ADVERTISEMENT

கழற்றிவிட்ட மலேசியா... கண்ணீர் விட்ட லீ குவான்! - சிங்காரச் சிங்கப்பூரின் கதை!

08:39 PM Aug 09, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிங்கப்பூர் விழாக் கோலம் பூண்டுள்ளது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளோடு தனது 56-வது தேசிய தினத்தைப் பாதுகாப்பாகக் கொண்டாடி வருகிறது. ஆனால், சிங்கப்பூர் வரலாற்றில் இந்த நாள் கொண்டாட்டத்துக்கு உரியதாகவோ மகிழ்ச்சிகரமாகவோ இருக்கவில்லை. கண்ணீருக்கும் கையறு நிலைக்கும் நடுவே சிங்கப்பூர் பிறந்தது. சிங்கப்பூர் இனி சுதந்திர நாடாக இயங்கப் போவதாக அறிவித்த சிங்கைப் பிரதமர் லீ குவான், பேசும்போதே உடைந்து அழுதார். 'ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' எனக் கண்ணீர் வடிக்கவில்லை. மாறாக, வேண்டாத சுதந்திரத்தை வலிந்து திணித்துவிட்டனரே என்று நொந்து அழுதார். எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள் என எவ்வளவோ மலேசியாவிடம் வேண்டினார். ஆனால், அவர்கள் லீ குவானின் கோரிக்கையைப் புறந்தள்ளினர். சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்தது ஏன்? அதற்காக சிங்கப்பூர் சிற்பி லீ குவான் ஏன் கண்ணீர் விட வேண்டும்? தேசிய தினத்தின் வரலாறு என்ன? விரிவாகப் பார்ப்போம்.

பதினோராம் நூற்றாண்டில் சோழச் சக்ரவர்த்தி முதலாம் ராஜேந்திர சோழன் சிங்கப்பூரில் வெற்றிக் கொடி நாட்டியதாக வரலாறு சொல்கிறது. பிறகு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், சிங்கப்பூர் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் கண்டது. அதையடுத்து இரண்டாம் உலகப் போரில் ஜப்பானால் சிங்கப்பூர் சிதைக்கப்பட்டது. அப்போது சிங்கப்பூர் பிரிட்டன் வசம் இருந்தது. ஜப்பான் ஆட்சியில், சிங்கப்பூர் சீனர்கள் கேட்பாரற்று கொன்று புதைக்கப்பட்டனர். சிங்கப்பூரின் பண்பாடு, வரலாறு, குடிமக்கள் மீது கொடூரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. ஆனால், 'சிங்கப்பூர் இந்தியர்கள்' மீது ஜப்பான் படையினர் எந்த அத்துமீறலிலும் ஈடுபடவில்லை. காரணம், அப்போது ஜப்பானுடன் நட்புறவில் இருந்தவர் நேதாஜி. பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. சிங்கப்பூரை விட்டு ஜப்பான் வெளியேறியது. மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைந்த பிரிட்டன், சிங்கப்பூருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கியது.

'மக்கள் செயல் கட்சி'யை உருவாக்கி வெற்றி நடை போட்டுவந்த லீ குவான், சிங்கப்பூரின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். லண்டனில் வக்கீல் படிப்பை முடித்து தாயகம் திரும்பியிருந்தவர், தபால் ஊழியர்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆதரவாகக் களமிறங்கினார். சிங்கை மக்கள் மத்தியில் லீ குவானின் பெயர் பிரபலமானது. சிங்கையை சிருஷ்டிக்க வந்த ரட்சகர் என லீயை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியது ஜனத்திரள். அதே சமயம், இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தால் இருட்டத் தொடங்கியது பிரிட்டன் சாம்ராஜ்ஜியம். அதிகப்படியான நாடுகளை நிர்வகித்து வந்த பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை விடுதலை செய்தது. அதன் நீட்சியாக, பிரிட்டன் பிடியில் இருந்த மலேசியாவும் விடுதலை பெற்றது. இந்த விடுதலைச் செய்தி பிரிட்டன் ஆளுகைக்கு கீழ் இருக்கும் அண்டை நாடான சிங்கப்பூரில் தீயாய்ப் பரவியது. சிங்கப்பூர் மக்களும் அரசியல் தலைவர்களும் விடுதலைக் குரல் உயர்த்தினர். சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க விரும்பினர். அதேசமயம், மலேசியா கூட்டரசுடன் இணைந்து இயங்கவேண்டும் என்பதே லீ'யின் லட்சியம்.

