடியுமா? என்றார்கள். நானும் சம்மதம் தெரிவித்தேன். அப்படியே கிட்டதட்ட பத்து ஆண்டுகள் ஓடியது. என்னால் முடிந்த அளவு இந்த நோய் தாக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தேன். அவர்களுக்கு மன ரீதியான நம்பிக்கையை அளிப்பேன். இப்படியே ஆண்டுகள் ஓடி வருகிறது. தற்போது இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு கட்டடம் கட்டி வருகிறேன். அதன் காரணமாக பல குடும்பங்கள் பலம் அடையும் என்று நம்புகிறேன்.

தற்போது திருநங்கைகளுக்கு போதுமான உரிமைகள் கிடைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

என்ன கிடைத்துள்ளது, ரேசன் கார்டு கிடைத்து இருக்கு, வோட்டர் கார்டு கொடுத்து இருக்காங்க, வேறு என்ன கிடைத்துள்ளது. எதுவும் இல்லை. இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்களை அவுங்க வீட்டில் ஏத்துக்கிட்டாங்களா? அப்படி எதுவும் நடக்கவில்லையே. அரசாங்கம் பாதுகாப்பு விழிப்புணர்வுகளை அதிகம் ஏற்ப்படுத்த வேண்டும். விழிப்புணர்வு பத்தி சொன்னா உடனே காண்டத்தை பற்றி சொல்வதாக நினைக்கிறார்கள். இந்த நோயே வரக்கூடாது. ஒருவனுக்கு ஒருத்தி என்று ஆண், பெண் இருக்க வேண்டும். அந்த மாதிரியான புரிதலை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இன்றைக்கு கல்லூரி மாணவர்கள் பலபேர் ஹெச்ஐவி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். விதவிதமான தவறுகளை செய்கிறார்கள். அவர்களுக்கு போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஒதுக்காமல் அரவணைக்க வேண்டும்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT