ADVERTISEMENT

ஓராண்டில் திமுக தமிழகத்திற்காக செய்தவை என்ன..? புதிய திட்டங்கள் குறித்த ஓர் பார்வை

06:06 PM May 10, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"கட்டம் சரியில்லை, அதிகாரத்துக்கு வர வாய்ப்பே இல்லை" என்ற தொடர் எதிர்ப்புக் குரல்களுக்கு மத்தியில் 2021 மே, 7 அன்று, கிண்டி ஆளுநர் மாளிகையில் ஒலித்தது "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..." என்ற குரல். 1967 தேர்தலில் இளைஞர் அணியிலிருந்து முரசொலி மாறனின் வெற்றிக்காக ஒலிக்கத் தொடங்கி, 54 ஆண்டுகளில் மிக நீண்ட தூரத்தைக் கடந்து முதல்வர் பதவியேற்பு மேடை வரை வந்துள்ளது அந்த குரல். அந்த குரலுக்குச் சொந்தக்காரரும் தான். தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியிலும் கரோனா பேரிடருக்கு மத்தியிலும் பதவிக்கு வந்த மு.க.ஸ்டாலினும் அவரது அரசும் கடந்த ஓராண்டில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையிலான சாதனைகளைப் படைத்துள்ளது.

ஆட்சிக்கு வந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த கரோனா பரவலை எதிர்கொள்வதற்காகப் பதவியேற்ற உடனேயே கட்டளை மையத்தை உருவாக்கி மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய சூழல்களைக் கண்காணித்தது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனையோடும் பங்களிப்போடும் எதிர்கொண்டு வெற்றிபெற்றது, கவச உடை அணிந்துகொண்டு நேரடியாக மருத்துவமனைக்கு விசிட் அடித்தது, மாஸ்க் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது, பொதுமக்களின் அழைப்பிற்கு தானே நேரடியாக பதிலளிப்பது, வெள்ளம் பாதித்த பகுதிகளை உடனடியாக நேரடியாக சென்று பார்வையிட்டு பணிகளை முடுக்கிவிட்டது எனக் கவனம் ஈர்க்க தொடங்கினார் ஸ்டாலின்.

வாக்கிங் செல்லும்போது பொதுமக்களுடன் சகஜமாகப் பேசுவது, டீக்கடைக்கு சென்று டீ குடிப்பது, சைக்கிளிங் செல்லும்போது மக்களைச் சந்திப்பது, வெகுஜனங்களின் வீடுகளுக்குச் சென்று சாதாரணமாக உரையாடுவது, உண்பது எனத் தமிழ்நாட்டு அரசியல் சமீப காலமாகக் கண்டிராத முதல்வராக மக்களிடையே தென்படத் தொடங்கினார் ஸ்டாலின். என்னதான் முதல்வரின் எளிமையும் அரசியலும் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் புதிய திட்டங்களை அறிவிப்பது, மக்கள் நலன்களுக்கு எதிரானவற்றிற்கு எதிராகக் குரல் கொடுப்பது எனச் சாமானியர்களையும் கவனத்தில் வைக்க மறக்கவில்லை இவ்வரசு என்றே கூறலாம்.

கரோனா தடுப்பு, பெண்கள் நலன், கல்வித்துறை, மருத்துவம், தொழில் முதலீடு போன்றவற்றில் தனி அக்கறை செலுத்தப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்றதும் நாட்டிலேயே முதல்முறையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா நான்காயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் இந்த நிதி சரியான முறையில் சென்றடைவது உறுதிசெய்யப்பட்டது. தேர்தல் வாக்குறுதிப்படி பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி எனத் தொடக்கத்திலேயே சிக்ஸர்களை பறக்கவிட்டது இந்த அரசு.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அங்கீகாரம், தொழிற்கல்வி, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு, நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து அதன் அடிப்படையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது, மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது என எதிர்கால தலைமுறையின் கல்விக்காக அடுத்தடுத்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

தமிழ் இலக்கியத்திற்கு சிறந்த படைப்புகளைத் தரும் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது மற்றும் கனவு இல்லம் கட்டித்தரப்படும் என்ற அரசின் அறிவிப்பு எழுத்தாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல, தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழர்’ புதிய விருது வழங்கு வழங்கப்பட்டது. இவை மட்டுமின்றி கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வகையில் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இப்படியான திட்டங்கள் மூலம் தமிழின் இருப்பை ஆழமாகவும் அழுத்தமாகவும் அனைவர்க்கும் உணர்த்தியது தமிழ்நாடு அரசு.

திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றபோது கரோனாவுக்கு அடுத்து அதிக கவனம் செலுத்த வேண்டிய பிரச்சனையாக இருந்தது பொருளாதார நெருக்கடி. வரலாறு காணாத அளவு கடனுக்கு மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, அமைச்சர் நியமனம் முதலே இத்துறையில் சிறப்புக் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. பொருளாதாரத்தில் முன்னனுபவம் உடைய பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தலைசிறந்த பொருளாதார வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, ரகுராம் ராஜன், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ உள்ளிட்டோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். முதலீடுகளை ஏற்க அடுத்தடுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" எனும் நிகழ்வைக் கோவையில் நடத்தியது திமுக அரசு. சர்வதேச முதலீடுகளை ஈர்க்க, துபாய் மற்றும் அபுதாபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் சுமார் 6,100 கோடி ரூபாய் அளவிற்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது. மொத்தத்தில் கடந்த ஓராண்டில் 68, 375 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் 2 லட்சத்து 5 ஆயிரத்து 802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது ஒவ்வொரு தொகுதியிலும் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, "உங்கள் தொகுதியில் முதல்வர்" எனும் தனித்துறை உருவாக்கப்பட்டு மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது. டெல்டா விவசாயிகளுக்குக் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு திட்டம், மின்துறை சம்பந்தமான புகார்களை அளிக்க புதிய மின் நுகர்வோர் சேவை மையம், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண தொகை, அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இலங்கை அகதிகள் முகாம் என்பது ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு மறுவாழ்வு முகாமில் வாழும் தமிழர்களுக்காக ரூ.225 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட்டதோடு, சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவையும் அமைத்தது அரசு. அதேபோல, அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் திட்டத்தைத் தொடக்கி வைத்தது. பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் அமல்படுத்தப்பட்டது. இப்படி ஆட்சிக்கு வந்த ஓராண்டில் தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்பட்ட பல திட்டங்களையும் சொல்லப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கும் இந்த அரசு, எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய சவால்களும் இன்னும் ஏராளம். தேர்தல் நேர வாக்குறுதிகளில் நிறைவேறியவையும் உண்டு, காத்திருப்பவையும் உண்டு. நிறைவேறியவை நிறைவாக இருந்தாலும் காத்திருப்பவை காலந்தாழ்த்தப்படாமல் நிறைவேற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதே கடைக்கோடி சாமானியனின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT