ADVERTISEMENT

கண்டாங்கி...கண்டாங்கி...கட்டி வந்த பொண்ணு...! பெண்களை மயக்கும் கண்டாங்கிக்கு புவிசார் குறியீடு...!!

05:03 PM Aug 29, 2019 | santhoshb@nakk…

மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு வரிசையில், தற்பொழுது காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், இது தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளனர் சிவகங்கை மாவட்ட நெசவுத் தொழிலாளர்கள்.

ADVERTISEMENT


புவிசார் குறீயீடு:

ADVERTISEMENT

பொதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக விளையும் பொருளுக்கோ அல்லது உருவாக்கப்படும் பொருளுக்கோ புவிசார் குறியீடு வழங்கப்படுகின்றது. இதனால் போலியான பொருட்கள் விற்பனை செய்வது தடுக்கப்படுவதால், புவிசார் குறியீட்டிற்கு மதிப்பு இங்கு அதிகம்.

தமிழகளவில் மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 29 பொருட்களுக்கு முன்னதாக புவிசார் குறியீடு கிடைத்திருக்க, 2013ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டிற்கும், காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் வியாழனன்று புவிசார் குறியீடு கிடைக்க, தமிழகளவில் புவிசார் குறியீடுப் பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

பருத்திச்சேலை டூ கண்டாங்கி சேலை:


கண்டாங்கிச்சேலையின் பாரம்பரியம் ஏறக்குறைய 200 ஆண்டுகள் எனினும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்டாங்கி சேலைகள் தனித் தயாரிப்பாக உருவாக்கியது விருதுநகர் மாவட்டம். அந்த மாவட்டத்தின் முக்கிய பகுதியான அருப்புக்கோட்டையிலிருந்து காரைக்குடிக்கு இடம் பெயர்ந்த ராமலிங்க செட்டியார் காலத்திற்குப் பிறகு தான் ரத்தினசபாபதி, சரவணன் என ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக 80 வருடங்களாக கண்டாங்கி சேலை உற்பத்தியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 48 இன்ச் அகலமும் 5.5 மீட்டர் நீளமும் கொண்ட செட்டிநாட்டு பருத்திச்சேலையின் அழகே இரண்டு பக்க பார்டரும், நடுவில் உள்ள கட்டங்களுமே.! பெண்களின் கெண்டைக் கால் பகுதியில் இந்த சேலைகளின் பார்டர் பளிச்சிடுவதால் கண்டாங்கி சேலை எனவும் அழைப்பதுண்டு.

உற்பத்தி துவங்கிய நாட்களில் செட்டிநாட்டிலுள்ள ஆச்சிமார்கள் விரும்பி அணிய செட்டி நாட்டு பருத்திச்சேலை என்றிருக்க, நகரத்தார்களின் சொல் வண்ணத்தால் இது கண்டாங்கி சேலையானது. எனினும் 1980- களில் மீண்டும் செட்டி நாட்டு பருத்திச்சேலை என்றே அழைக்கப்பட்டது என்கின்றனர் உற்பத்தியாளர்கள். சேலையின் நடுவில் புட்டா டிசைன், கம்பி டிசைன், கோபுர டிசைன் மற்றும் மாங்காய் என டிசைன்கள் போட்டு பெண்களை கவர்ந்த சிலை, அதே தரத்துடன், போல்ட் மற்றும் ஸ்ட்ரைப்ஸ் என கூகுள், பேஷன் டெக்னாலஜியின் உதவியுடன் மாறினாலும், இரண்டு பக்க பார்டர் மாறாததால் மறுபடியும் கண்டாங்கி என்றே மாறியது.


தயாரிப்பது எப்படி?

ஆரம்பத்தில் 1939ம் ஆண்டுகளில் காரைக்குடி கண்டாங்கி சேலைகளை தயாரிக்க சுத்தமான 40 எண் ரக பருத்தி நூல்களைக் கொண்டே தயாரித்திருக்கின்றனர். கட்டினாலே கம்பீரமான தோற்றப் பொலிவு தரும் இவ்வகை சேலைகளை ரசாயன கலப்பின்றி உற்பத்தி செய்ய, நாளடைவில் 60 எண் ரகத்தினைத் தாண்டி 80 எண் ரக வகையிலான தூய பருத்தி நூல்களைக் கொண்டு தயாரிக்க இளசுகளுக்கும் இது பிடித்தமாயிற்று. முதலில் தங்களுக்கு தேவையான நூல்களை கொள்முதல் செய்து, அதன் பின் சாதம் வடித்த தண்ணீரில் ஊற வைத்து, நிறமிட்டு புணைந்து நெய்ய அனுப்புவார்கள்.

நூல் கொடுக்க, பிசிறுகளை சுத்தம் செய்ய, கட்டை மாட்டிவிட என குறைந்தது மூன்று நபர்கள் இருந்தால் ஒரு புடவையே நெய்ய முடியும் என்கின்றனர் உற்பத்தியாளர்கள். எக்காலத்திலும் நிறம் மங்காததும், அணிய ஏதுவாக எலிகண்டும், போல்டுலுக்கும், தரும் என்பதும், தூய பருத்தி என்பதால் வியர்வையை உறிஞ்சி சருமத்தினைப் பாதுகாக்கும் என்பதும் தான் இதனுடைய வெற்றிக்கான மூலமந்திரம்.


கோரிக்கைகள்:
" உலகின் எந்த மூலையில் இருந்தாலும் செட்டிநாட்டு ஆச்சிமார்கள் இந்த சேலையைத் தான் உடுத்துவார்கள். ஆரம்பத்தில் வயதானவர்கள் மட்டுமே கட்டி வந்த இச்சேலைகளை தற்பொழுது கல்லூரிக்கு செல்லும் இளம்பெண்கள் வரை விரும்பி அணிகின்றனர். வெயில் காலம், குளிர்காலம் என எந்தக் காலத்திற்கும் ஏற்றது இந்த கண்டாங்கி சேலைகள். கூலிப் பற்றாக்குறையால் இத்தொழில் அழிந்து வருகின்றது.

புவிசார் குறியீடு இதனைக் காக்கும் என்றே நம்புகின்றோம். நூல் விலையேற்றம், ஜி.எஸ்.டி.வரிகளை குறைத்தாலே போதும் இத்தொழில் மென்மேலும் வளரும்." என்கின்றார் பரம்பரையாக கண்டாங்கி சேலையை உற்பத்தி செய்து வரும் ரத்தினசபாபதி செட்டியார்.

அரசு ஆவண செய்ய வேண்டுமென்பது நெசவாளர்களின் கோரிக்கை..! நிறைவேற்றுமா..?



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT