ADVERTISEMENT

எப்படி நடந்தது குற்றாலம் விபத்து? வாழ்வாதாரம் பறிகொடுத்த வியாபாரிகள்

07:43 AM Aug 27, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மே மாதம் தொட்டு ஆகஸ்ட் வரையிலான நான்கு மாதத்திற்கும் மேலாக கேரளாவில் கொட்டுகிற தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் மறு புறத்திலிருக்கும் தென்காசி மாவட்டத்தின் அருவிகளின் நகரமான குற்றாலத்தில் எதிரொலிக்கும். குற்றால மலையான தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டுகிற மழை மற்றும் சீசன் காற்றால் குற்றால நகரமே கோடையிலும் குளிர்ந்து மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாய் கொட்டிப் பாய்ந்தோடும்.

களை கட்டும் சீசனால் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதும். இப்படி அலை மோதும் கூட்டங்களால் குற்றாலத்திலுள்ள கடைகள் மற்றும் விடுதிகளின் வியாபாரம் அமர்க்களப்படும். இங்கு அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கக்கான சீசன் கடைக்காரர்களின் வாழ்வாதாரமே மூன்று மாத சீசன் கூட்டத்தையே நம்பியிருக்கிறது. வருடத்தின் மீத மாதங்கள் அத்தனை கடைகளும் விடுதிகளும் காற்றுவாங்கும். தவிர இங்குள்ள அனைத்து கடைகளும் ஏலம் மற்றும் குத்தகை அடிப்படையிலானது. மூன்று மாதமே சீசன், வியாபாரம் என்பதால் கடை ஒன்றின் மூன்று மாதத்திற்கான வாடகை ஆறு முதல் ஏழுலட்சம் வரை போகுமாம்.

இவைகளில் குற்றாலத்தின் ஆலயத்திற்குச் சொந்தமான நிரந்தர மற்றும் தற்காலிக குத்தகைக் கடைகளும் உண்டு. இந்த வாடகை தொகைகள் மற்றும் எங்களின் பிழைப்பின் ஆதாரமும் சீசனில் நடக்கிற வியாபாரத்தை பொறுத்தே இருக்கிறது. மழை மற்றும் அருவிகளின் தண்ணீர் வீழ்ச்சி நான் ஸ்டாப்பாகத் தொடர்ந்தால் நாங்கள் பிழைத்தோம். சீசன் போக்கு காட்டி விட்டால் எங்கள் தலை தப்பாது மாட்டிக் கொள்வோம் என்கிறார் நன்னகரத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர்.

வருடம் தோறும் சீசன் காலங்களில் வியாபாரிகளுக்கு குத்தகையில் விடுவதைப் போன்று குற்றால நகரின் மெயின் அருவியை ஒட்டியிருக்கும் திருக்குற்றால நாதர் சுவாமி ஆலயத்தை ஒட்டி அமைந்த தெற்கு சன்னதி பஜார் நிரந்தர மற்றும் தற்காலிக கடைகளை குத்தகைக்கு விட்டிருக்கிறது ஆலய நிர்வாகம். ஆலயத்தை ஒட்டியுள்ள இடங்களில் 40 கடைகள் அமைத்துக் கொள்வதற்கான குத்தகை 10X10 அளவு அடிகள் கொண்ட ஒரு தரை தள கடையின் வாடகை மூன்று லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை அளவில் குத்தகையில் எடுக்கப்பட்டு அவை மறு ஏலமாக 5 முதல் ஏழுலட்சம் வரை வியாபாரிகளுக்கு மறு குத்தகைக்கு விடப்படுவது வாடிக்கையாம்.

இதனால் கடைக்காரர்கள் ஒவ்வொரு கடைக்கும் போதுமான இடைவெளி, பாதுகாப்பின் பொருட்டு விடாமல் நெருக்கமாகவே அமைத்திருக்கிறார்கள். இதனை ஆலய நிர்வாகமும் பொருட்படுத்தவே இல்லையாம். மேலும் பகலில் வியாபாரத்தில் ஈடுபடுகிற வியாபாரக் குடும்பங்கள் அங்கேயே தங்களுக்கான உணவைத் தயாரித்துக் கொண்டும். இரவு கடையிலேயே தங்கியிருப்பதும் வாடிக்கை. அசைவ, சைவ உணவு கடைகள், டீ ஸ்டால்கள், அலங்காரப் பொருட்கள், ஜவுளிக் கடைகள், புரோட்டா ஸ்டால்கள், குழந்தைகளை வசீகரிக்கிற பொம்மை ஸ்டால்கள் என பல தரப்பட்ட வியாபாரக் கடைகள் அருவிக்குச் செல்கிற இருபுறமும் நெருக்கமாகவே அமைந்திருக்கின்றன.

சமையல் மற்றும் ஹோட்டல் பொருட்டு கேஸ் சிலிண்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிலைமைகள் இப்படிப் போய்க் கொண்டிருக்க, இந்த வருடம் மே மாதம் ஆரப்பிக்கவேண்டிய தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்குவதற்கு காலம் தாழ்த்தினாலும், ஒன்றிரண்டு சமயங்களில் மட்டுமே குளிர்வின் பொருட்டு அருவிகளில் தண்ணீர் கொட்டியிருக்கிறது. ஆனால் அது தொடராமல் கோடையைக் காட்டிலும் வெப்பம் ஆகஸ்ட் வரை 102 டிகிரியையும் தாண்டி கொளுத்தியிருக்கிறது. இதனால் நம்பிக்கை தளர்ந்து போன கடை வியாபாரிகள் வாடகை செலவுகள் மற்றும் தங்களின் ஜீவாதாரம் தள்ளாடுவது கண்டு ரத்தக் கண்ணீர் வடித்துள்ளனர்.

இந்த நிலையில் தான், கடந்த 25ம் தேதி மாலை நேரம் அந்த சம்பவம் நடந்துள்ளது. 25ம் தேதி மதியம் கோயிலின் தென் பகுதியில் அமைந்திருக்கிற ஐயப்பன் என்பவரது பொம்மைக் கடையில் அவர்கள் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென மேல் தார்ப்பாயில் தீ பற்றியதாக தெரிகிறது. கடுமையான வெயில், வீசும் காற்று, தீயின் வேகத்தைக் கூட்ட, அந்தப் பகுதியினர் பதற்றத்தில் தீயை அணைக்க முடியாமல் திணற தீ மேலும் பரவியது. பரவிய தீயின் நாக்குகளால் அடுத்தடுத்து உள்ள டீக்கடை, புரோட்டா கடைகளில் பரவியதால் கடைகளிலிருந்த சிலிண்டர்கள் அணுகுண்டு போல வெடித்துச் சிதற, தீ, மனித சக்தியையும் மீறி அசுர வேகமெடுக்க, மளமளவென அந்தப் பகுதியின் 40 கடைகளிலும் பரவியதோடு கடையின் விற்பனைப் பொருட்களும் கொழுந்து விட்டு எரிய குற்றாலப் பகுதியே கடும் புகை மூட்டத்தால் சூழப்பட்டு விண்ணை முட்டியது.

பதற்றத்தில் தீயை அணைக்க நெருங்க முடியாமல் தவித்த கடைக்காரர்கள், கண் முன்னே தங்களின் முதலீடுகள், பொருட்கள் கருகியதைக் கண்டு கதறினர். தகவல் போய் தென்காசியை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளின் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்குள் அக்கம் பக்க மக்கள் கூட்டம் திரள நிலைமை பதட்டமானது. 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு தீ அணைக்கப்பட, இரு புறமும் அமைக்கப்பட்ட 40 தற்காலிக கடைகளும் பொருட்களும் எரிந்து பிடி சாம்பலாயின.

சம்பவ இடம் வந்த ஆட்சியர் ரவிச்சந்திரன், எஸ்.பி. சாம்சன் உள்ளிட்ட அதிகாரிகள் மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர். தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. என்ற ஆட்சியர், இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இதுவே இரவு நேரம் என்றால் உயிரிழப்பு ஏற்பட்டு விபரீதமாகியிருக்கும் ஆலயத்திற்குப்பட்ட பகுதி கடைகள் என்பதால் ஆலயம் பெறும் குத்தகைப் பணத்தோடு பாதுகாப்பு இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் எங்களுக்கு ஈட்டு தொகை கிடைத்திருக்கும் சற்று தப்பித்திருப்போம். ஆனால் மொத்தம் ரூ. 4 கோடிக்கு மேல் இழந்து வெற்று ஆளாய் நிற்கிறோம் என கண்ணீர் வடித்தார் கடை வியாபாரி ஒருவர். ஆலயத் தரப்பிலோ விளக்கம் ஏதுமில்லை. பரிதவிக்கிறார்கள் வியாபாரிகள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT