Skip to main content

நியாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண்...

காயங்கள் பட்ட போதும், களம்பல கண்ட போதும், நியாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண் வாழ்க...!

 

poems about nakkheeran gopal

 

                                                       நெற்றிக்கண் வாழ்க!

                                                                                        -கவிவேந்தர் மு.மேத்தா

நக்கீரன் கோபால் என்றால்
நடமாடும் துணிச்சல் அன்றோ!
நக்கீரன் கோபால் என்றால்
நரிகட்குக் குடைச்சல் அன்றோ?


செங்கோட்டை செயிண்ட்ஜார்ஜ் கோட்டை
சீறலாம்; அஞ்ச மாட்டார்!
கங்கையும் கடலும் சேர்ந்து
கலக்கலாம்; கலங்க மாட்டார்!


ஆளுநர்க்கு அல்ல; எங்கள்
அன்னையின் பூமி! மண்ணில்
வாழுநர்க்கே என்று சொல்வார்
வாதத்தில் என்றும் வெல்வார்!


காயங்கள் பட்ட போதும்
களம்பல கண்ட போதும்
நியாயத்தின் பக்கம் நிற்கும்
நெற்றிக்க்கண் வாழ்க! வாழ்க!

 

poems about nakkheeran gopal


 


                                                      என்றென்றும் வாழியவே! 

                                                                                    -ஆரூர் தமிழ்நாடன்

ஞானமெனும் விளக்கெரிய 
நற்குணங்கள் புடைசூழ
ஈனமிகும் உலகத்தின் 
இருள்துடைக்கும் சூரியரே!


கொடைக்கரங்கள் வியர்க்கும்படி
குளிர்மிகுந்த செயல்செய்து
நடைபோடும் திசைக்கெல்லாம்
நறுமணத்தைத் தருபவரே


இதழியல் துறைவியக்க
இளைத்தோரின் கரம்பற்றி
இதயத்தால் உழைக்கின்ற
இனிமைமிகும் காவியமே!
 

ஆன்றோர்கள் கைகூப்ப
அன்பர்கள் மனம்நெகிழ
காண்போர் விழிவிரியக்
கைவீசி நடப்பவரே!
 

இவ்வுலகில் எனக்கும்
இரண்டாம் பிறப்பளித்து
செவ்விய உயிராகிச்
செங்குருதி கலந்தவரே!
 

நெற்றிக்கண்  நெருப்பெடுத்து
நீதியெனும் விளக்கெரித்து
உற்றதுணை போலிந்த
உலகிற்கு வாய்த்தவரே!
 

இதயத்தில் பூப்பூத்து
இசைநூலில் அதைக்கோத்து
விதவிதமாய்ச் சூட்டி
வித்தகரே வணங்குகிறேன்
 

உங்கள் பெருவாழ்வை 
உயிர்நெகிழ வாழ்த்துகிறோம்
எங்கள் நாயகரே!
என்றென்றும் வாழியவே!
 

அண்ணனே! எங்கள் 
அண்ணியார் கரம்பற்றி
இன்னும்பல நூற்றாண்டு
இனிதாக நடையிடுக!
 

அருமைமிகும்  பிள்ளைகள்;
அழகான குடும்பம்;
திருவுடைச் சுற்றங்கள்; 
திளைத்திருக்க நடையிடுக!
 

காலமெனும் தேவதை 
கைகூப்பி வாழ்த்துகிறாள்!
ஞாலத்தின் நல்லிசையே
நாள்தோறும் மகிழ்ந்திடுக!

 

 

poems about nakkheeran gopal


 


                                                    அண்ணா உன்னை வணங்குகிறேன்..!

                                                                                        -மக்கள் கவிஞர் ஜெயபாஸ்கரன்

அண்ணா உன்னை வணங்குகிறேன்-உன்
அறுபதை வியந்து வாழ்த்துகிறேன்.
ஓய்வறியாத உழைப்பாளி- நீ
ஊடக உலகின் போராளி!
 

கொடுக்க நீளும் கைகளை விசி
நடக்க நீளும் உன் கால்கள்!
தொடுக்க வேண்டிய போர்களுக்காக
துடித்து நிமிரும் உன் தோள்கள்!


தெருமுனையிலும் தேநீர்க் கடையிலும்
துலங்கச் சிரிக்கும் உன் பற்கள்!
உரைக்க வேண்டிய நியாயங்களுக்கு
உரத்து வெடிக்கும் உன் சொற்கள்!
 

அடக்கி உன்னை அடைக்க நினைத்தவர்
அடங்கிப் போனது கண்கூடு!
ஒடுக்கி உன்னை ஒழிக்க நினைத்தவர்
ஓய்ந்து போவதே வரலாறு!

 

தடுத்து உன்னைக் கெடுக்க நினைத்தவர்
தொலைந்து போனது கண்கூடு!
வாஞ்சையோடு நீ உறவை நட்பை
வாழ வைப்பதே வரலாறு!
 

ஊடகத் துறையின் பல்கலைக் கழகம்
உனக்குள் ஆயிரம் நூல் உண்டு!
உன்னைப் போல ஊடக உரிமை
உலகிற் களித்தவர் எவருண்டு?
 

அறமும் திறமும் கலந்து வளர்ந்த
ஆல மரம்போல் உயர்ந்தவன் நீ!
எடுக்க எடுக்கக் கொடுக்கும் கடல்போல்
எல்லைகள் இன்றி விரிந்தவன் நீ!


நல்லோர் உனக்குத் துணையாவார்!
நக்கீரன் உறவோர் உடன் வருவார்!-உன்
உன்னதப் பிள்ளைகள் யாவரும் அறிவால்
உன்னையும் கடந்து மேலுயர்வார்!

 

அறம் சூழ்ந்ததுன் வாழ்க்கைத் தரம்!-எம்
அண்ணியார் உமக்குக் கிடைத்த வரம்!-அவர்
அளந்து சொல்லும் ஒவ்வொரு சொல்லும்
அண்ணா உமக்குக் கோடிபெறும்!

 

வாழ்க வாழ்கென வாழ்த்துகிறேன்!-உன்னை
வாஞ்சையோடு நான்  போற்றுகிறேன்!
புயல்களை வீழ்த்தும் பெருமரமே!-உன்
பழங்களில் தமிழகம் நலம்பெறுமே!