பல கட்டப் பேச்சுவார்த்தை, கையெழுத்து இயக்கம், மக்கள் கிளர்ச்சி, தலைவர்களின் தொடர் வலியுறுத்தல், இரண்டாம் உலகப் போரின் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சிங்கப்பூருக்கு 1959-ம் ஆண்டு விடுதலை கொடுத்தது பிரிட்டன் அரசு. சிங்கப்பூரை மலேசியாவுடன் இணைப்பதற்கு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டார் லீ. அதையொட்டி, வானொலி, பொதுக்கூட்டம் வழியாக மலேசியாவுடன் இணைவதால், சிங்கப்பூருக்கு ஏற்படப்போகும் நன்மைகளைப் பட்டியலிட்டார். மக்களும் லீ சொல்வதில் உள்ள நியாயங்களைப் புரிந்துகொண்டு ஆமோதித்தனர். 1963-ம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரப்பூர்வமாக மலேசிய கூட்டரசில் இணைந்தது. லீயின் நெடுநாள் கனவு நிறைவேறியது. 'அப்பாடா..' என சிங்கப்பூர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், அடுத்தடுத்த பிரச்சனைகள் வரிசை கட்டியது. 'நாங்கள் மலேசிய அரசியலில் தலையிட மாட்டோம். அதே சமயம், நாங்கள் சுதந்திர நாடாகச் செயலபட விரும்புகிறோம்' என லீ பேசினார். லீயின் இந்தப் பேச்சை மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் ரசிக்கவில்லை. ஆரம்பத்திலேயே சிங்கப்பூரை தட்டிவைக்க வேண்டும் என முடிவு கட்டிக் கொண்டார்.

அதற்குள் சிங்கப்பூரின் வலுவான தலைவராக லீ குவான் உருவாகிவிட்டார். சிங்கப்பூர் மக்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வந்தார். அவரின் மக்கள் நலத் திட்டங்கள் சிங்கப்பூரில் வாழும் மலாய், சீனம், தமிழ் மக்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்தது. இதனால், லீயின் செல்வாக்கு சிங்கப்பூரை தாண்டி மலேசியா வரை பரவியது. இது மலேசிய ஆட்சியாளர்களைக் கலவரப்படுத்தியது. எப்படியாவது இவரை கூட்டரசில் இருந்து கழற்றிவிட வேண்டும் என உள்ளுக்குள் சத்தியம் செய்து கொண்டனர். அதனால், முதலில் மறைமுக நெருக்கடிகளை கொடுக்க முடிவு செய்தனர். சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் பொருட்களுக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டது. இதற்கு லீ கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அதையெல்லாம், மலேசிய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் தான் மிக மோசமான ஒரு இனக் கலவரம் சிங்கப்பூரில் நடந்தேறியது. இக்கலவரமே சிங்கப்பூர் தனித்து விடப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாக இருந்தது.

1964-ம் ஆண்டு, சிங்கப்பூரின் பதாங் பகுதியில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, சீனர்களுக்கும் மலாய்களுக்கும் இடையில் திடீர் கலவரம் வெடித்தது. பிரச்சனையில், பல உயிர்கள் பலியாகின. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இது மலேசிய சிங்கப்பூர் அரசுகளுக்கு மத்தியில் பதற்றத்தை உண்டாக்கியது. குற்றச்சாட்டுகள் இரு தரப்பின் மீதும் வைக்கப்பட்டது. மலேசியாவோ ஒரு படி மேலே போய், சிங்கப்பூரை வெட்டிவிட்டால் தான் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு என்றது. லீ அவசரப்பட்டு எந்த வார்த்தைகளையும் கொட்டிவிடவில்லை. ஆனால், இந்தக் கலவரங்களுக்கு சிங்கப்பூரர்கள் மட்டும் காரணமில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார். எல்லாப் பிரச்சனைகளுக்கும் சிங்கப்பூரை குற்றம் சாட்டினர் மலேசிய ஆட்சியாளர்கள். தங்களது வீட்டில் தண்ணீர் வரவில்லை என்றாலும் அதற்கு சிங்கப்பூர்தான் காரணம் எனும் அளவுக்கு சிங்கப்பூரை திட்டித் தீர்த்தனர். மீண்டும் இன்னொரு இனக்கலவரம் மூண்டது. அவ்வளவு தான் இனிமே ஒத்துவராது எனத் துண்டை உதறி தோளில் போட்டது மலேசியா.

