ADVERTISEMENT

காங்கிரஸின் புதிய தலைவர் பிரியங்கா? சோனியாவிடம் வலியுறுத்தும் மன்மோகன்சிங்!

07:21 AM Aug 05, 2019 | rajavel

ADVERTISEMENT

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல்காந்தி. இதற்கான ராஜினாமா கடிதத்தையும் ராகுல்காந்தி கொடுத்துள்ளார். ஆனால், காங்கிரஸின் உயரிய அமைப்பான காரிய கமிட்டி அதனை தற்போது வரை ஏற்காமல் இருக்கிறது. ராஜினாமாவை திரும்பப் பெறுங்கள் என மூத்த தலைவர்கள் வலியுறுத்திய நிலையிலும், ’ ராஜினாமாவை திரும்ப பெறப்போவதில்லை; எனது பதவி விலகலை ஏற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்திற்கு வெளியிலிருந்து புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள்’ என தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் ராகுல்காந்தி அதில் உறுதியாகவும் இருக்கிறார். ராகுலின் இந்த முடிவுக்கு சோனியாவின் ஆதரவும் இருப்பதால் மூத்த தலைவர்கள் திகைத்து நின்றார்கள்.

ADVERTISEMENT


இந்த நிலையில், சோனியாவை சந்தித்து, ’கட்சி தலைவர் பதவியை மீண்டும் நீங்கள் ஏற்க வேண்டும்’ என மூத்த தலைவர்கள் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆஷாத், மல்லிகார்ஜுனே கார்கே, சுஷில்குமார் சிண்டே உள்ளிட்ட பலரும் வலியுறுத்திய போதும் அதனை ஏற்காமல் சோனியாவும் நிராகரித்ததால் கடந்த இரண்டரை மாதங்களாக காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.


இதனால், தேசிய அளவில் காங்கிரஸின் செல்வாக்கு கேள்விக்குறியாகும் நெருக்கடியான சூழலில், தலைமை பதவியை ஏற்க சீனியர்கள் யாரும் முன்வரவில்லை. அதேசமயம், சீனியர்கள் சிலர் முன்வந்தால் அவர்களை இளம் தலைவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இளைஞர் ஒருவரை தலைவராக நியமிக்கலாம் எனில், ’’ பாஜகவை எதிர்க்கும் வல்லமை அவர்களுக்கு இருக்காது ; அனுபவமும் போதாது ‘’ என இளைஞர்களை சீனியர்கள் எதிர்க்கின்றனர். இப்படிப்பட்ட சூழல் டெல்லியில் மையம் கொண்டிருப்பதால் புதிய ததலைரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடித்தபடியே இருக்கிறது.

இந்த நிலையில்தான் கடந்த வாரம், மன்மோகன்சிங்கும் அகமதுபடேலும் சோனியாவை சந்தித்து விவாதித்துள்ளனர். அதில், ‘’ நேரு குடும்பத்தை தவிர்த்து வேறு ஒருவரை தலைமை பதவியில் நியமிக்க முடியாதளவுக்கு சிக்கல் இருக்கிறது. ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அதனால், ராஜினாமாவை திரும்ப பெற ராகுலுக்கு அறிவுறுத்துங்கள். இல்லையெனில், பிரியங்காவை தலைமைப் பொறுப்பை ஏற்க வையுங்கள். நேரு குடும்பத்தைத் தவிர்த்து யார் வந்தாலும் கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது. காங்கிரசை பலகீனப்படுத்தும் பாஜகவின் முயற்சிகளுக்கு காங்கிரஸார் துணைபோவதும் கூட, தலைவர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளும் சிக்கல்களும் ஒரு காரணமாக இருக்கின்றன ‘’ என விரிவாக சுட்டிக்காட்டியுள்ளனர்.


இதனையடுத்து, கட்சியின் காரிய கமிட்டியை கூட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார் சோனியாகாந்தி. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் காங்கிரசின் காரிய கமிட்டி டெல்லியில் கூடுகிறது. அதில் ’கட்சியின் தலைவர் பதவிக்கு ஒரு முடிவு தெரியும்’ என்கிறார்கள் கதர்சட்டையினர்.

அதாவது, ராஜினாமாவை ராகுல் வாபஸ் பெறுவாரா? அல்லது பிரியங்கா தலைவராவாரா? அல்லது புதிய தலைவர் யார் என்பதை சோனியாவே அடையாளப்படுத்துவாரா? என்கிற கேள்விகளுக்கு விடை தெரிய வரும் என்கிறார்கள். இதற்கிடையே, மன்மோகனும் அகமதுபடேலும் தன்னை சந்தித்து விவாதித்துவிட்டுச் சென்றதையடுத்து, ராகுல்காந்தியையும் பிரியங்காவையும் அழைத்து பேசியுள்ளார் சோனியாகாந்தி.

அப்போது, ’’தலைவர் பதவிக்கு என்னை பரிந்துரைக்கும் எண்ணத்தை மூத்த தலைவர்கள் கைவிட வேண்டும். அதனை நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். தலைவர் பதவியேற்கும் அனுபவமும் தகுதியும் எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை‘’ என கறாராகப் பேசியிருக்கிறார் பிரியங்காகாந்தி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT