ADVERTISEMENT

ஐ.நா.வில் ஆட்டம் போட்ட நித்தி சிஷ்யைகள்; கசிந்த கைலாசா ரகசியம்!

05:56 PM Mar 09, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

கோப்புப் படம்

ADVERTISEMENT

ஐ.நா. அமைப்பு பெண்கள் மேம்பாடு தொடர்பாக நடத்திய மாநாடு ஒன்றில், ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளக் கூடிய கூட்டங்களில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் கலந்துகொண்டு, நித்தியானந்தா மீது மனித உரிமை மீறல்களும் துன்புறுத்தல்களும் நிகழ்த்தப்படுவதாக குற்றம்சாட்டி நாடகமாடியுள்ளனர்.

தன் மீதுள்ள வழக்கை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் 2019-ல் இந்தியாவை விட்டு தப்பியோடிய நித்யானந்தா, ஆன்மிக வியாபாரத்தில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தில் ஈக்வடார் கடற்கரைப் பகுதியில் சில தீவுக்கூட்டங்களை வாங்கி அதற்கு கைலாஸா எனப் பெயரிட்டு அங்கேயே தனது ஆசிரமத்தை நடத்தி வருகிறார்.

இந்தியாவை விட்டே தப்பியோடியிருந்தாலும் அவருக்கு மீண்டும் இந்தியா திரும்பவும் இங்கு மீண்டும் ஒரு ஆன்மிக(?) சாம்ராஜ்யத்தை நிறுவவும் ஆசையிருப்பதால் சமூக ஊடகங்கள் மூலம் கைலாஸா குறித்த செய்திகளைத் திரும்பத் திரும்ப பரப்பி வருகிறார். அவரது வலைத்தளம் உலகின் முதல் இந்து நாடு கைலாஸா எனவும் இங்கே இருபது லட்சம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றி வருவதாகவும் தெரிவிக்கிறது. கைலாஸாவுக்கென தனி வங்கி, கொடி, பாஸ்போர்ட் ஆகியவை உள்ளதாக அவர்கள் தெரிவித்தாலும் உலகம் கைலாஸாவை இதுவரை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.

இந்த நிலையில்தான் பிப்ரவரி 22, 2023 அன்று பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ஜெனிவாவிலுள்ள ஐ.நா. சபையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அது நிறைவுற்ற சில தினங்களில் கைலாஸாவின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலிருந்து இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கைலாஸாவின் பிரதிநிதிகள் குறித்த படங்களும் செய்திகளும் வெளியாகத் தொடங்கின.

“உலக அரங்கில் ஜொலிக்கும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாஸா! ஐ.நா. மாநாட்டில் பெண்கள் தலைமைத்துவம் பற்றிய பேச்சில் பிரதிநிதித்துவம்! என்றொரு செய்தி நித்தியானந்தா தரப்பினரால் பிப்ரவரி 22-ஆம் தேதிக்குப் பின் வெகுவாகப் பரப்பப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை களைவதற்கான குழுவின் 84-வது அமர்வில், ஐ.நா.வுக்கான கைலாஸாவின் நிரந்தரத் தூதர் மா விஜயப்பிரியா நித்தியானந்தா, லாஸ் ஏஞ்சல்ஸ் கைலாஸாவின் தலைவர் மா முக்திதா ஆனந்தா, செயிண்ட் லூயிஸின் கைலாஸா தலைவர் மா சோனா காமத், யுனைடெட் கிங்டத்தின் கைலாஸாவுக்கான தலைவர் நித்ய ஆத்மதாயகி, ப்ரான்ஸின் கைலாஸாவுக்கான தலைவர் மா பிரியப்ரேமா நித்யானந்தா ஆகியோர் உள்ளிட்ட குழு பங்கேற்றது.

பாலின அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகள், வன்முறைகள் பற்றிப் பேச பெண் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் இந்துப் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு எதிராக கைலாஸாவின் பெண் உறுப்பினர்கள் குரல்கொடுத்தனர் என நீள்கிறது அந்தச் செய்தி. இந்தச் செய்தி, கைலாஸாவை ஒரு நாடாக ஐ.நா. அங்கீகரிக்கிறதா… கைலாஸா பிரதிநிதிகளுக்கு ஐ.நா.வில் அத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பியது. ஆனால் பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் நித்தியானந்தாவின் டுபாக்கூர் வேலையை அம்பலப்படுத்தின. இந்தச் செய்தி குறித்து விளக்கமளித்திருந்த ஐ.நா. அதிகாரி, “கைலாஸா பிரதிநிதிகள், சமர்ப்பித்த விஷயங்கள் ஐ.நா. பேசிய பிரச்சினைகளிருந்து விலகியவை, அவற்றோடு தொடர்பற்றவை” என்றார். மேலும், “இந்த மாநாட்டில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில் கைலாஸா இடம்பெறவில்லை. அரசுசாரா அமைப்புகள், தன்னார்வலர்கள் என யாரும் பங்குபெறக்கூடிய பிப்ரவரி 22, 24-ல் ஐ.நா. நடத்திய இரண்டு பொதுக்கூட்டங்களிலேயே கைலாஸா பிரதிநிதிகள் பங்குபெற்றனர்” என்கிறார் இந்தப் பொதுக்கூட்டங்களை மேற்பார்வை செய்த விவியன் குவாக்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேள்வியெழுப்பலாம் என சொல்லப்பட்டபோது, ஐ.நா.வுக்கான கைலாஸாவின் நிரந்தரத் தூதர் என தன்னை அறிமுகம் செய்துகொண்ட விஜயப்பிரியா நித்யானந்தா, கேள்வி கேட்பதுபோல் எழுந்து, “கைலாஸாவின் குடிமக்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி அனைத்தும் இலவசம். தன்னிறைவான வளர்ச்சியுடன் திகழும் நாடு” என்று கூறியதுடன், “இந்து மதத்தின் பூர்விக மரபு, வாழ்க்கை முறைகளைப் புதுப்பிப்பதற்காக நித்தியானந்தா மிகக் கடுமையான துன்புறுத்தல், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார். கைலாஸா மக்களும் அதேபோல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதை நிறுத்த தேசிய, சர்வதேச அளவில் என்ன செய்யலாம்?” என கேள்விகள் கேட்டுள்ளார்.


ஆக, யார் வேண்டுமானாலும் பங்குபெறக்கூடிய ஐ.நா.வின் இரண்டு கூட்டங்களில் கலந்துகொண்டு அவற்றின், புகைப்படம், வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் கடைபரப்பி, கைலாஸா ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுபோலவும், கைலாஸாவுக்கு நாடுகள்தோறும் தூதர்கள் இருப்பதுபோலவும், நித்தியானந்தாவை இந்தியாவே துன்புறுத்துவது போலவும் சீன் போட்டுள்ளனர் நித்தியின் சிஷ்யைகள்.


இந்தியாவில் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை சட்டபூர்வமாக எதிர்கொண்டு பதிலளிக்கவியலாத நித்தியானந்தா, எட்டாத தொலைவிலிருக்கும் தைரியத்தில் தன் மீது மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்படுவதாக ஐ.நா. கூட்டங்களில் தனது சீடர்களை வைத்து நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்.

- க.சுப்பிரமணியன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT