Skip to main content

“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

மக்களவைத் தேர்தலில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மேற்குவங்க மாநிலம் தெற்கு தினாபூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியுள்ளார்.
 

n modi

 

 

“மம்தா பானர்ஜி மண், மக்கள், மாநிலம் என பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். ஆனால், திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு வங்கதேச நடிகர்கள் வந்து பிரச்சாரம் செய்கின்றனர். வெளிநாட்டவர்களை வைத்து பிரச்சாரம் செய்ய இவர்கள் வெட்கபடுவதில்லை.
 

மக்களவைத் தேர்தலில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த விவரங்கள் எல்லாம் வந்த பிறகு, மம்தா பானர்ஜி தூக்கம் இன்றி தவித்து வருகிறார். பாஜகவுடைய வெற்றியை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
 

வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்கத்திற்கு ஊடுருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஊடுருவல்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய பாஜக அரசு தீவிரப்படுத்தும்” என்று கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் - அன்புமணி பங்கேற்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Ramdas, Anbumani participate in the BJP public meeting

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் கூட்டத்தின் போது பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க பா.ம.க. முக்கிய பங்காற்றும் என்று அன்புமணி பேசியதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து பா.ம.க. பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தெரிவிக்கையில், “பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. முடிவு செய்துள்ளது. இந்த முடிவை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சேர்ந்து எடுத்த முடிவு ஆகும். எந்தெந்த தொகுதிகள், வேட்பாளர்கள் விபரங்களை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பார். சேலத்தில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி என்ற அறிவிப்பை நாளை (19.03.2024) காலை செய்தியாளர் சந்திப்பின் போது ராமதாஸ் அறிவிக்க உள்ளார். அதே சமயம் பா.ஜ.க. கூட்டணியில், பா.ம.க.வுக்கு தர்மபுரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், சேலம் மற்றும் மத்திய சென்னை உள்ளிட்ட 10 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடத்தை வழங்க பாஜக முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் நாளை (19.03.2024) பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பா.ம.க. சார்பில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். 

Next Story

கோவையில் ‘ரோடு ஷோ’வைத் தொடங்கினார் பிரதமர் மோடி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Prime Minister Modi started the 'road show' in Coimbatore

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) பிற்பகல் நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையே, கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி இன்று (18-03-24) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக ஏற்கனவே, கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18  ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன் 4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஏற்கனவே ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக இன்று (18-03-24) தமிழகம் வந்துள்ளார். பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் சிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கார் மூலம் வாகன அணிவகுப்பு (ரோடு ஷோ) நடக்கும் சாய்பாபா காலனிக்கு சென்றார். அங்கிருந்து கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே, ரோடு ஷோவை பிரதமர் மோடி தொடங்கினார். திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டுள்ளார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்கிறார்.