ADVERTISEMENT

அடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்! 

05:36 PM Jan 20, 2020 | Anonymous (not verified)

எஸ்.எஸ்.ஐ. வில்சனைக் கொலை செய்த தீவிரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தௌபீக் இருவரையும், தமிழக மற்றும் கேரள காவல்துறையினர் கடந்த 8-ந் தேதி முதல் தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த 13-ந்தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இதாஸ் என்பவனை கர்நாடக போலீசார் கைதுசெய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், திருவனந்தபுரத்தில் இருந்து குஜராத் செல்லும் வேரவல் எக்ஸ்பிரஸ் ரயிலில், அப்துல் சமீமும், தௌபீக்கும் வருவது தெரியவந்தது.

ADVERTISEMENT



இந்தத் தகவலை கர்நாடக ரயில்வே போலீசாருக்கு தெரியப்படுத்தி, இருவரையும் உடுப்பியில் வைத்து கைதுசெய்தனர். கைதுசெய்தபோது தௌபீக் தனது தலைமுடியையும், அப்துல்சமீம் தாடியையும் ட்ரிம் செய்து அடையாளத்தை மாற்றி இருந்தனர். அவர்கள் இருவரிடமுமே செல்போன் இல்லை. தனது ஏழு மாத கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டுதான் தௌபீக் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளான். அவர்களை க்யூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், 16-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு களியக்காவிளை காவல்நிலையத்திற்கு அழைத்துவந்தனர். அங்குவந்த சில நிமிடங்களிலேயே, "இந்த இடம் பாதுகாப்பான தல்ல. தீவிரவாதிகளை வேறு இடத்திற்கு மாற்றுங்கள்'’என்று எச்சரிக்கை மெசேஜ் வந்தது.

ADVERTISEMENT



இதன்பிறகே, தக்கலை காவல்நிலையத்திற்கு தீவிரவாதிகள் இருவரையும் கூட்டிச் சென்றனர். அடுத்த 24 மணிநேரத்துக்குள் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக, மருத்துவப் பரிசோதனை, அறிக்கை தயார்செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்'' என போலீசார் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால், வில்சன் கொலை செய்யப்பட்ட தினத்தன்றே இந்த இருவரையும் காவல்துறையினர் கைதுசெய்து விட்டதாக உளவுப்பிரிவினர் தெரிவிக்கின்றனர். மேலும் கூறியபோது, "செக் போஸ்ட்டில் நேரடியாக தாக்கு மளவுக்கு துணிச்சல் இருக்கிறதென்றால், பெரிய நெட்வொர்க்காக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். இவர்களுக்கு மூளையாக செயல்பட்டு, வேவுபார்த்துக் கொடுத்த சையது அலி உள்ளிட்ட 15 பேரின் விவரங்கள் அதில் கிடைத்தது. அதைவைத்து, இதுவரை 13 பேரைக் கைதுசெய்துள்ளனர். சையது அலி மற்றும் இன்னொரு நபர் தலை மறைவாக உள்ளனர். கூடியவிரைவில் அவர்களையும் கைதுசெய்து விடுவார்கள்'' என்றனர்.



இதுதொடர்பாக மேலும் விசாரித்தபோது, "2013-ஆம் ஆண்டு பா.ஜ.க. பிரமுகர் எம்.ஆர்.காந்தியை நாகர்கோவிலில் வைத்து கொலைசெய்ய முயற்சித்த வழக்கில், அப்துல்சமீம் கைதுசெய்யப்பட்டான். ஆனால், நீதிமன்றம் அவனை நிரபராதி என்று தீர்ப்பளித்து விடுவித்தது. சிறையில் இருந்தபோது, காவல்துறையினரால் கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளானான். அதுபோக, அப்துல் சமீம் மீது மேலும் ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தங்களது அமைப்பான இந்தியன் நேஷனல் லீக்கைச் சேர்ந்தவர்கள் மற்றும் அப்பாவி இஸ்லாமிய மக்களை காவல்துறையினர் பொய்வழக்குப் போட்டு சித்திரவதை செய்து வருகின்றனர். எனவே, காவல்துறையினருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டம் தீட்டியுள்ளனர். முதலில் காவல்நிலையங்களே இவர்களின் இலக்காக இருந்துள்ளது. ஆனால், குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாலேயே செக் போஸ்டைக் குறிவைத்துள்ளனர்.


களியக்காவிளை பகுதியில் உள்ள மெயின் செக் போஸ்ட் பகுதிக்கு சென்றபோது, நான்கு காவலர்கள் பணியில் இருந்ததால், அங்கிருந்து சந்தைவழி செக்போஸ்ட்டிற்கு சென்று தனியாக டியூட்டியில் இருந்த வில்சனை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர்'' என்றனர்.

இவர்களது திட்டம் குறித்து அப்துல் சமீம் மற்றும் தௌபீக்கிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், "சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். போல, இந்தியாவில் ஐ.எஸ். இந்தியா என்ற அமைப்பைக் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கினோம். அதற்கு கடலூர் காஜா மைதீனை தலைவராக்கி, குடியரசு தினத்தன்று மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்தோம். அதற்குள் மாட்டிக்கொண்டோம். நபிகள் நாயகம் சொன்ன முழுமையான, தூய்மையான இஸ்லாமியனை ஆட்சியாளனாகக் கொண்ட, இஸ்லாமிய நாடாக இந்தியாவை மாற்றவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்'' என்று தெரிவித்துள்ளனர். இந்த புது தீவிரவாதத்தின் நெடிய பாதையை நம்முடன் பகிர்ந்துகொண்டனர் மத்திய புலனாய்வுத் துறையினர்.


1995-ன் அதிகாலை நேரத்தில் நெல்லையின் மேலப்பாளையத்தில் டெய்லர் சங்கர், பூக்கடை கண்ணன், அந்தப் பகுதியின் பிரபலமான டாக்டர் செல்வகுமார் ஆகிய மூன்று பேர்களும் ஒரே நேரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். மூவரும் கரசேவைக்காக (அயோத்தியில் ராமர் கோவில் கட்ட) செங்கற்கள் அனுப்பினார்கள். அதற்காகவே மதம் சார்ந்த வகையில் மூவர் படுகொலை என்ற பயங்கரம் வெளிப்பட்டது. முக்கிய குற்றவாளியான மேலப்பாளையத்தின் கிச்சான் புகாரியும் அவனது ஆதரவாளர்களும் பிடிபட்டபோதுதான், அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவில் செயல்படும் அல் உம்மா இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்றும் அந்த அமைப்பு மேலப்பாளையத்தில் செயல்படுவது பற்றிய தகவலும் வெளியே வந்து மத்திய உளவு அமைப்புகளை அதிர வைத்தது.

பின்பு 2014 முதல் 2015 வரை, இந்துத்வா அமைப்புகளின் முக்கியப் புள்ளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதையடுத்து இந்தியாவில் அல் உம்மா இயக்கம் தடைசெய்யப்பட்டது. ஆனால் 30 வருடங்களாக பாகிஸ்தானில் உள்ள அபுபக்கர் சித்திக் இன்றுவரை சிக்கவில்லை.

பெங்களூர் பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய மேலப்பாளையம் கிச்சான் புகாரி, பன்னா இஸ்மாயில், பறவை பாதுஷா, போலீஸ் பக்ருதீன் ஆகியோர் பிடிபட்டு பெங்களூர் சிறையில் வைக்கப்பட்டார்கள்.

பல மாநிலங்களிலும் தொடர்ந்த குண்டுவெடிப்புகளில் கேரளாவின் மலப்புரத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின் போது தீவிரவாதிகள் தவறவிட்ட இந்திய வரைபடம், பென் டிரைவ் மற்றும் அந்த இயக்கத்தின் டைரி உள்ளிட்ட கோழிக் கோடு புலனாய்வு ஐ.சி. தெஹ்ரா மற்றும் ஏ.டி.ஜி.பி. அஜீத்குமார் ஆகியோரிடம் சிக்கியதில் பயங்கரங்கள் வெளிப்பட்டன. வரைபடத்தில் த ஃபேஸ் மூவ்மெண்ட், என குறிப்பிட்ட அந்த அமைப்பின் பெயரும், பென்டிரைவ் மற்றும் டைரியில் ஜெய்ஸ் இ-முகம்மது என மற்றொரு அமைப்பு என்று இரண்டு தீவிரவாத அமைப்புகளும் தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவை என அந்த அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

தொடர்ச்சியான விசாரணையில்... கொல்லம் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களின் மூலம், பயங்கரவாத அமைப்பான தஃபேஸ் மூவ்மெண்ட் மற்றும் ஜெய்ஸ் இ-முகம்மது இரண்டு அமைப்புகள் பற்றி வெளியுலகம் அறிந்தாலும், இவை தடைசெய்யப்பட்ட அல் உம்மாவின் மறு பெயரிலான எண்ட்ரிகள். கர்நாடகாவின் பட்கல் பகுதியின் சகோதரர்களான யாசின் பட்கல், ரியாஸ் பட்கல் தலைமையில் நடப்பவை. இவர்களில் யாசின் பட்கல் என்.ஐ.ஏ.வினால் கைது செய்யப்பட்டான். ரியாஸ் பட்கல் தலைமறைவானான்.

ஜன. 10 அன்று கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லி போலீஸ், அதிகாலை நேரம், நேபாளத்திற்குத் தப்பிச்செல்ல முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த கடலூர் பகுதியின் காஜா மைதீன், குமரி மாவட்டம் கோட்டார் பகுதியின் அப்துல் சமத் மற்றும் சையத் அலி நவாஸ் உள்ளிட்ட மூன்று பேரை வளைத்து விசாரித்திருக் கிறது. இவர்கள் மூவரும் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலையில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்ததுடன், "இங்கே அல் ஹந்த் என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்காக ஆதரவாளர்களைச் சேர்க்கின்றோம்' என்று வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர்.

இவர்களுடன் காலிஸ்தான் அமைப்பினர், மியான்மர் ரோஹிங்யாக்கள், வங்கதேச தீவிரவாதிகள் வரை கூட்டாக இருந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக க்யூ பிரிவு போலீசார் முகம்மது ஹனிப்கான், இம்ரான்கான், முகம்மது செய்யது அலி உள்ளிட்ட மூன்று பேரை பெங்களூரில் வளைத்திருக்கின்றனர். அம்பத்தூர் சுரேஷ்குமார் படுகொலையில் இவர்களுக்குத் தொடர்பு என்பதுதான் வழக்கு. இவர்களில் முகம்மது செய்யது அலி குமரி மாவட்டப் பகுதியைச் சேர்ந்தவன். அதேசமயம், மேற்குவங்கமான கல்கத்தாவில் நான்கு பேர்களை தமிழக க்யூ பிரிவு கைது செய்திருக்கிறது. இந்த நான்கு பேரில், இரண்டு பேர்கள் தப்பித்து கேரளாவிற்குள் நுழைந்ததைத் தெரியப்படுத்த, கேரள போலீஸ் அலர்ட் ஆனதோடு அவர்கள் பற்றிய தகவல் கொடுத்தால் சன்மானம் தரப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் இது குறித்து உஷார்படுத்தப்படவில்லை என கேரளத் தரப்பிலிருந்தே தகவல்கள் கிடைக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள், கல்கத்தா பீகார் ஜங்ஷன் பார்டர் வழியாக நேபாளத்தின் காத்மண்ட்டுக்குத் தப்பிச் செல்லலாம். அல்லது இரண்டரை மணிநேர பயணமாக முர்ஷிதாபாத் எல்லை வந்து பின் அங்கிருந்து சிட்டகாங்க் துறைமுகம் வந்தடைந்தால் சுலபமாகக் க்ராஸ் செய்து வங்கதேசம் சென்றடையலாம் என தெரிய வந்துள்ளது. பெங்களூரில் பிடிபட்ட சிலரும் புதிய அமைப்பு பற்றி போலீசிடம் சொல்லியிருக்கின்றனர்.

இந்தச் சமயத்தில்தான், கல்கத்தாவில் தங்களைப் போலீஸ் வளைத்துவிட்டது. தங்கள் அமைப்பு பற்றித் தெரிய வைக்கவும், வஞ்சம் தீர்க்கவும், குறி வைத்து இந்தக் களியாக்காவிளை சம்பவத்தை அவர்கள் நடத்தியிருக்கலாம் என்ற பேச்சு கேரளாவில் ஓடுகிறது.

இதுபோன்ற தீவிரவாத அமைப்பினர் உள்ளூர் நபர் களின் உதவியின்றி நிச்சயம் செயல்படமுடியாது. ஸ்லீப்பிங் செல் என்று சொல்லப்படும் அந்த வகை நபர்கள், தகவலையும் உதவிகளையும் செய்துவிட்டு ஒதுங்கிவிடுவார்கள்.

சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பி லிருந்து தகவல்களைக் கசியவிட, களியக்கா விளையின் செய்யது அலி, நெல்லை பேட்டையின் அல்கபீர் போன்ற ஸ்லீப்பிங் செல்கள் தலைமறைவாகிவிட வி.கே.புரத்தின் ஸ்லீப்பிங் செல்லான ஆட்டோ டிரைவர் அக்பர் அலி மட்டுமே தனிப்படை வசம் சிக்கியுள்ளார்.

களியக்காவிளை செக்போஸ்ட்டில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொல்லப்பட்டதன் பின்னணியில் வெளியாகும் தகவல்கள் அதிர வைக்கின்றன. நாடு முழுவதும் தங்களின் குடியுரிமைக்காக முஸ்லிம் மக்களுடன் கரம் கோர்த்து இந்துக்கள் போராடிவரும் நிலையில், இத்தகைய தீவிரவாத செயல்கள் பா.ஜ.க. அரசின் மதவாத பிரிவினைத் திட்டத்திற்கே சாதகமாக அமையும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

-பரமசிவன், மணிகண்டன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT