ADVERTISEMENT

ஆன்லைன் ரம்மி; அடுத்தகட்ட போராட்டம் - நாஞ்சில் சம்பத் 

05:08 PM Mar 24, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் மூத்த அரசியல் தலைவர் நாஞ்சில் சம்பத் அவர்கள்.

சித்தாந்த ரீதியாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றுதான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முயற்சிகளை எடுத்து வருகிறார். பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் என்று பல்வேறு தலைவர்கள் முதலமைச்சரின் பிறந்தநாளில் ஒன்று கூடி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததன் மூலம் சித்தாந்த ரீதியாக ஒன்று கூட அனைவரும் முடிவு செய்துவிட்டனர் என்று பதிவு செய்துள்ளனர். இடதுசாரிகளும் காங்கிரசும் இணைந்து திரிபுராவில் தேர்தலை சந்தித்தனர். பிரசாந்த் கிஷோர் தான் எதிர்க்கட்சித் தலைவர்களை ஆதரிக்காமல் இருக்கிறார்.

மோடி வந்த பிறகு இந்தியா உலக அரங்கில் அசிங்கப்பட்டு தான் கிடக்கிறது. ராகுல் காந்தி ஆளுமைமிக்க ஒரு தலைவர். உலகின் நம்பர் ஒன் பல்கலைக்கழகம் என்று அறியப்படும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முன்பு அவர் பேசுகிறார். அதற்கான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் தரத் தயாராக இருப்பதாக அவர் கூறிவிட்டார். ஆனால் அதானி ஊழல் குறித்து யாரும் பேசிவிடக்கூடாது என்பதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தை முடக்குகிறது பாஜக. அவர் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பாஜகவிடம் என்ன திட்டம் இருக்கிறது? பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாரிடம் விற்றுவிட்டார்கள். இவர்களுடைய தலைமையில் இருக்கும் வரை இந்தியா வளராது. இவர்கள் குஜராத்திற்கு ஒதுக்கும் தொகை எவ்வளவு, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கும் தொகை எவ்வளவு? பாஜக பாரபட்சமாகத் தான் நடந்துகொள்கிறது. பாஜகவுக்கு எதிராகப் போராட்டம் அறிவித்திருக்கும் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள். பாஜகவுக்கு எதிராக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் நாட்டு மக்களால் கவனிக்கப்படுவார்கள். இந்த சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும்.

ஆன்லைன் ரம்மியால் 44 பேர் இறந்திருக்கின்றனர். அதற்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு உரிமை உண்டு என்கிறார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர். அதிகாரம் இல்லை என்கிறார் தமிழ்நாடு ஆளுநர். மக்களின் உயிர் மேல் அக்கறையற்ற, இரக்கமற்றவர்களாக இவர்கள் நடந்துகொள்கின்றனர். ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அரசு தரப்பில் விளக்கம் கொடுத்தாகி விட்டது. ரம்மி கம்பெனியினர் ஆளுநரை நேரடியாகச் சென்று சந்தித்துவிட்டனர். தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்புவோம். அனுமதி அளிக்கவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் நடத்துவார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT