ADVERTISEMENT

”தமிழ்நாட்டில் இவ்வளவு பணிகள் நடந்திருக்கிறதா என வியந்தார் மோடி!” - வானதி சீனிவாசன்

01:12 PM Sep 17, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடியின் 70 ஆவது பிறந்த நாளை தமிழக பா.ஜ.கவினர் கொண்டாடி வருகின்றனர். தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வானதி சீனிவாசன் மோடி பற்றிய சில கருத்துகளை நக்கீரன் இணையத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.

மோடியை நேரில் சந்தித்தது எப்போது? மோடியுடனான சந்திப்பில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள்...

நேரில் பல்வேறு நிகழ்ச்சிகளின்போது சந்தித்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் உரையாடுவதற்கான வாய்ப்பு 2013 டிசம்பரில் எனக்குக் கிடைத்தது. கோவா செயற்குழுவில் அடுத்த பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்று அறிவிக்கப்பட்ட நேரம். அப்போது பட்டேல் சிலை அமைப்பதற்கான தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன். பட்டேல் சிலை அமைப்பதற்காக நாடு முழுவதும் விவசாயிகளிடம் இரும்பு மற்றும் கிராமத்தில் இருந்து மண், நீர் எடுக்கக்கூடிய பணிகள் நடந்துகொண்டிருந்தது. மாநிலம் முழுவதும் இதனை ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குஜராத்துக்கு பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு, இளைஞர்கள் பத்தாயிரம் பேர் பங்கேற்ற மிகப்பெரிய ஒற்றுமை ஓட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம்.

அதன் பின்னர் குஜராத்தில் மணி நகரில் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது, அவர் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக வைத்தீஸ்வரன் கோவிலில் பூஜை செய்து கயிறு எடுத்துக்கொண்டு சென்றோம். சந்திக்க வேண்டும் என்று சொன்னபோது, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருப்பார் சந்திக்கலாம் என்று சொன்னவுடன் அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தோம்.

அப்போது, பட்டேல் சிலை தொடர்பான பணிகள் குறித்த விவரங்களைச் சொன்னபோது, அதனைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டார். பட்டேல் சிலைக்காக தமிழ்நாட்டில் இவ்வளவு பணிகள் நடந்திருக்கிறதா எனச் சொல்லி பாராட்டினார். அந்த நேரத்தில் பத்திரிகையில் பட்டேல் பற்றிய கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன், அதனையும் காண்பித்தேன். மிகவும் சந்தோஷப்பட்டார். மிகவும் பொறுமையாக, அன்பாக பேசிக்கொண்டிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் தமிழ்நாட்டில் எப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது, தமிழில் விளம்பரங்கள் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்று நான் சொன்னபோது, ஆமாம். தமிழ்நாடும், மேற்கு வங்கமும் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய மாநிலங்கள். இதை மிகவும் கவனமாக எடுத்து அந்த மக்களுடைய மொழியில் விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்றார். மிகவும் முக்கிய நிகழ்வாக அந்தச் சந்திப்பு இருந்தது. என் வாழ்க்கையில் முக்கிய சந்திப்பாக அதனை நான் பார்க்கிறேன்.

அப்போது அவர் மாநில முதலமைச்சர். அவரை சந்திக்க அவரது வீட்டில் நுழைகிறோம். எங்களைப் பார்த்து எழுந்து நின்று 'ஸ்வாகதம்' என்று சொல்லி வரவேற்கிறார். அதேபோல நாங்கள் கிளம்பும்போதும் வெளியே வந்து வழியனுப்பி வைத்தார். ஒரு மாநில நிர்வாகி, அதிகாரத்தில் இல்லாத ஒரு நிலைமையில் இருக்கிறோம். அப்படியிருக்கும்போது அவர் காட்டிய மரியாதை, பணிவு இவையெல்லாம் ஒரு தாக்கத்தை உண்டாக்கியது.

சென்னையில் உள்ள மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்தார். அப்போது எல்லோருடன் அமர்ந்து உரையாற்றினார். அதன்பிறகு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது நாம் 'நமஸ்கார்', 'நமஸ்தே' என்று சொல்லும்போதுகூட அவர் 'வணக்கம்' என்று தமிழில் சொல்லுவார்.

மோடியிடம் கற்றுக்கொண்ட அரசியல் பாடம் என்ன?

எத்தனை விமர்சனங்கள் நம் மீது வந்தாலும், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், நம் பணியில் எவ்வளவு தீவிரமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரிடம் நான் கற்றுக்கொண்ட அரசியல் பாடம்.

மோடி தலைமையில் இரண்டாது முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக் காலத்தில் மோடியின் சிறந்த சாதனையாக எதைச் சொல்வீர்கள்?

பல்வேறு சாதனைகள் இருக்கிறது. ஒன்று, இரண்டு எனக் குறிப்பிட முடியாது. மிகக் குறைந்த காலத்தில் மக்களை வங்கிக் கணக்குகள் வாயிலாக இணைத்ததால், இன்று நேரடியாக அவர்களுக்கு உதவி செய்ய முடிகிறது. இதற்கு மேலாக முக்கியமாக நான் பார்ப்பது, கழிப்பறைகள் கட்டுவது. கிராமத்தில் இருப்பவர்களுக்கு கழிப்பிடம் எவ்வளவு அவசியம் என்பது எனக்குத் தெரியும். இதில் அவர் முன்னெடுத்த விஷயத்தைச் சிறப்பான பணியாக நான் பார்க்கிறேன்.

நீங்கள் பின்பற்றும் தலைவருக்கு உங்கள் சொந்த மாநிலத்தில் எதிர்ப்பு அதிகமாக இருந்தாலும் தொடர்ந்து அதே பாதையில் பயணம் செய்ய உங்களுக்கு உத்வேகமாக இருப்பது எது?

கட்சியினுடைய கொள்கைகளில் இருக்கக்கூடிய தீவிரமான பிடிப்புதான். எங்கள் தலைவருக்கு இந்த மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், அந்த எதிர்ப்புகளை முறியடிக்கக்கூடிய ஆற்றலும், எங்களுடைய செயல்பாடுகளும் அதை மாற்றும் என்கிற நம்பிக்கையில் நாங்கள் பணியாற்றுகிறோம். இதே தலைவர் தலைமையிலான கூட்டணிக்கு கடந்த 2014ல் 19 சதவிகித வாக்குகளை தமிழகம் அளித்திருக்கிறது. அதனால் அவர் தமிழகத்தில் புறக்கணிக்கப்பட்ட தலைவர் கிடையாது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT