ADVERTISEMENT

''பா.ஜ.க.வின் அறிவிப்புகள் லாட்டரி சீட்டு விற்பனை உத்திதான்...'' -எஸ்.எஸ்.சிவசங்கர்!

06:56 PM Aug 20, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கை காட்டும் கட்சிதான் ஆட்சி அமைக்கும். இன்னும் 6 மாதங்களில் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றம் நிகழும் என பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் அண்மையில் பேட்டி அளித்திருந்தார். இந்தநிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெற்று பா.ஜ.க. அங்கம் வகிக்கக்கூடிய அரசுதான் அமையும் என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனும் கூறியுள்ளார்.

பா.ஜ.க. தலைவர்கள் இவ்வளவு உறுதியாக பேசுவது பற்றி அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டபோது, ''உலக அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத காட்சிகளை அரங்கேற்றுவது இந்த பாரதிய ஜனதா கட்சியாகத் தான் இருக்கும்.

உறுப்பினர் சேர்க்கையே வித்தியாசம் தான். மிஸ்ட் கால் கொடுத்தால் உறுப்பினர் ஆகலாம் என்றார்கள். சமூக வலைத்தளங்களில், 'என்னிடம் பேச இந்த எண்ணை அழையுங்கள்' என்றார்கள். அழைத்தவர்கள் பாரதிய ஜனதாவின் உறுப்பினர் ஆக்கப்பட்டார்கள். இதைப் போன்ற எளிய நடைமுறை உலக அளவில் எங்கும் கிடையாது.

லாட்டரி சீட்டில் சுரண்டல் லாட்டரி சீட்டு என ஒன்று இருந்தது. லாட்டரி சீட்டின் எண் ஒரு பசைத்தாளால் மறைக்கப்பட்டிருக்கும். அதை நாணய விளிம்பால் சுரண்டுவார்கள். அப்போது எண் தெரியும். அந்த எண் பரிசுப் பட்டியலில் இருந்தால் உடனடி பரிசு என்பது முறை. அது போல பா.ஜ.க. ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையில் எதிர்க்கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் 'சுரண்டப்பட்டு' அவர்களின் ராஜினாமா அறிவிக்கப்படும். எதிர்க்கட்சி ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும். இல்லை என்றால், எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.விலேயே சேர்த்து ஆட்சி பெயர் மாற்றப்படும்.

லாட்டரி சீட்டு விற்பனை இருக்கும் போது இப்படி விளம்பரம் செய்வார்கள், "விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு". வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்தால் வீட்டுக்கு, இல்லை என்றால் நாட்டுக்கு. தனியார் லாட்டரி சீட்டு விற்கும் போதும் பழக்க தோஷத்தில் இதே முழக்கம் வைக்கப்படும். அதே போல பா.ஜ.க.வில் சேரும் எம்.எல்.ஏ.க்கள் தேசபக்தர்கள் என்றும், மற்றவர்கள் தேச விரோதிகள் என்றும் கோஷம் ஒலிக்கிறது.

பா.ஜ.க.வின் தமிழக தலைவர் எல்.முருகனின் அறிவிப்பு இதுவரை காணாதது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தரும் மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் பரிசு என்பது இதுவரை எந்தக் கட்சியும் செய்யாத அறிவிப்பு.

தமிழகத்தில் பா.ஜ.கட்சி நோட்டாவோடு போட்டி போடுவது எல்லோரும் அறிந்ததே. இந்த நிலையில் வரும் தேர்தலிலும் பா.ஜ.க நிலை அதுவாக தான் இருக்கும். அதனால் யாருக்கும் இன்னோவா கார் வாங்கிக் கொடுக்கும் சூழல் வராது. விழாவிட்டால் நாட்டுக்கு என்பது போல பா.ஜ.கவின் இந்த அறிவிப்புகள் லாட்டரி சீட்டு விற்பனை உத்தி தான்'' என்றார்.

சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவும், விளவங்கோடு எம்.எல்.ஏ.வுமான விஜயதரணி நம்மிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. தமிழகத்தில் ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறது. இந்தப் பிம்பத்தை நம்பி தமிழக மக்களோ, கேரள மக்களோ வாக்களிக்க மாட்டார்கள். பலியாகமாட்டார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் அடங்கிய தி.மு.க. தலைமையிலான கூட்டணி பலமாக உள்ளது. இந்தக் கூட்டணிக்கு நிகர் தமிழகத்தில் இல்லை என்றார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நம்மிடம் பேசுகையில், இது அவர்களின் பகல் கனவு. மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். மத்தியில் அளும் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தோல்வியை சந்தித்ததால் அதனை சரிகட்ட தமிழக மக்களிடம் இதுபோன்ற கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவால் வெற்றி பெற முடியாது. பழைய கூட்டணியே அவர்களுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT