Skip to main content

“குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கடிதம் அமித்ஷாவிடம்..” - நாஞ்சில் சம்பத்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

“Letter to the President is in Amit Shah..” - Nanjil Sampath

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம்; பாஜகவின் ஒன்பது ஆண்டுக்கால சாதனை; அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்; செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளிட்டவை குறித்து திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நமக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் ஆளுநர் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் குறித்து அவர் தெரிவித்ததாவது; 

 

ஆளுநர் வரம்பு மீறிச் செயல்படுகிறார் என்று முதல்வர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதே நேரத்தில், ஆளுநர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கிறாரே?

 

ஒரு அமைச்சரை நீக்குவதற்கான அதிகாரம் ஒரு முதல்வருக்கு மட்டுமே உண்டு. இதைக் கூட தெரிந்துகொள்ளாத ஒருவர் தமிழ்நாட்டில் ஆளுநராக இருப்பது என்பது சாபக்கேடு. ஒரு சாதாரண குடிமகனுக்கு தெரிந்த விஷயம் கூட சனாதன கிடங்குகளில் இருந்து வந்த ஆளுநருக்கு தெரியவில்லை. மனுதர்மத்தை புதுப்பிப்பதற்கு அதிகாரத்தை பயன்படுத்திய ஆளுநர் ஒரு மிகப்பெரிய அத்துமீறலை கூச்சமில்லாமல் செய்கிறார். குடியரசுத் தலைவருக்கு முதல்வர் எழுதிய கடிதம் இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நாட்டில் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பா.ஜ.க உள்பட அனைத்து மாநில முதல்வர்களும் கருதிக் கொண்டிருக்கின்ற வேளையில், நமது முதல்வர் அதைச் செய்திருக்கிறார். குடியரசுத் தலைவர் அந்த கடிதத்தை உள்துறை அமைச்சரகத்துக்கு அனுப்பியதாகத் தகவல் வந்திருக்கிறது. உள்துறை அமைச்சர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்று நமக்கு தெரியாது. ஒருவரை நீக்குவதும், நிராகரிப்பதும் முதல்வருக்கு இருக்கக்கூடிய அதிகாரம். இந்த அதிகாரத்தின் மீது அவர்கள் கை வைத்தால் அரசியல் சட்டம் கேலிக்குரியதாகிவிடும்.

 

“Letter to the President is in Amit Shah..” - Nanjil Sampath

 

ஒரு அரசியல் அமைப்பை சின்னா பின்னப்படுத்துவதற்கு அவர்கள் முயல்கிறார்கள். ஆகவே, இந்த முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கு முதல்வர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். குடியரசுத் தலைவருடைய நிலைமையே மிக மோசமாக தான் இருக்கிறது.

 

ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரை பா.ஜ.க தான் நியமிப்பார்கள். அப்படி இருக்கையில் ஆளுநரை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் சொல்வாரா?

 

அவர்  நடவடிக்கை எடுப்பாரா, மாட்டாரா என்பது எங்களுக்கு முக்கியமல்ல. நாங்கள் இதை அம்பலப் படுத்தியிருக்கிறோம். இப்படியெல்லாம், கொடூர நடவடிக்கைகள் இந்தியாவில் அரங்கேறுகின்றன என்று ஊருக்கும் உலகத்திற்கும் தெரியப் படுத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டின் மாண்பின் மீதும், குணத்தின் மீதும் கொள்ளி வைக்கத் துடிக்கிற பேர்வழிகள் இவர்கள் என்பதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவதில் தி.மு.க இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறது.

 

“அண்ணாமலை நடைப்பயணம் நடக்காது...” - நாஞ்சில் சம்பத்

 

ஆளுநரின் நடவடிக்கை மத்திய அரசுக்கும் தெரியுமென்றால் அமித்ஷா அவரை கண்டித்திருக்க மாட்டாரா?

 

அமித்ஷா கண்டிப்பாரா என்பதும் தெரியாது. அதேபோல் அவர் கண்டித்தால் அதற்கு ஆளுநர் கட்டுப்படுவாரா என்பதும் தெரியாது.  ஒரு ஆளுநர் அநாகரிகமாக அரசியல் சட்டத்தின் வரம்பை மீறி நடக்கிறார். ஆளுநர் என்ற பதவியை துஷ்பிரோயகம் செய்கிறார். ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு விஸ்வாசமாக நடந்து கொள்ளாமல் ஏனோ தானோ என்று நடந்து கொள்கிறார். இந்த நாட்டில், தானே அதிகாரமிக்கவன் என்று காட்டிக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் போடுகிறார். ஆகவே, இப்படிப்பட்ட ஒரு ஆளுநர் பொறுப்பில் நீடிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்பதை முதல்வர் கடிதம் மூலம் தெளிவுபடுத்திவிட்டார்.

 

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலையும் கூறுகிறாரே?

அப்படி கூறியிருந்தால் அதை வரவேற்கலாம். அவரும் கூட தி.மு.க.வில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். அவரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.