மலேசிய நாடாளுமன்றத்தில், சிங்கப்பூரை வெளியேற்றுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 126-க்கு பூஜ்யம் என்ற அளவில் வாக்களித்து சிங்கப்பூரை வெளியேற்றியது மலேசியா. லீயின் இதயம் ஒருகணம் நின்று துடித்தது. மலேசியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி எவ்வளவோ கேட்டுக் கொண்டார். வெட்டிவிட சமயம் பார்த்துக் கொண்டிருந்த மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரகுமானின் காதுகளுக்கு, லீ-யின் கவலைக் குரல் எட்டவில்லை. 'எங்களை தனியாக விட்டுவிட வேண்டாம்' என லீ தனக்குத் தெரிந்த மலேசிய அரசியல் பிரதிநிதிகளிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். எதற்கும் மலேசிய அரசு இறங்கிவரவில்லை. லீ இவ்வளவு கெஞ்சுவதற்கு அர்த்தம் இல்லாமல் இல்லை.

சிங்கப்பூரில் காற்று மட்டுமே கைவசம் இருந்தது. வேறு எந்த உதவியும் இயற்கை செய்து கொடுக்கவில்லை. மிகக் குறைவான இயற்கை வளங்களைக் கொண்ட தேசமாக சிங்கப்பூர் இருந்தது. தன் தேவைகளுக்கு அண்டை நாடான மலேசியாவையே பெரும்பாலும் சார்ந்திருந்தது. குடிநீர் கூட மலேசியாவில் இருந்துதான் கொண்டுவரப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், இந்தப் பிரிவினை லீயை மிகவும் பாதித்தது.

1965 ஆகஸ்ட் 9-ம் தேதி, மலேசிய கூட்டரசில் இருந்து சிங்கப்பூர் வெளியேறியதாக, லீ பத்திரிகையாளர் முன்னிலையில் அறிவித்தார். அப்போது, "இந்தப் பிரிவினையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் வாழ்க்கை முழுதும், சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்தே இருக்கவேண்டும் என்று கருதினேன். பொருளாதாரம் மற்றும் புவிப் பரப்பின் அடிப்படையில் இருதரப்பு மக்களும் ரத்த உறவினர்கள். ஆனாலும், இந்தப் பிரிவு நடந்தேறிவிட்டது" என உடைந்து அழுதார் லீ. இந்த நாள்தான் சிங்கப்பூரின் தேசிய நாளாக அனுசரிக்கப்படுகிறது.

பிரிவுக்குப் பிறகு ஒரு வார காலம் பொதுவெளியில் லீ குவான் தோன்றவில்லை. செய்வதறியாது திகைத்து நின்றார். சில நாட்கள் கழிந்தது. புது மனிதனாக போர்வையை உதறி வெளியே வந்தார். 'அடுத்து என்ன செய்ய வேண்டும்' என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். மலேசியப் படைகள் சிங்கப்பூர் எல்லையில் இருந்து வெளியேறியதால், எல்லைப் பாதுகாப்பு கேள்விக் குறியானது. எப்போதும் சிங்கப்பூரை விழுங்கக் காத்திருந்தது பக்கத்து நாடான இந்தோனேஷியா. சில காலம் பிரிட்டனிடம் படை உதவி கேட்டு ஒப்பந்தம் போட்டார். ஒப்பந்தம் முடிவதற்குள், ராணுவப் பாதுகாப்பை உறுதிசெய்தார். பிறகு, மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றை சிங்கப்பூரின் அரசு மொழிகளாக அறிவித்தார். இப்படி ஒவ்வொன்றாகச் சரிசெய்தார். 'தம்மாத்துண்டு நாடு என்ன கிழித்துவிடப் போகிறது' என ஏளனமாய் பார்த்தவர்களின் விழிகள் விரியும் அளவுக்கு சிங்கப்பூரை உயர்த்திக் காட்டினார். சிங்கப்பூர் பெரிய அளவில் வளர்ந்துவிடாது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், சிங்கப்பூரின் பொருளாதாரம் அசுரவேகத்தில் வளர்ந்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது. அதேசமயம் அரசு கெடுபிடிகளை அதிகரித்தது. ஊடக சுதந்திரமின்மை, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவது, சர்வாதிகாரப் போக்கு உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் லீ மீது முன்வைக்கப்படுகிறது. ஆனாலும், உலக அரங்கில் சிங்கப்பூரை சிம்மாசனத்தில் அமர்த்தியவர் எனும் பெருமை லீ குவானையே சாரும். சிங்கப்பூரின் வாத்தியாராக லீ மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT