ADVERTISEMENT

மலையாளத்தின் மனோரமா இவர்! 

09:44 AM Mar 26, 2018 | raja@nakkheeran.in

மார்ச் 26 - நடிகை சுகுமாரியின் நினைவு நாள்

ADVERTISEMENT


தமிழகத்தில் பிறந்த நாஞ்சில் நாட்டுப் பெண்மணி, கேரளா சினிமா உலகை ஆண்டார். தமிழகத்தில் ஆச்சி மனோரமா போல இவர் மலையாளத்தின் மனோரமாவாக இருந்தவர். கேரளாவில் இவர் கொண்டாடப்பட்டார். தமிழ் சினிமாவிலும் இவர் நடித்துள்ளார், அவர் நடிகை சுகுமாரி.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சத்தியபாமாவை திருமணம் செய்துக்கொண்டார் கேரளாவை தாய்வீடாக கொண்டமாதவன்நாயர். மாதவன், நாகர்கோவிலில் இருந்த வங்கி ஒன்றின் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டு இருந்தபோது 1940 அக்டோபர் 6ந்தேதி தமிழகத்தில் நாகர்கோவிலில் பிறந்தார் சுகுமாரி. சுகுமாரியோடு பிறந்தவர்கள் 4 சகோதரிகள், 1 சகோதரன்.

ADVERTISEMENT



கேரளாவில் ஆரம்பக் கல்வியை 2ஆம் வகுப்பு வரை படித்தவர், பின்னர் சென்னை வந்து 4ஆம் வகுப்பு வரை படித்தார். சுகுமாரியின் அம்மா சத்தியபாமாவின் அண்ணன் மனைவி குஞ்சம்மா என்கிற சரஸ்வதி. இவர் நடிகை பத்மினியின் தாயார். சுகுமாரிக்கு அத்தை முறை. பத்மினி சென்னையில் வசித்துக்கொண்டு இருந்தபோது, அந்தக் குடும்பத்தில் ஒருவராக சுகுமாரி வளர்ந்தார். அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் 1951ல் வெளிவந்த 'ஓர் இரவு' திரைப்படத்தில் நாகேஸ்வரராவ் நடித்திருந்தார். அந்தப் படத்தில் 11 வயதான சுகுமாரி குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் சுகுமாரியும் முறையாக நடனத்தை கற்றுக்கொண்டார். சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டு இருந்தார்.

சுகுமாரி தனது 19வது வயதில் 1959ல் இயக்குநர் பீம்சிங்கின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டார். திருமணம் ஆனாலும் சுகுமாரி நடிக்க விரும்பியதால் பீம்சிங்கும் அனுமதித்தார். எம்.ஜி.ஆர் – சிவாஜி காலம், கமல் – ரஜினி காலம், விஜய் – அஜித் காலம், தற்போது தனுஷ் படங்கள் வரை நடித்துள்ளார் சுகுமாரி. அவர் இறக்கும் வரை நடித்தார். சுமார் 2500 படங்கள் நடித்துள்ளார். அதில் 80 சதவிகித படங்கள் மலையாள திரைப்படங்கள். கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் நடித்துவிட்டார் அவர். இதனால் அவரை மலையாளத்தின் மனோரமா என்றழைத்தனர். அவர் ஏற்று நடித்திராத பாத்திரமில்லை என்கிற அளவுக்கு நடித்துள்ளார்.



சுகுமாரிக்கு 38 வயதாகும் போது கணவர் பீம்சிங் இறந்துவிட்டார். இதனால் அதிகம் கவலைப்பட்டார். திரைப்படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார். ஆனால், சக திரைத்துறை நண்பர்களின் வற்புறுத்தலுக்கு பின் மீண்டும் நடிக்கத் துவங்கினார். இவர்களது ஒரே மகன் மருத்துவர் சுரேஷ். இவரும் தற்போது திரைத்துறையில் உள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தின் சார்பில் வழங்கப்படும் அரசு விருதுகள் உட்பட நூற்றுக்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளார். உச்சமாக 2003ல் சுகுமாரிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் விளக்கு ஏற்றும்போது ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நடிகையும், தமிழகத்தின் முன்னால் முதல்வருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சுகுமாரி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சந்தித்து நலம் விசாரித்துவிட்டு சென்றார். சிகிச்சை பலனளிக்காமல் 2013 மார்ச் 26ந்தேதி மறைந்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT