n

நித்தியானந்தாவின் சீடரை காரில் கடத்திச்சென்று முகத்தை பிளாஸ்டிக் கவர் மூலம் மூடி, மூச்சு திணற வைத்து, ‘ஆசை’சினிமா பட பாணியில் கொலை செய்து, சடலத்தை நிர்வாண நிலையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

புதுச்சேரி ஏம்பலம் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரவேல்(வயது 45) இவர் நித்தியானந்தாவின் தீவிர பக்தராக இருந்து பின் சீடராக மாறி உள்ளார். வில்லியனூர் மற்றும் ஏம்பலம் பகுதியில் நித்தியானந்தாவின் பெயரில் பேக்கரி கடை நடத்தி வரும் வஜ்ரவேல், பாகூர் அடுத்த கிருமாம்பக்கத்தில் புதிதாக கடை திறக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

Advertisment

இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு ஏம்பலத்தில் கடையை அடைத்துவிட்டு குருவி நத்தம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று 2 லட்சம் ரூபாய் பணம் வாங்க புறப்பட்டுள்ளார். பணம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பியவர், திடீரென மாயமானதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் அதிகாலை 4 மணிக்கு புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வஜ்ரவேலை தேடிய போது, குருவிநத்தம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காருக்குள் நிர்வாண நிலையில் வஜ்ரவேல் சடலமாக கிடந்தார்.

Advertisment

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பணத்துடன் வந்த வஜ்ரவேலை, யாரோ மர்ம ஆசாமிகள் காருடன் கடத்திச்சென்று தலையை பாலித்தீன் கவரால் மூடி கொலை செய்து விட்டு, அவரது சடலத்தை நிர்வாணமாக்கி காரின் பின்பக்க இருக்கை அருகே படுக்க வைத்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது.

இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.