ADVERTISEMENT

EXCLUSIVE! ஸ்ரீமதிக்கு முன் பிரகாஷ்! பள்ளி நிர்வாகியின் தொடர் லீலைகள்... மர்ம மாளிகையான ஹாஸ்டல்!  

11:53 AM Aug 12, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி பள்ளியில் ஸ்ரீமதி மரணமடைந்ததைப் போலவே, இன்னொரு மரணமும் நடந்திருக்கிறது என்கிற அதிர்ச்சித் தகவலை கேள்விப்பட்டவுடன், நாம் அந்த இடத்துக்கு விரைந்தோம்.

சக்தி பள்ளி அமைந்துள்ள கனியாமூரில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஈரியூர் கிராமம். அந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ரிசர்வ் காட்டு பகுதியில் காட்டைத் திருத்தி விவசாயம் செய்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற குரால்மணி என்கிற சுப்பிரமணி மற்றும் ராஜாமணி தம்பதியினர். விவசாய குடும்பமான இந்தக் குடும்பத்தின் ஒரே மகன் எம்.எஸ்.பிரகாஷ். இவன் கனியாமூர் பள்ளியில் +2 படித்துக்கொண்டிருந்தான். 14 கி.மீ. தொலைவுக்கு வந்து செல்லச் சிரமமாக இருப்பதால் இந்த மாணவனை ஹாஸ்டலில் ஸ்ரீமதியைப் போலவே தங்க வைத்து படிக்க வைத்தார்கள். பள்ளியில் விடுமுறை என்றால் பள்ளி வாகனத்திலேயே வீட்டுக்கு வந்து மறுபடியும் பள்ளிக்குச் செல்வது பிரகாஷின் வழக்கம். ஒன்றாம் வகுப்பிலிருந்து அதே பள்ளியில் படித்துவந்த பிரகாஷுக்கும் அவனது தந்தை சுப்பிரமணிக்கும் பள்ளி நிர்வாகம் ரொம்பவே பரிட்சயமானது.

+2 படிக்கும்பொழுது காலாண்டு பரீட்சை முடிந்தது. அந்த விடுமுறையில் "வீட்டுக்கு பையனை அனுப்புங்கள்'' என சுப்பிரமணி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டார். அதற்கு பள்ளி நிர்வாகம், "பையனுக்கு சிறப்பு வகுப்புகள் இருக்கிறது, அதனால் அவன் படிக்க வேண்டும். ஹாஸ்டலிலேயே அவன் தங்கியிருக்க வேண்டும்'' என கூறிவிட்டது. அந்த விடுமுறையில் ஒருநாள் திடீரென, பள்ளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சின்னசேலம் பக்கத்தில் அம்சாகுளம் என்ற ஊரில் இருந்த கிணற்றில் சடலமாக பிரகாஷ் மிதந்துள்ளான். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட சுப்பிரமணி விரைந்தோடிச் சென்று பார்த்தபோது, ஏகப்பட்ட காயங்களுடன் ஸ்ரீமதியைப் போலவே பிரகாஷ் இறந்து கிடந்தான். காவல்துறையில் சுப்பிரமணி புகார் செய்தார். போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. அது தற்கொலை என வழக்கு முடிக்கப்பட்டது.

பள்ளி நிர்வாகம் +2விற்காக சுப்பிரமணியம் கட்டியிருந்த 1 லட்ச ரூபாயை மட்டும் தந்தது. அதற்குப் பிறகு எந்த விபரமும் இல்லை. இதுபற்றி பிரகாஷின் தாயார் ராஜாமணி கூறுகையில், “ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்த என் மகன் எப்படி வெளியே போனான்? ஹாஸ்டலில் இருப்பவர்கள் எப்பொழுது வெளியே போகிறார்கள் என்பதைக் கண்காணிப்பதற்காகவே வார்டன் மற்றும் செக்யூரிட்டிகள் இருக்கிறார்கள். இதுதவிர, சி.சி.டி.வி. கேமராக்களும் இருக்கிறது. இந்நிலையில்... "ஹாஸ்டலில் இருந்த என் மகன், அங்கிருந்து வெளியேறி கிணற்றில் பிணமாக எப்படிக் கிடந்தான்' என நாங்கள் கதறினோம். அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எங்களது வழக்கறிஞர்கள், போலீஸ் அதிகாரிகளிடம் பேசினார்கள். ஆனால், எந்த நல்ல பதிலும் வரவில்லை. என் மகன் எப்படி இறந்தான்? என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

அந்த ஹாஸ்டலில் நிறைய மர்ம மரணங்கள் நடக்கிறது. ஸ்ரீமதியின் மரணத்தைத் தொடர்ந்து... பல விஷயங்கள் தெரியவருகிறது. என் மகன் இறந்தபோதே பலர், "உங்கள் மகன் பள்ளி உரிமையாளர் ரவிக்குமாரின் தனிப்பட்ட விஷயங்களை பார்த்துவிட்டான். அதனால் அவனை கிணற்றில் தள்ளி பிணமாக மிதக்கவிட்டார்கள்' என்று சொன்னார்கள். நான் படிக்காதவள். எனக்கு ஸ்ரீமதியின் தாயார் செல்வி போல பேசத் தெரியவில்லை. அப்பொழுது மீடியாக்கள் என்னிடம் வந்து "மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?' எனக் கேட்டார்கள். எனது ஒரே மகனை பறிகொடுத்துவிட்டு சோகத்தில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த என்னால் பேச முடியவில்லை. மீடியாக்களும் சென்றுவிட்டன.

இப்பொழுது ஸ்ரீமதியின் மரணத்தைத் தொடர்ந்து நடை பெற்றுவரும் போராட்டங்களைப் பார்க்கும்போது, என் மகனும் ஸ்ரீமதியைப் போலவே மர்மமாக இறந்திருப்பான் என முன்பு ரவிக்குமாரின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி மற்றவர்கள் சொன்ன விஷயங்கள் உண்மையோ என எண்ணத் தோன்றுகிறது'' என்றார்.

பிரகாஷின் தந்தை சுப்பிரமணி கூறுகையில், "இந்தப் பள்ளி ரவுடிகளுக்கு பேர் பெற்றது. எனது மகன் மர்மமாக இறந்து போனதையொட்டி நியாயம் கேட்க நானும் எனது உறவினர்களும் சென்றோம். அப்பொழுது பள்ளியில் உள்ள கோவிலில் கற்பூர ஆரத்தி காட்டிக் கொண்டிருந்தார்கள். "எங்க புள்ளைய நாங்க பறிகொடுத்துட்டு நிக்குறோம். உங்களுக்கு கோவில் பூஜை தேவையா?' என எனது உறவினர் ஒருவர் சத்தம் போட்டார். அப்பொழுது, பள்ளிக்குள் இருந்து அடியாட்கள் கும்பல் பாய்ந்து வந்து எங்களைத் தாக்க முற்பட்டார்கள். கம்பு, தடி ஆகியவற்றுடன் கத்திகளும் அவர்கள் கையில் இருந்தது. எனது மகன் மர்மமான முறையில் மரணமடைந்தான். அதைக் கேள்வி கேட்டு உறவினர்கள் வருவார்கள், அவர்களைத் தாக்க வேண்டும் என்கிற முன்னேற்பாட்டில் பள்ளி நிர்வாகம் அடியாட்களை குவித்து வைத்திருந்தது. எனது மகன் பிரகாஷ்தான் அந்தப் பள்ளியில் எங்கள் கிராமத்திலிருந்து சேர்ந்த முதல் மாணவன். அவனை அழைத்து வர என் வீட்டு வாசலுக்கே பள்ளியின் பேருந்து வரும். நான் எனது கிராமத்தில் இருக்கக்கூடிய பலரை அந்தப் பள்ளியில் சேர்த்துவிட்டிருக்கிறேன். அடிப்படையில் விவசாயிகளான நாங்கள் எந்த சேதாரத்தையும் விரும்பமாட்டோம்.

ஸ்ரீமதியின் மரணத்தில் அந்தப் பள்ளி தாக்கப்பட்டபோது, அந்தப் பள்ளிக்கு இந்த நிலைமை வரவேண்டும் என அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பலரும் கூறினார்கள். ஸ்ரீமதியின் மரணத்தைத் தொடர்ந்து எனக்கு 100-க்கும் மேற்பட்ட போன்கால்கள் வந்தது. "உங்கள் மகனின் மரணத்தில் நியாயம் கிடைக்கவில்லை. ஸ்ரீமதியின் மரணத்திற்காக நியாயம் கேட்டு ஒரு பெரிய போராட்டமே நடக்கிறது. உங்களுக்கு கிடைக்காத நியாயம், இப்பொழுது கிடைத்துக்கொண்டிருக்கிறது' எனச் சொன்னார்கள்.

"பள்ளி அமைந்துள்ள கனியாமூரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றுக்கு என் மகன் எதற்காகப் போனான்?' என்று கேட்டதற்கு, பள்ளி விடுமுறை விட்டதால் சென்றான் என பள்ளி நிர்வாகம் பதில் சொல்லியது. பள்ளிக்கு விடுமுறை விட்டால், பெற்றோர்களுக்குத்தானே சொல்லவேண்டும். "உங்கள் மகன் பிணமாகக்கிடக்கிறான்' என சொல்லத் தெரிந்த பள்ளிக்கு, அவன் பள்ளிப் பேருந்தில் ஏறாமல் இரவில் தனியாக செல்கிறான் என்கிற தகவலை ஏன் பெற்றோர்களிடம் தெரிவிக்கவில்லை. "இதில் ரவிக்குமார் சம்பந்தப்பட்டிருக்கிறார்' என பலர் சொன்னார்கள். அப்பொழுது அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனது மகனின் மரணமும் ஸ்ரீமதியின் மரணத்தை போல மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது'' என்றார்.

இந்த மாணவனின் மரணத்தைப் பற்றிப் பேசும் அவனது சொந்த கிராமத்து மக்கள், "நாங்கள் இந்த மர்ம மரணத்தைப் பற்றி கேள்வி கேட்டோம். பள்ளி உரிமையாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, ரவிக்குமாரின் தாயார் ஆகியோர் எங்களிடம் பேசவே மறுத்துவிட்டார்கள். இப்படி தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் அந்தப் பள்ளியில் நடந்து வருகிறது. அனுமதி பெறாமல் நடத்தப்படும் அந்த ஹாஸ்டல் ஒரு மர்ம மாளிகையாகவே இருக்கிறது. எப்படி அந்த ஹாஸ்டலை நடத்த அனுமதித்தார்கள்? என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது'' என்கிறார்கள்.

"இந்த மாணவனின் மரணம் நடந்த வருடம் 2007-ஆம் ஆண்டு. அப்பொழுதே இந்தப் பள்ளி பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது. அன்று முதல் இன்றுவரை மரணங்கள் தொடர்கிறது.'' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்தப் பள்ளிக்கு வரும் பிரச்சினைகளை கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. "அந்தப் பள்ளியில் ஆசிரியையாக இருந்த சாந்தி என்கிற பெண் தற்பொழுது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநராக இருக்கிறார். அவரது கணவர் ரமேஷ், இப்பொழுதும் அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவர்தான் இந்தப் பள்ளியில் இயங்கும் மாட்டுப் பண்ணையையும் நிர்வகித்து வருகிறார். இந்த சாந்தி, கல்வித்துறையில், இந்தப் பள்ளிக்கு எதிராகக் கொடுக்கப்படும் புகார்களை சமாளித்து வருகிறார்'' என்கிறார்கள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், ஸ்ரீமதியின் மரணத்தில் உள்ள மர்மங்களைத் தேடி, வழக்கறிஞர்கள் குழு ஒன்று களமிறங்கி, தங்களது விசாரணையை நடத்தியுள்ளது. அந்தக் குழுவின் விசாரணையில் மாணவன் பிரகாஷின் மரணம் பதிவாகியிருக்கிறது. அதேபோல், "ஸ்ரீமதியின் மரணம் நடந்த 13-ந் தேதி அந்தப் பள்ளியில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்திருக்கிறது' என வழக்கறிஞர்கள் குழு கண்டுபிடித்திருக்கிறது.

சக்தி பள்ளிக்குப் பக்கத்தில் ஒரு பேக்கரி இருக்கிறது. அந்த பேக்கரியில் 13-ந் தேதி ஏகப்பட்ட கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டு, பள்ளிக்குள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் பள்ளியின் உரிமையாளர் ரவிக்குமாரின் பிறந்த நாளுக்கு கொண்டு செல்லப்பட்டதா? என வழக்கறிஞர்கள் கேட்டதற்கு, "பள்ளியின் பிரின்ஸிபாலின் பிறந்தநாளுக்காக வாங்குகிறோம் என சொல்லித்தான் கேக்குகளை வாங்கினார்கள்' என்று பேக்கரி நடத்துபவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள்'' என்கிறார் அந்த வழக்கறிஞர் குழுவுக்கு தலைமை தாங்கிய சென்னை வழக்கறிஞர் முருகன்.

எடப்பாடிக்கும் அந்தப் பள்ளிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எடப்பாடியும் அந்தப் பள்ளி உரிமையாளர் ரவிக்குமாரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்திருக்கிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிறைய பணம், குறைந்த வட்டிக்கு ரவிக்குமார் மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் வாங்கிய கடனை இப்போது வட்டியுடன் சேர்த்து ரவிக்குமாருக்கு திருப்பிக் கொடுத்து, மறுபடியும் பள்ளியை திறக்க வைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் ரவிக்குமாருக்கு மகாபாரதி பள்ளி உரிமையாளர் மோகன் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர் ராஜசேகர் ஆகியோர் உதவியாக இருக்கிறார்கள். கொங்கு இளைஞர் பேரவையில் இருந்த ராஜசேகர், அ.தி.மு.க.வுக்கு வருவதற்குக் காரணமே ரவிக்குமாருக்கும் எடப்பாடிக்கும் இருந்த நட்புதான் என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

-மணி

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT