ADVERTISEMENT

நீட்டாக குழிபறிக்கும் கூட்டணி! -அதிரவைக்கும் ஆர்.டி.ஐ. ஆதாரம்!

12:15 PM Feb 09, 2019 | rajavel




தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதற்காக 18-2-2017 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகும் நிலையில், அந்தக் கோப்பு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை.

ADVERTISEMENT


மத்திய-மாநில அரசுகளின் அலட்சியத்தால் 2017-ல் அனிதா வும், 2018-ல் பிரதீபாவும் நீட் கொடுமைக்கு உயிர்ப் பலியானார்கள். ஏராளமான மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டது. நீட் ஆதரவாளர்களோ இவை எல்லாமே கல்வியில் ஊழலை ஒழிக்கவும், தனியார் கல்லூரிகளின் கொள்ளையைத் தடுக்கவும், பாடத்தின் தரத்தை மேம்படுத்தி, தகுதியானவர்களை டாக்டராக்க வும் எடுக்கப்படும் முயற்சி என்றும், இதனால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பலன் அதிகம் என்றும் வாதாடினர். ஆனால், கிராமப்புற-ஏழை-ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் மட்டுமல்ல, அதிகக் கட்டணம் செலுத்தி தனியார் டியூஷனில் படித்த நடுத்தர வர்க்கத்து மாணவ-மாணவியருக்கு பெப்பே காட்டி, சி.பி.எஸ்.இ. என்கிற மத்திய அரசின் பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமே டாக்டர் சீட்டுகளை உறுதி செய்கிறது நீட் தேர்வு.

ADVERTISEMENT


+2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே 2006ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மருத்துவ- பொறியியல் படிப்புகளில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நகரப்புறத்தைப் போல கிராமப்புற மாணவர்களும் டாக்டராக, இன்ஜினியராக உயர்ந்தனர். அதே நேரத்தில் தனியார் கல்லூரிகள் லாப நோக்கத்துடனும் கட்டமைப்புகள் இன்றியும் தொடங்கப்பட்டு வணிகரீதியில் செயல்படுவதையறிந்து, நீட் தேர்வை அறிமுகப்படுத்தப் போவ தாக 2013-ல் இந்திய மருத்துவக் கவுன்சில் குரல்கொடுத்தது. இதை எதிர்த்து பலர் உச்சநீதிமன்றம் சென்றநிலையில், 2016-ல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு கட்டாயமென தீர்ப்பளிக்கப்பட்டது.


தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான நீட் தேர்வை அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் கொண்டு வந்தபோது தமிழ்நாட்டில் எதிர்ப்பு அதிகமானது. காரணம், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிகம். அதில் பயின்று டாக்ட ராகி சிறப்பாகப் பணியாற்றும் ஏழை-கிராமப்புற-ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் ஏராளம். கலைஞர் ஆட்சியில்தான் நுழைவுத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு இத்தகைய டாக்டர்களாகும் வாய்ப்பு அமைந்தது.


ஜெ.வும் நீட் தேர்வுக்கு எதிராக நின்றார். ஆனால், அவர் அப்பல்லோவில் சிகிக்சையில் இருந்தபோதே நீட் கட்டாயம் எனும் மத்திய அரசின் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இத னால் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் தமிழக மாணவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டு, வடஇந்திய, மேல்தட்டு மாணவர்களுக்கான வாசல் திறக்கப்பட்டது. நீட் தேர்வின் பெரும்பாலான கேள்விகள் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. மாநிலக் கல்வித் திட்டத்தில் பயின்றவர்களிடம் தனியார் நிறுவனங்கள் நீட் டியூஷன் என லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கத் தொடங்கின. இதுகுறித்த கேள்விகளுக்கு மத்திய அரசு மழுப்பலையே பதிலாக தெரிவித்தது. அரசு மருத்துவக் கல்லூரிகளின் இலவச சீட்டுகளை தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைக்காதபடி செய்துள்ளது நீட் தேர்வு.


தனது கிராமத்திற்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வையும் ஜிப்மர் நடத்திய சிறப்புத் தேர்வையும் எழுதி சட்டப் போராட்டங்களில் இறங்கி, நீட்டுக்கு எதிரான போராட்டங்களிலும் பங்குபெற்றவர் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா. அவரது தற்கொலை தமிழகத்தையே அதிரச் செய்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, மூட்டை தூக்கி வாழ்க்கை நடத்திவந்த தொழிலாளியின் மகளான அனிதா +2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். நீட் தேர்வு இல்லையென்றால், சென்னை எம்.எம்.சி. போன்ற முதன்மையான அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்திருக்கும். அவரது மருத்துவக் கனவையும் உயிரையும் சிதைத்துவிட்டது நீட்.


தேர்வு மையங்களில் பரிசோதனை என்ற பெயரில் நடந்த அராஜகமே பல மாணவர்களை மனரீதியாக அச்சுறுத்தியது.


நீட் தேர்வு எழுதிய 5000 தமிழக மாணவர்களுக்கு, கர்நாடகம், கேரளம், ராஜஸ்தான் மாவட்டங்களில் இடம் ஒதுக்கியது சர்ச்சைக்குள்ளானது. திருத்துறைப்பூண்டி விளக்குடியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி, மகனுக்கு துணைசென்ற நிலையில் கேரளாவிலேயே இறந்துபோனார். நீட் தேர்வால் டாக்டருக்குப் படிக்க முடியாமல் போன விழுப்புரம் மாவட்டம் பிரதீபா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டார்.

2018-19 நீட் வினாத்தாளில் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் சி.பி.எஸ்.இ. போர்டு பல்வேறு குழப்படிகளைச் செய்திருந்தது. கிட்டத்தட்ட 49 கேள்விகள் பிழையாக மொழிபெயர்க்கப்பட்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களை கலங்கச் செய்தது. சட்டரீதியான முயற்சிகளும் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில்தான், தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கோவையைச் சேர்ந்த வே.பாஸ்கரனும், திருநெல்வேலி வழக்கறிஞர் அப்பாவுரத்தினமும் கடந்த 2018-19 கல்வியாண்டில் தமிழகத்தில் வெவ்வேறு பிரிவுகளின்கீழ் நீட் தேர்வில் தேர்வானவர்களின் விவரங்களைக் கோரிப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பெற்ற தகவல்களோடு, நீட் தேர்வுக்கு முந்தைய நிலையை ஒப்பிடும்போது வெளிப்படும் உண்மை நம்மை நிலைகுலையச் செய்வதாக உள்ளது. (காண்க: அட்டவணை)


அரசாங்கப் பள்ளியில் படித்து அரசாங்க மருத்துவக் கல்லூரியில் இடம்கிடைத்த மாணவர்களின் எண்ணிக்கை,

நீட் வருவதற்கு முந்தைய மூன்று கல்வியாண்டுகளில் 22, 33, 27 என இருந்தது,

நீட் தேர்வுக்கு பிறகு (2018-2019) வெறும் 4 எனச் சரிந்திருக்கிறது.

அரசாங்க உதவிபெறும் பள்ளியில் படித்து, அரசாங்க மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை:

நீட் வருவதற்கு முந்தைய மூன்றாண்டுகளில் 0, 59, 58 என உயர்ந்தது,

நீட் தேர்வுக்கு பிறகு 3 ஆகச் சரிந்திருக்கிறது.

தனியார் பள்ளியில் படித்து, அரசாங்க மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும் :

நீட் வருவதற்கு முந்தைய மூன்றாண்டுகளில் 2226, 2247, 2321 ஆக இருந்தது, வெறும் 20-ஆக அதல பாதாளத்தில் விழுந்திருக்கிறது. இவர்கள் எல்லோருமே மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள்.




சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படித்து, அரசாங்க மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை... நீட் தேர்வுக்கு முன்பு 0, 0, 14 என்று மட்டுமே இருந்தது, நீட் தேர்வுக்குப் பின் 611 ஆக மலை அளவுக்கு உயர்ந்திருக்கிறது..

அதேபோல தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கணக்கில்கொண்டால்... அரசாங்கப் பள்ளியில் படித்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை...

நீட் தேர்வுக்கு முந் தைய மூன்றாண்டுகளில் 12, 3, 3 என இருந்தது,

நீட் தேர்வுக்குப் பின் 1 ஆகச் சரிந்திருக்கிறது.

அரசாங்க உதவி பெறும் பள்ளிகளில் படித்து, தனியார் மருத் துவக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களின் எண்ணிக்கை...

நீட்தேர்வுக்கு முந் தைய மூன்றாண்டுகளில் 0, 16, 26 என இருந்தது,

நீட் தேர்வுக்கு பிறகு பூஜ்ஜியமாக சரிந்திருக்கிறது.

தனியார் பள்ளியில் (மாநிலப் பாடத்திட்டம்) படித்து, தனியார் மருத் துவக் கல்லூரியில் இடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை...

நீட் தேர்வுக்கு முந் தைய மூன்றாண்டுகளில் 798, 657, 1173 ஆக இருந்தது,

நீட் தேர்வுக்குப் பின் 3-ஆக தரைமட்டமாகி யிருக்கிறது. மாறாக, சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து தனியார் மருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை,

நீட் தேர்வுக்கு முன்பு 2 மற்றும் 21 என்ற அளவிலேயே இருந்தது,

நீட் தேர்வுக்குப்பின் 283 ஆக உயர்ந்திருக்கிறது.

தமிழக மாணவர்களை நீட் தேர்வு கொடூரமாக வஞ்சித்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது. இந்தக் கொடுமையிலிருந்து மாணவர்களைக் காப்பதற்காகத்தான் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாடு சட்டமன்றத்தில், நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக்கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைக் குப்பைக்கூடையில் வீசிவிட்டு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு குழிபறித்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அந்த பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருக்கிறது மாநிலத்தை ஆளுங்கட்சியான அ.தி.மு.க.

-கீரன், சுப்பிரமணி


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT