ADVERTISEMENT

மோடியை மிரள வைக்கும் லேடி டைகர்! - முதல்வரைத் தெரியுமா? #1  

03:11 PM Apr 23, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

'சாமி' பேருக்கே அர்ச்சனை செய்யச் சொல்லும் முதல்வரை நமக்குத் தெரியும். பல சாமிகளை மிரள வைக்கும் முதல்வரைத் தெரியுமா? சாமி கோவிலில் சமூக சமநிலை நிலைநாட்டிய முதல்வரை நமக்குத் தெரியுமா? தன் மாநிலத்துக்கென தனி கொடி கண்ட முதல்வரைத் தெரியுமா? ஒவ்வொருவராகத் தெரிந்துகொள்வோம்...

29 வயது இளம் பெண் இவர். 55 வயதைக் கடந்த பொதுவுடமை கட்சியின் மூத்த தலைவர் அவர், அகில இந்தியாவுக்கும் தெரிந்த தலைவர். அவரை எதிர்த்து இவரை நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தியது காங்கிரஸ் கட்சி. சின்னப்பொண்ணு, இது போய் மலையை சாய்க்குமா என சொந்த கட்சியிலேயே ஏளனம் பேசியவர்கள் ஏராளம். இவர் பயந்துவிடவில்லை, மலையை எதிர்க்க தயக்கம் காட்டவில்லை, சூறாவளி பிரச்சாரம்; இடதுசாரிகளை எதிர்த்து அதுவரை யாரும் பேசாத பேச்சுகளைப் பேசினார். நீங்கள் மக்களின் தோழனல்ல என்றார். அவரின் பேச்சு மக்கள் மனதை மெல்ல அசைத்தது. தேர்தல் முடிவு, எதிர்த்துப் போட்டியிட்ட மலையை விட சுமார் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இளம் வயது எம்.பியாக 1984ல் இவரை அமர்த்தியது. இவர் மம்தா பானர்ஜி. அரசியலுக்கு மிக இளம் பெண்ணான இவரிடம் தோற்ற அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், பிற்காலத்தில் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக இருந்தவருமான சோம்நாத் சட்டர்ஜி.

ADVERTISEMENT


மலையை மடுவால் அசைக்க முடியும் என இளம் வயதிலேயே நிரூபித்தவர்,அதன் பின் அசைத்ததெல்லாம் குன்றுகளையல்ல, மலைகளைத்தான். வங்காளம் என்றாலே வரலாறுகள்தான். இந்தியாவின் வரலாற்று பக்கங்களை அரசியல், சமூகம், பொருளாதாரம், சமயம், கலை, உணவு என எந்தப் பிரிவுகளில் எழுதுவதாக இருந்தாலும் மேற்குவங்கத்தை தவிர்த்துவிட்டு எழுதவே முடியாது. அரசியல் புரட்சியாளர்களை, சமூக புரட்சியாளர்களை, மதபுரட்சியாளர்களை இந்தியாவுக்குத் தந்த மண் மேற்குவங்கம். அரசியலில் சுபாஷ்சந்திரபோஸ், பிபின்சந்திரபால், சித்தரஞ்சன்தாஸ், சமூக புரட்சி செய்த ராஜாராம் மோகன்ராய், ரவிந்திரநாத்தாகூர், மதத்தலைவர்கள் ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர், கலையில் சத்தியஜித்ராய் போன்றவர்களை பெற்ற மாநிலம் மேற்குவங்காளம்.

சோம்நாத் சட்டர்ஜி

மேற்குவங்க மக்கள் அமைதியானவர்கள், அடுத்தவர்களுக்கு உதவியென்றால் ஓடி வந்து முன் நிற்பார்கள். மக்களுக்கு எதிரான விவகாரம் என்றால் மக்கள் பொங்கிவிடுவார்கள். அதிரடியைத் தான் அந்த மாநிலம் விரும்பும். அதனால் தான் காந்தியை விட சுபாஷ் சந்திரபோஸைக் கொண்டாடினார்கள். அந்த வரிசையில் தான் மத்தியில் மதவாத, மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் மோடி ஆட்சியை எதிர்த்து கடும் குரல் கொடுத்து லேடி டைகர் என்கிற பெயரை பெருகிறார் பெங்காலின் முதல்வர் 'தீதி' மம்தாபானர்ஜி.

மேற்குவங்க அரசியல்

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது வங்காளத்தில் மத மோதல்கள் உருவாயின. அப்போது இந்துக்கள் அதிகமிருந்த பகுதி மேற்கு வங்கம் எனவும், இஸ்லாமியர்கள் அதிகமிருந்த பகுதி கிழக்கு வங்கம் என்கிற பெயரிலும் பிரிக்கப்பட்டது. கிழக்கு வங்கம் பாகிஸ்தானோடு இணைந்தபின் அது கிழக்கு பாகிஸ்தான் என பெயர் மாற்றமடைந்தது. பின்னர் கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாகி வங்கதேசம் என்கிற பெயரில் உள்ளது. மேற்குவங்கத்தின் பெரு நிலக்கிழார்களின் ஆதரவை காங்கிரஸ் பெற்றிருந்தது. விவசாய கூலி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் இருந்தது கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர்களிடமும் ஆதிக்கம் செலுத்தியது. இருந்தாலும் பெருநிலக்கிழார்கள் ஆதரவால் 1948ல் இருந்து ஆட்சி பொறுப்பில் இருந்து வந்தது காங்கிரஸ் கட்சி.



1967ல் மேற்குவங்கத்தில் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடையாது, அனைத்து தரப்பு மக்களிடம் வரி, வரியென அதிக வரிகள் வசூலிக்கப்பட்டது. உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. மின்சார பற்றாக்குறையால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. தொழிலாளர்கள் பராரியாகத் திரிந்தனர், திரும்பிய பக்கமெல்லாம் போராட்டம். இதைத் தடுக்க முடியாமல் காங்கிரஸ் அரசாங்கம் திணறியது. 'ஆண்டைகளே ஆண்டைகளே, எங்களை ஆண்டது போதும்' என குரல்கள் ஓங்கி ஒலித்தன.

சாரு மஜும்தர்


மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்தார் சாரு மஜும்தர். வடபகுதியில் இருந்த விவசாயிகள் போராட்டக் களத்துக்கு வந்தனர். இதன் பின்னால் இருந்தது சாருமஜும்தர். போராடிய விவசாயிகளை ஆயுதம் கொண்டு அடக்கியது காங்கிரஸ் அரசாங்கம். நிலச்சீர்த்திருத்தம் வேண்டும் என்றார்கள் விவசாயக் கூலி மக்கள். நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் விவசாய நிலங்களை வைத்திருந்த நில உடமையாளர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய கூலி தொழிலாளர்களை துப்பாக்கி சூடு நடத்தி அடக்க முயன்றது.


மேற்குவங்கத்தில் குளிர்பிரதேசமான டார்ஜிலிங் அருகில் உள்ள கிராமம் நக்சல்பாரி. இந்தப் பகுதி முழுவதும் பெருநிலக்கிழார்களிடம் விவசாயத் தொழிலாளர்கள் அடிமையாக இருந்தனர், கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். உழைக்கும் மக்களுக்கே விவசாய நிலங்கள் சொந்தமென இடதுசாரிகள் போராட்டங்கள் நடத்தினார்கள். பெருநிலக்கிழார்களை எதிர்த்து இங்கு உருவாக்கப்பட்ட இயக்கம் நக்சல்கள் என்கிற பெயரிலேயே அழைக்கப்பட்டு பின்னர் அது பொதுப் பெயரானது. 'அரசாங்கம் ஆயுதம் தூக்கினால் நாமும் நம்மை காத்துக்கொள்ள ஆயுதம் தூக்குவோம். நம்மை காத்துக்கொள்ள, நம் உரிமைகளை பெற ஆயுதமே துணை என்றார் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து புரட்சிகர இயக்கமான நக்சல் படையை உருவாக்கிய சாருமஜும்தர். அதன்பின் மேற்குவங்க அரசுக்கும் – நக்சல்களுக்கும் இடையே மோதல்கள் உருவாகி வறுமை தேசம், வன்முறை தேசமாக மாறியது.



நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிலச்சீர்த்திருத்தம் கொண்டு வருவோம் என வாக்குறுதி தந்தனர் மேற்குவங்க இடதுசாரிகள். இது விவசாய கூலி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. 1977 பொதுத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் கட்சியை எதிர்த்து இடதுசாரி முன்னணி என்கிற பெயரில் கம்யூனிஸ்ட்கள் தேர்தலில் நின்றனர். அதுவரை மேற்குவங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்தனர் மக்கள். முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தார்த் சங்கர் ராய் உட்பட பலரும் படுதோல்வி. 1948 முதல் 1977 வரை 28 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. இடதுசாரிகள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தனர். முதலமைச்சராக ஜோதிபாசு பதவிக்கு வந்தார். அடுத்த 22 ஆண்டுகள் இவரது ஆட்சியின் கீழ் இருந்தது மேற்குவங்கம்.


சித்தார்த் சங்கர் ராய், அதன்பின் அரசியல் செய்தாலும் படிப்படியாக ஓய்வு நிலைக்கு சென்றார். அவரால் வளர்க்கப்பட்ட மம்தா பானர்ஜி மேற்குவங்க காங்கிரஸில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகினார்.


இளம் பெண் அரசியல்வாதி வங்கப் புலியென அழைக்கப்படுமளவு உயர்ந்த கதையை வெள்ளிக்கிழமை (27-04-18) அடுத்த பகுதியில் காண்போம்...

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT