ADVERTISEMENT

காவிக் கும்பலுக்கு முடிவுகட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் - நாஞ்சில் சம்பத் அதிரடி!

05:31 PM Sep 25, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் நடப்பு அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது, "திராவிட இயக்கத்திற்கு என ஒரு பெருமை இருக்கிறது. இந்தத் திராவிட இயக்கத்தைப் பற்றி நாம் பேசாத பேச்சுகள் இல்லை. வானளவுக்குப் பேசியுள்ளோம். அண்ணா நாடாளுமன்றத்தை திகைக்க வைத்துள்ளார். நான் ஒரு திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று பெருமையாகக் கூறியுள்ளார். அண்ணா நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சுகளைக் கேட்ட, அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பாபு ஜெகஜீவன் ராம் எழுந்து நானும் திராவிடன்தான் என்று கூறியதை யாரும் மறக்க மாட்டோம். அவரையே திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன் என்று பேசவைத்த நாக்கு அண்ணாவின் நாக்கு! காவிக் கும்பல்களுக்கு ஒரு முடிவெடுக்க வேண்டுமானால் எட்டுத்திசைகளிலும் நம் முழக்கத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கான தொடக்கத்தை தம்பி உதயநிதி இங்கே தொடங்கி வைத்துள்ளார். அன்றைக்கு திராவிட இயக்கத்தாருடைய பேச்சைக் கேட்காமல் இருந்திருந்தால், இந்த இடத்திற்கு நான் வந்திருக்கவே மாட்டேன். 1977-ம் ஆண்டு நெல்லையில், கலைஞர் நெருக்கடி நிலையை எதிர்த்துப் பேசிய பேச்சுகளைக் கேட்காமல் இருந்திருந்தால் நான் இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டேன்.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வார்த்தைகள் அதிகம் ஒலித்துக்கொண்டு இருக்கும். ஆனால், தற்போது ஒரு வார்த்தை தொடர்ந்து ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அது, அடுத்த முதல்வர் ஸ்டாலின் என்பதுதான். அவரை கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இந்தத் திராவிட இயக்கம் செய்து வருகின்றது. எந்த ஒரு ஆர்ப்பாட்ட அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் தமிழகத்தின் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்க, தன்னாலான முயற்சிகளை எடுத்து வருகின்றது. இன்றைக்கு ஸ்டாலின் மீது வேண்டுமென்றே சனாதான கும்பல் கல் எறிகிறார்கள். திட்டமிட்டு அதனைச் செயல்படுத்துகிறார்கள். நம் கொள்கை வழிநின்று ஏதாவது செய்திகளைக் கூறினால் நம்மை மிரட்டுகிறார்கள், தொலைப்பேசியில் தொல்லை தருகிறார்கள். இது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது எல்லாம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு மோசமான கலாச்சாரம் தமிழகத்தில் காலூன்ற எத்தனிக்கின்ற காலக்கட்டம் இது. ஒரு கலாச்சார பாசிசம் என் கண்ணுக்கு எதிரே தெரிகிறது.

அண்ணா, கலைஞர் இல்லாத குறையை இன்றைக்கு ஸ்டாலின் போக்கிக்கொண்டு இருக்கிறார். நூற்றாண்டு கண்ட இந்தத் திராவிட இயக்கத்தை தற்போது ஸ்டாலின் தூக்கி சுமந்து வருகிறார். நம்முடைய தமிழக மக்கள்தான், இன்னும் அவரை முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லையே தவிர, மராட்டிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள உத்தேவ் தாக்கரே கூட இவரைத்தான் முதல்வராக நினைத்துக் கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமன் சோரன் பொறுப்பேற்றால் கூட அவர் ஸ்டாலினை தான் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கிறார். எனவே தென்னகத்தின் சார்பில் வாழத்துவதற்கு நம் தலைவரைத்தான் அழைக்கிறார்கள். அவரை விட்டால் அழைப்பதற்கு யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது. ஜெகன் மோகன் ரெட்டி யாரை அழைக்கிறார், நம்முடைய ஸ்டாலினைத்தான் அழைக்கிறார். தென்னாட்டு அரசியலில் அதிசயத்தை ஸ்டாலின் நிகழ்த்தி வருகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், தேவையில்லாத ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டுகளை நம்மீது வைக்கிறார்கள். எனவே அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, நாம் ஸ்டாலினை முதல்வராக்க பாடுபட வேண்டும்" இவ்வாறு பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT