ADVERTISEMENT

கோபி சார்...! காலத்தின் விளையாட்டு!

01:14 PM Dec 16, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


சென்னை அமிஞ்சிக்கரை பச்சையப்பா கல்லூரி அருகில் ஹாரிங்டன் சாலையில் அப்போது எங்கள் நக்கீரன் அலுவலகம் இருந்தது. ஆண்டு 96, 97 ஆக இருக்கலாம். அப்போது எங்கள் அலுவலகத்தில் பிழை திருத்துநராகப் பணியில் வந்து சேர்ந்தார் கோபிகிருஷ்ணன்.

ADVERTISEMENT

குள்ள உருவம். மாநிறம். பெரிய சைஸ் மூக்குக் கண்ணாடி, ஆழ்ந்த அமைதி முகாமிட்ட முகம். ஜிப்பா, ஜோல்னா பை அணிந்திருப்பார். நேருக்கு நேர் பார்த்தால் மனதை வருடும்படி புன்னகைப்பார். பணியில் சேர்ந்த நான்கைந்து நாட்களிலேயே என்னிடம் நட்பாகப் பழக ஆரம்பித்தார் கோபி சார். அப்போதெல்லாம் நான் அதிகமாகத் தேநீர் குடிக்கும் இயல்புள்ளவனாய் இருந்தேன். அவரும் தேநீர்க் காதலர். நானும் அவரும் அடிக்கடி, தெருமுனையில் இருக்கும் நாயர் கடைக்குப் போக ஆரம்பித்தோம். அங்குதான் எங்கள் நட்பு வேர்பிடித்து வளரத் தொடங்கியது. உருவத்துக்கும் சற்றும் பொருந்தா வகையில் மறைவாகச் சென்று பீடி புகைத்து வருவார். பேசப் பேசத்தான் தெரிந்தது, கோபி சார், சிறுகதை எழுத்தாளர் என்பது.

அவரது கதைகளைப் படிக்கத் தொடங்கிய நான், வியந்துபோனேன். அத்தனையும் மனதை உலுக்கும் வகையிலான எதார்த்தக் கதைகள். தான் சந்தித்த அனுபவங்களை மட்டுமே சற்றும் கூட்டிக் குறைக்காமல் அபப்டியே அப்பட்டமாக எழுதுவார். அவை அவ்வளவு ஈர்ப்பாக இருந்தன.


வறுமையின் தீவிரப் பிடியில் உழன்றுகொண்டிருந்த கோபி சார், எதிலும் சமரசம் செய்துகொள்ளமாட்டார். உலகியல் நீக்குப் போக்குகளிலில் இருந்து விலகி, எவராயினும் கவலைப்படாமல் தன் போக்கிலேயே செல்வார். நேர்மைப் பண்பு கூட அவரை நோய் போல்தான் தொற்றிக்கொண்டிருந்தது. அவசரத்திற்குச் சிறு தொகையைக் கைமாற்று வாங்கினால் கூட, அதை சம்பள நாளன்று முதலில் உறையைப் பிரித்துக் கொடுத்துவிட்டுதான் நகர்வார். பிறகு கொடுங்கள் என்றாலும் கேட்கமாட்டார். ஆனால் அவர் சூழல் மறுநாளே மீண்டும் கைமாற்றுக்கு அழைத்து வந்துவிடும்.

அவர் சந்திக்க நேர்ந்த நிறமிழந்த மனிதர்கள், வாய்த்த மோசமான அனுபவங்கள், வழிமறித்த வாழ்வில் நெருக்கடிகள், அவர் நம்பிய அதீத பொதுமைச் சித்தாந்தம், அதோடு ஒத்துப்போக முடியாத சமுதாயம் என எல்லாமும் சேர்ந்து அவரது மனதைக் கொஞ்சம் இடையூறு செய்ததால், அதற்கான மருத்துவத்தையும் அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். பட்டதாரியான அவர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய போதும், அங்கெல்லாம் தகுதிக்குக் குறைவான வேலைகளையே அவர் செய்ய நேர்ந்தது. அதனால் தன் தன்மானத்துக்கு இழுக்கென்று எங்கே, எப்போது உணர்ந்தாலும் அந்த வேலையை அந்த நொடியிலேயே அப்படியே தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுகிற இயல்புகொண்டவராக இருந்தார்.


அவருக்கு மனைவி, மகள் என குடும்பம் இருந்தபோதும், குடும்ப அமைப்பு முறையில் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அது குறித்தெல்லாம் அவர் வைக்கும் கருத்து, திகைப்பையும் அச்சத்தையும் தரும். அவருக்கென அறிவார்ந்த ஒரு நட்பு வட்டமும் இருந்தது.

என் வீட்டில் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டால், அவரை என் வேளச்சேரி இல்லத்திற்கு அழைத்து வந்துவிடுவேன். சம்மணம் கொட்டி உட்கார்ந்து கொண்டு, ஏகாந்தமாகப் புகைத்துக்கொண்டே இருப்பார். எப்போதாவது குறைந்த அளவில் மது அருந்துவார். மனம் போன போக்கில் உரையாடிக்கொண்டே இருப்போம். குரலுயர்த்தியோ வரம்பு மீறியோ பேசமாட்டார். அவருடன் உரையாடுவது மிகவும் மேம்பட்ட அனுபவம். அவரும் அவ்வாறு உணர்வதாகச் சொல்வார். நள்ளிரவுக்கு மேல் நான் அயர்ந்துவிடுவேன். விழித்துப் பார்க்கும் போதெல்லாம் அதே இடத்தில் அதே கோலத்தில் அசையாது அமர்ந்தபடி எங்கோ பார்த்தபடி புகை மண்டலத்துக் கிடையில் இருப்பார்.

புயல், தூயோன், இடாகினிப் பேய்களும் நடை பிணங்களும் , ஒரு பேட்டியின் விலை முப்பத்தைந்து ரூபாய் என அவர் எழுதிய கதைகள் ஒவ்வொன்றும் அவர் வாழ்வின் அனுபவத் தெறிப்புகள். மனப்பிறழ்வு நோயாளிகளின் உலகத்தை அவருடைய ’உள்ளே இருந்து சில குரல்கள்’ என்ற புதினம், அழுத்தமாகப் படம் பிடித்துக் காட்டியது. அந்தப் புதினம் அப்போது என்னை நிறைய பாதித்தது. அவர் எழுதிய ’டேபிள் டென்னிஸ்’ குறும் புதினம், நான் சந்தித்த முதல் அதிர்ச்சி எழுத்தாகும்.

தன் எழுத்தாலும் அன்பான நட்பாலும் அறிவார்ந்த சிந்தனையாலும் என்னைக் கவர்ந்த கோபிகிருஷ்ணன்,
நடைமுறை வாழ்வின் ஒவ்வாமையால், நக்கீரனில் இருந்தும் ஒரு நாள் விடைபெற்றார். போகும் போது வெகு நேரம் என் கைகளைப் பற்றிக்கொண்டு இறுக்கமான மெளனத்தில் இருந்தார். அதன் பின் இரண்டு அஞ்சலட்டைகள் எழுதினார். பின்னர் அவர் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை.


அவரைப் பார்க்கவும் எனக்கு வாய்க்கவில்லை. 2003-ல் ஒருநாள் அவர் மறைந்த செய்தி சற்றுத் தாமதமாக வந்தது. அன்று இரவு, ஊதுபத்திகளைக் கொளுத்திவைத்துக் கொண்டு ஒரு பித்தனைப் போல் அந்த புகைமண்டலத்தில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தேன்.


கோபிகிருஷ்ணனின் எழுத்து வன்மையையையும் திறனையும் அறிந்தவர்கள் சிலர்தான். பிரபல எழுத்தாளர்கள் பலராலும் நேசிக்கப்பட்ட கோபிகிருஷ்ணன், புகழ் வெளிச்சத்திற்கு வராமலே போய்ச்சேர்ந்துவிட்டார்.

வாழும் போது நூறு ரூபாய்க்கும் இரு நூறு ரூபாய்க்கும் அல்லாடக் கூடியவராக அவரை வாழ்க்கை வைத்திருந்தது. இன்று அவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பொன்றின் விலை 800 ரூபாய் என்று பார்த்தபோது, காலத்தின் விளையாட்டு புரிந்தது.

கோபி சாரின் அந்த மனம் வருடும் புன்னகை இப்போதும் என் நினைவில் அப்படியே உறைந்து போயிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT