ADVERTISEMENT

சில்லரை இல்லயேப்பா...பரவால்ல அப்புறம் வாங்கிக்கிறேன்...இடைத்தேர்தல் அதிர்ச்சி ரிப்போர்ட்!

04:52 PM Oct 18, 2019 | Anonymous (not verified)

நாங்குநேரி தொகுதிக்குள் வரும் பெரிய ஊர் களக்காடு. இந்த ஊரில் இருக்கும் பெட்டிக் கடை ஒன்றில், காலை பேப்பர்களை வாங்க வந்தார் ஒரு இளைஞர். வெறும் 18 ரூபாய்க்கு பேப்பர்களை வாங்கி விட்டு, 500 ரூபாய் நோட்டை நீட்டினார். "சில்லைரை இல்லயேப்பா''. "பரவால்ல அப்புறம் வாங்கிக்கிடுதேன், இல்லேன்னா பார்த்துக்கலாம்'' என அசால்டாக சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

மதியம் 12 மணி டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது. குடி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தெரிந்த முகங்கள் என்பதால், வழக்கம்போல் 105 ரூபாய் சரக்கை நீட்டுகிறார் டாஸ்மாக் ஊழியர். "ஏலே கோட்டிக்காரா இந்த சரக்கை அடிச்சா உடம்பு என்னத்துக்காறது, 180 சரக்கு எடுலே''’என சர்வ சாதாரணமாக கேட்டு வாங்கிப் போகிறார்கள்.

ADVERTISEMENT



அந்தளவுக்கு தொகுதியில் பணப்புழக்கம் பெருத்தோடுகிறது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நட ராஜன் என தொகுதியை முற்றுகையிட்டிருந்தாலும் தொகுதிக்கு தலைமைப் பொறுப்பாளர் அமைச்சர் தங்கமணிதான். அனைத்து வகையான கவனிப்புகளையும் இவர்தான் கவனித்துக்கொள்கிறார். மாவட்டத்தின் பிரபலங்களான மனோஜ்பாண்டியனும் புறநகர் மா.செ.வான பிரபகாரனும் டம்மியாக்கப்பட்டதால், அவர்களின் ஆதரவாளர்களை தேர்தல் களத்தில் காண முடியவில்லை.

என்னதான் கையில் கரன்சிக் கட்டுக்களை வைத்துக்கொண்டு சுற்றினாலும் பல கிராமங்களில் மக்களைச் சமாளிப்பதே அமைச்சர்களுக்கு பெரும்பாடாக இருக்கிறது. மூலக்கரைப்பட்டி கிராமத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, அருகில் உள்ள தேவேந்திரகுல மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சென்றார். அப்போது கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் படங்களைப் போட்ட பிட் நோட்டீசை வினியோகம் செய்திருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இதைப் பார்த்து டென்ஷனான அம்மக்கள், "எங்க தலைவருங்கதான் உங்களுக்கு ஆதரவில்லைன்னு சொல்லிட்டாங்கள்ல, அப்புறம் எதுக்கு அவுக படத்தைப் போட்டீங்க'' என உஷ்ணமானதைப் பார்த்து பாதி வழியிலேயே திரும்பிவிட்டார் வெல்லமண்டி. அதேபோல் பட்டர்புரம் கிராமத்திற்கு அமைச்சர் காமராஜ் சென்ற சமயத்தில் ஒரு பஸ் வந்திருக்கிறது. இதைப் பார்த்ததும் காமராஜை சூழ்ந்து கொண்ட மக்கள், "இதுவரைக்கும் இந்த ஊருக்கு வராத பஸ், நீங்க வந்தன்னைக்கு மட்டும் வந்திருக்கு. அதே மாதிரி இங்க இருக்கும் ரேஷன் கடையால எங்களுக்கு எந்த பிரயஜோனமுமில்லை''’என ஆவேசமாகியிருக்கிறார்கள். அருகில் நின்றுகொண்டிருந்த மாஜி எம்.எல்.ஏ. மாணிக்க ராஜாவை கடுகடு முகத்துடன் காமராஜ் பார்க்க, திருதிருவென முழித்திருக்கிறார் மாணிக்கராஜா. இனிமேலும் இங்க இருந்தா சரிப்பட்டு வராது என நினைத்த காமராஜ், விருட்டென வண்டியைக் கிளப்பிக்கொண்டு போய் விட்டார்.

கிருஷ்ணசாமியும், ஜான்பாண்டியனும் இலைக்கு ஆதரவில்லை என ஓப்பனாகவே சொல்லிவிட்டதால், 30,770 வாக்குகளைக் கொண்டிருக்கும் தேவேந்திரகுல வேளாளர்களின் பருத்திக் கோட்டை நாட்டார்கள் அமைப்பின் பிரதிநிதிகளான சிதம்பரம், பாலசுப்பிரமணியன் போன்றவர்கள் இலைத் தரப்பை எதிர்த்து தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இதற்கிடையே அமைச்சர்களை வழிமறித்து, கருப்புக் கொடி காட்டியதற்காக மூலக்கரைப்பட்டி அ.தி.மு.க. ந.செ.அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 5 பேர் மீது எஃப்.ஐ.ஆர்., உன்னங்குளம் கிராமத்தினர் சிலர் மீது நாங்குநேரி போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆர். போட்டு, கொதிநிலையை மேலும் கூட்டியுள்ளது ஆளும்கட்சி.

ADVERTISEMENT


ஆனால் எல்லா பிரச்சினைகளையும் பணத்தால் சரிபண்ணிவிடும் முடிவுடன் அமைச்சர் தங்கமணி அள்ளி வீசிவருகிறார். பூத் கமிட்டிக்கு முதல் ரவுண்ட் கரன்சி சப்ளையாகியுள்ள நிலையில் ஓட்டுக்கு 2 ஆயிரம், அட்வான்ஸ் ஆயிரம் என மக்களைக் குஷிப்படுத்தும் வேலைகள் கன ஜோராக நடக்கிறது. ஆளும் கட்சிக்கு ஈடாக இல்லையென்றாலும் ஓட்டுக்கு ஆயிரம், என்ற கணக்குடன் கோதாவில் குதித்திருக்கிறார் காங்கிரசின் ரூபி மனோகரன். சில கிராமங்களுக்கு எம்.பி.வசந்தகுமாருடன் போனபோது, மக்களிடமிருந்து முணுமுணுப்பு கிளம்பியதால், ரூபி மனோகரனுடன் செல்வதை வசந்தகுமாரே தவிர்த்துவிடுகிறார். வி.சி.க.வின் 17,949 வாக்குகளையும் காங்கிரசுக்கு திருப்பிவிடும் முனைப்பில் தொகுதியை வலம்வருகிறார் வி.சி.க. தலைவர் திருமா.


ஐ.பெரியசாமி தலைமையிலான தி.மு.க. தேர்தல் படையின் சுறுசுறுப்புதான் காங்கிரஸ் ரூபி மனோகரனுக்கு தெம்பையும் நம்பிக்கையையும் கொடுத்து வருகிறது. பணப்பட்டுவாடா மொத்தத்தையும் தி.மு.க.வினரிடம் ரூபி மனோகரன் ஒப்படைத்துவிட்டதால் லோக்கல் காங்கிரஸ் புள்ளிகள் அப்செட்டில் இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட ஐ.பெரியசாமி, அந்தப் புள்ளிகளை அழைத்து, அவர்கள் மூலமும் பட்டுவாடா செய்ய ஏற்பாடு பண்ணிவிட்டார். இன்னும் இரு நாட்களில் இரண்டு தரப்பும் கரன்சி சப்ளையில் இறங்கும் என்பதால், தீபாவளி கோலாகலமாக இருக்கும் என்கிறார்கள் நாங்குநேரி தொகுதிவாசிகள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT