ADVERTISEMENT

ஏழாம் நூற்றாண்டில் 12 பல்கலைக் கழகங்கள் - கொரியாவின் கதை #2

12:05 PM Jun 17, 2018 | Anonymous (not verified)


சீனாவின் டாங் பேரரசின் உதவியோடு பயேக்ஜே, கோகுரியோ முடியரசுகளை கையகப்படுத்தியது ஸில்லா. வேலை முடிந்தவுடன் டாங் பேரரசை கொரியா தீபகற்பத்திலிருந்து வெளியேற்றியது ஸில்லா. தனது எல்லையையும், பலத்தையும் விரிவுபடுத்திய ஸில்லா முடியரசு, கடல்கடந்தும் தனது அதிகாரத்தை பரப்பியது.

கொரியா தீபகற்பத்தின் பெரும்பகுதியை தனது ஆளுகைக்கு கொண்டுவந்தது. ஆனாலும், கொரியா தீபகற்பத்தின் வடபகுதியில் இருந்த கோகுரியோ பேரரசின் பல பகுதிகள் பால்ஹே முடியரசின் கீழ் இருந்தது. இந்த முடியரசை டேயே ஜோ யெயோங் என்பவர் மோஹே என்ற பழங்குடியின மக்களை திரட்டி உருவாக்கினார். இந்தக் காலகட்டத்தில்தான் கொரியா தீபகற்பம் வடபகுதி தென்பகுதி என்ற இருகூறாக மாறியது. கோகுரியோ பேரரசின் இடத்தை பால்ஹே பிடித்தது. மஞ்சூரியாவின் தெற்குப் பகுதியை பால்ஹே கைப்பற்றியது. கிழக்கு நாடுகளில் பால்ஹே வளம் கொழிக்கும் நாடாக மாறியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மறுபக்கம் ஸில்லா கிழக்காசிய கடல் வணிகத்தை தன்வசப்படுதத்தியது. சீனா, ஜப்பான் நாடுகளில் ஸில்லா முடியரசின் மக்கள் குடியேறினார்கள். சீனாவின் ஷாண்டோங் தீபகற்பத்திலும், யாங்க்‌ஸே நதியின் முகத்துவாரத்திலும் ஸில்லா மக்கள் குடியேறினார்கள். 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் ஸில்லாவும் செல்வம் கொழிக்கும் நாடாகியது. கலாச்சாரத்திலும் கலைகளிலும் முன்னேறிய நாடாகியது. புத்தமதம் செழித்து வளர்ந்தது. சீனாவின் புத்த துறவிகள் மத்தியில் ஸில்லா முடியரசின் புத்தமத துறவிகள் மிகவும் புகழ்பெற்றவர்களாக இருந்தார்கள்.

7 ஆம் நூற்றாண்டில் ஜியேங்ஜு நகரில் இரும்பை பயன்படுத்தாமல் முழுக்க மரக்கட்டைகளை மட்டுமே பயன்படுத்தி 262 அடி உயரத்தி்ல புத்தர் ஆலயம் கட்டப்பட்டது. அந்தச் சமயத்தில் அதுதான் உலகின் மிக உயர்ந்த மரக்கட்டமைப்பாக இருந்தது.


சியோக்குரம் என்ற குகைப் புத்தர் சிலையும் கி.பி.742 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அது இப்போது புராதன சின்னமாக பராமரிக்கப்படுகிறது. ஜியோங்டியோக் என்ற மன்னரின் காலத்தில் இவை கட்டப்பட்டன. மிகப்பெரிய வெண்கல மணி ஒன்றையும் இவர் கட்டினார். போங்டியோக்ஸா என்ற புத்தர் ஆலயத்தில் இந்த மணி நிறுவப்பட்டது. இந்த மணி கட்டிமுடிக்கப்பட்டபோது அதை பார்க்க மன்னர் உயிரோடு இல்லை. இந்த மணியின் உயரம் 3.33 மீட்டர். குறுக்களவு 2.27 மீட்டர். 11 சென்டிமீ்டடரில் தொடங்கி 25 சென்டிமீட்டர் அளவுக்கு அடர்த்தியுள்ளது. மொத்த எடை 18.9 டன்கள். மணியை அடித்தால் இரைச்சல் இல்லாத நாளில் 40 மைல்களுக்கு அப்பாலும் சத்தம் கேட்கும் என்கிறார்கள்.

இப்படியெல்லாம் கலைகளுக்கும் கலாச்சாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த ஸில்லா முடியரசு கொரியா தீபகற்பத்தின் தென்பகுதியில் பெரும்பாலான நிலப்பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது.


9 ஆம் நூற்றாண்டில் பிற்கால மூன்று முடியரசுகளுக்கு வழிவிட்டு ஸில்லா வீழ்ந்தது. பால்ஹே முடியரசும் கி.பி.926ல் கித்தான்கள் எனப்படும் மங்கோலிய இனத்தவரால் அழிக்கப்பட்டது. கித்தான்கள் யாரென்று பார்த்தால் வினோதமான கதை கிடைக்கிறது.

வடகிழக்கு ஆசியாவைச் சேர்ந்த நான்காம் நூற்றாண்டு நாடோடி மக்கள். இவர்கள் இப்போதைய மங்கோலியாவின் சில பகுதிகல், வடகிழக்கு சீனாவின் சில பகுதிகள், ரஷ்யாவின் தொலைதூர கிழக்கின் சில பகுதிகளை ஆக்கிரமித்திருந்தனர்.

வெள்ளைக் குதிரையில் வந்த புனிதமான ஆணுக்கும், எருது பூட்டிய வண்டியில் வந்த தேவதைக்கும் பிறந்த எட்டு மகன்கள் எட்டு பழங்குடியினராக பிரிந்தனர். அந்த ஆண் மன்சூரியாவில் ஓடும் லாவோ ஹா நதியையும், பெண் மங்கோலியாவில் ஓடும் ஸார் மோரன் நதியையும் குறிக்கும் என்றும், இரண்டு நதிகளும் இணையும் இடத்தில் அந்த எட்டு மகன்களும் பிறந்தனர் என்றும் அந்த கதை கூறுகிறது.


இந்த எட்டு மகன்களில் ஒன்றாக கித்தான் நாடோடி மக்கள் உருவாகினர் என்று கூறுகிறார்கள். இந்த இனத்தினர்தான் கொரியா தீபகற்பத்தில் கோலோச்சிய பால்ஹே முடியரசை அழித்தனர் என்கிறது வரலாறு. இதையடுத்து, பிற்கால மூன்று முடியரசுகளையும் கோரியோ என்ற பெயரில் டேஜோ என்ற மன்னன் ஒன்றுபடுத்தினான்.

இந்த கொரியா சாம்ராஜ்ஜியம் இப்போதைய தென்கொரியாவும், வடகொரியாவின் மூன்றில் ஒருபகுதியும் இணைந்த நிலப்பரப்பாக இருந்தது. பழைய கோகுரியோ பேரரசின் நினைவாகவே இந்த பெயரை சூட்டினார். கேஸாங் என்ற நகரை தலைநகராக்கினார்.

இவருடைய ஆட்சியில் சட்டம் வகுக்கப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகம் செம்மையாக்கப்பட்டது. புத்தமதம் கொரியா தீபகற்பம் முழுவதும் பரவியது. அலங்கார மண்பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஏராளமாக உருவாகின. கி.பி.13 ஆம் நூற்றாண்டில் மூன்று கூடைகள் என்ற தலைப்பில் அதாவது ட்ரிப்பிடாகா கொரியானா என்ற புத்த மத போதனைகள் மரக்கட்டை எழுத்துக்களால் செதுக்கப்பட்டது.

ஹன்ஜா என்ற எழுத்து வடிவில் 81 ஆயிரத்து 258 மரப் பலகைகளில் 5 கோடியே, 23 லட்சத்து 30 ஆயிரத்து 152 எழுத்துக்களுடன், 1496 தலைப்புகளில் 6 ஆயிரத்து 568 தொகுதிகளாக இந்த போதனைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பழைய மரக்கட்டை எழுத்துத் தொகுப்புகள் இவை என்கிறார்கள். ஒவ்வொரு மரப்பலகையும் 24 சென்டிமீட்டு உயரமும், 70 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட செவ்வகப் பலகை ஆகும். இந்த பலகையின் அடர்த்தி 2.6 முதல் 4 சென்டிமீட்டர் ஆகும். ஒவ்வொரு பலகையும் மூன்று முதல் 4 கிலோ ஆகும். இந்தப் பலகைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கினால் 2.74 கிலோமீட்டர் உயரம் இருக்கும். நீளமாக அடுக்கினால் 60 கிலோமீட்டர் தூரத்துக்கு நீளும். இந்த மரப்பலைகைகளின் மொத்த எடை 280 டன்கள். 750 ஆண்டுகளுக்கு முன்னர் செதுக்கப்பட்ட இந்த மரக்கட்டை எழுத்துக்கள் ஒரு சாதனையாகும். இன்றுவரை எந்தச் சேதமும் இல்லாமல் தென்கொரியாவில் உள்ள ஹேய்ன்ஸா என்ற புத்தக்கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அச்சு, பதிப்புத் துறைகள் சிறப்பான வளர்ச்சி அடைந்திருந்தன. தத்துவம், இலக்கியம், மதம், அறிவியல் கல்வி அறிவு சிறந்திருந்தது. கி.பி.1100 வாக்கில் 12 பல்கலைக்கழகங்கள் புகழ்பெற்ற அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கின.

கொரியா தீபகற்பத்தின் சிறப்பான ஆட்சிக்காலமாக இருந்தாலும், இந்தக் காலகட்டதித்ல் கித்தான் பேரரசுடன் அடுத்தடுத்த போர்களை கோரியோ சந்தித்தது. இந்த போர்களில் கித்தான் பேரரசு தோற்கடிக்கப்பட்டு, கொரியா தீபகற்பதின் வடஎல்லை அம்னோக் நதியின் கரை வரை விரிந்தது.

கித்தான்களை முறியடித்தபிறகு மங்கோலியர்கள் கோரியோ மீது போர் தொடுத்தனர். கோரியோவை தோற்கடிக்க முடியவில்லை. போர்களால் கோரியோ வளர்ச்சியை இழந்தது. போருக்கு முடிவுகட்ட தனது இளவரசரருக்கு மங்கோலிய இளவரசியை திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். இதற்கு மங்கோலிய பேரரசர் சம்மதித்தார். தனதுமகள்களில் ஒருத்தியை கோரியோ இளவரசருக்கு திருமணம் செய்துவைத்தார். அதன்பிறகு இரு நாடுகளும் கூட்டாளிகளா 80 ஆண்டுகள் நீடித்தன. அதாவது, மங்கோலிய இளவரசிகளை கோரியோ இளவரசர்களுக்கு திருமணம் முடித்து வைத்தனர். மங்கோலிய பேரரசின் கடைசி இளவரசி கோரியோவைச் சேர்ந்தவராக இருந்தார்.


ஒருவழியாக கோரியோ மன்னர் கோங்மின்னுக்கு சுதந்திரம் கிடைத்தது. 1350களில் சுதந்திரம் கிடைத்தாலும் கோரியோவில் ஏகப்பட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனென்றால், அந்த அளவுக்கு மங்கோலிய பேரரசின் ஆக்கிரமிப்பு கோரியோவில் இருந்தது. இரண்டும் கூட்டாளி நாடுகளாக கொண்டான் கொடுத்தான் நாடுகளாக இருந்ததால் ஏற்பட்ட வினை இது.

கோரியோ பேரரசுக்குள் புத்தமதக் கோட்பாட்டாளர்களுக்கும், கன்ஃபூசியஸ் கோட்பாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது. மங்கோலிய அரசியல் அறிஞர்களும், ராணுவ அதிகாரிகளும் கோரியோவில் கலந்திருந்தனர். அவர்களை நீக்க வேண்டிய அவசியம் இருந்தது. நில உரிமைகளிலும் ஏராளமான மாற்றம் செய்ய வேண்டியிருந்தது.


சிக்கலான காலகட்டத்திலும் 1356 ஆம் ஆண்டு லியோயாங்கை கோரியோ மன்னர் கோங்மின் கைப்பற்றினார். ரெட் டர்பன் படையினர் எனப்பட்ட படையினருடன் இரண்டுமுறை போரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1304 ஆம் ஆண்டு கோரியோ பேரரசின் தளபதி சோ யியோங் மங்கோலியரைத் தோற்கடித்தார். அதன்பிறகு கோரியோ பேரரசுக்கு இன்னொரு பெரிய தொல்லை உருவானது.

(இன்னும் வரும்)

முந்தைய பகுதி:

புத்தம் வளர்த்த ரத்தபூமி -கொரியாவின் கதை #1

அடுத்த பகுதி:

கொரியா சமூகநீதிக் காவலர்கள்! கொரியாவின் கதை #3

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT