Skip to main content

சம்பந்தமில்லாமல் ஒரு போலீஸ்காரரை கொன்றது ஏன்? விசாரணையில் அதிர வைத்த சம்பவம்!

குமரி -கேரள எல்லையான களியக்கா விளை போலீஸ் சோதனைச் சாவடியில் 8-ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) வில்சனை தலையில் குல்லாய் அணிந்த இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து தப்பிச் செல்லும் காட்சி, சோதனைச் சாவடியின் அருகில் இருக்கும் பள்ளிவாசலில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியுள்ளது.

 

siஇரவு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அடுத்தநாள் காலையில் குற்றவாளிகளாக சந்தேகப்படும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.யூ. அமைப்பால் தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளான குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல்சமீம் (27), கோட்டார்- இளங்கடையைச் சேர்ந்த தவ்பீக் (27) இருவரின் புகைப்படத்தை வெளியிட்டனர்.

 

incidentதப்பி ஓடிய தீவிரவாதிகள் இருவரும் கேரள எல்லையின் தொடக்கமான இஞ்சிவிளையில் நிறுத்தியிருந்த டி.என்.57ஏ.என். 1559 என்ற ஸ்கார்பியோ வண்டியில் சென்றனர். அந்த வாகனம் கேரளாவை நோக்கிச் சென்றதா அல்லது தமிழகத்துக்குள் சென்றதா என்று பல சி.சி.டி.வி. காமிராவை சோதனை செய்தபோதும் தெரிய வரவில்லை.

 

incident"பெங்களூருவில் இருந்து 4 தீவிரவாதிகளை தமிழக போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தத்தான் கேரளாவில் பதுங்கியிருந்த இந்த தீவிரவாதிகள் தமிழக எல்லையில் இருந்த போலீசாரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்' என்றனர் டிபார்ட்மென்ட்டில்.

இது குறித்த சந்தேகங்களும் அதிகரித்துள்ளன.

குற்றவாளிகள் என போலீஸ் வெளியிட்டிருக்கும் புகைப்படம் அந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவானவர்களின் புகைப்படமா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல அந்த சி.சி.டி.வி. வீடியோவில் கொலை செய்து விட்டு தப்பி ஓடும் இருவரில் ஒருவர், தலையில் இருந்த குல்லாவை கழற்றி விட்டு ஓடுகிறார். அவர் எதற்காக அந்த குல்லாவைக் கழற்ற வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.


போலீசார் குறிப்பிட்டிருக்கும் இந்த தீவிரவாதிகளில் அப்துல்சமீம் என்பவர் 18-6-2014-ல் சென்னையில் இந்து முன்னணி பொறுப்பாளரான குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் கொலை வழக்கிலும், 21-4-2013-ல் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான நாகர்கோயிலைச் சேர்ந்த எம்.ஆர். காந்தி கொலை முயற்சி வழக்கிலும் தொடர்புடையவர். இதில் எம்.ஆர்.காந்தி வழக்கில் கோர்ட், அப்துல் சமீமை விடுதலை செய்தது. இதற்கு போலீசார் அப்பீல் செய்யாத நிலையில் எம்.ஆர். காந்தி அப்பீல் செய்திருக்கிறார்.

இதேபோல் கடந்த மாதம் 22-ஆம் தேதி எஸ்.ஐ.யூ. அமைப்பு குமரி மாவட்டத்தில் அப்துல் சமீம், தவ்பீக் மற்றும் இன்னொரு தீவிரவாதியான இளங்கடையைச் சேர்ந்த செய்தலி நவாஸ் வீடுகளில் டி.எஸ்.பி. சுப்பையா தலைமையில் சோதனை செய்தது. இதில் தவ்பீக், மற்ற இரண்டு பேருக்கும் செல்போன் மற்றும் சிம்கார்டுகள் சப்ளை செய்தது தவ்பீக்கின் வீட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.


தற்போதைய கொலையில் கேரளாவைச் சேர்ந்த தீவிரவாதிகளான முகம்மது சமி மற்றும் ஹௌசிக் இருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் போலீஸ் கூறுகிறது. தமிழக டி.ஜி.பி. திரிபாதி 9-ஆம் தேதி திருவனந்தபுரம் சென்று கேரள டி.ஜி.பி.யிடம் தீவிரவாதிகளை இணைந்து பிடிப்பது சம்பந்தமாக பேசினார். பின்னர் கொலை நடந்த இடத்துக்கு வந்த திரிபாதி அங்கு பார்வையிட்டு விட்டு கொலை செய்யப்பட்ட வில்சனின் வீட் டுக்குச் சென்று அவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார்.

கொலை செய்யப்பட்ட வில்சன் மே மாதம் பணி ஓய்வு பெறவிருந்தார். அவரது இரண்டு மகள்களில் ஒருவருக்கு 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. சம்பந்தமில்லாமல் ஒரு போலீஸ்காரரை... அதுவும் கிறிஸ்தவரை கொன்றது ஏன்? உண்மையிலேயே தீவிரவாதிகளா? கடத்தல் மாஃபியாக்களா? என சர்ச்சையும், அது தொடர்பான விசாரணையும் தீவிரமாகியுள்ளது. விரைவில், என்கவுன்ட்டருக்கான துப்பாக்கிச் சத்தம் கேட்கலாம்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்