ADVERTISEMENT

நீ காணவேண்டியது அரசரை அல்ல, கவிப்பேரரசரை - கபிலன் வைரமுத்து

02:45 PM Feb 11, 2019 | george@nakkheeran.in

சமிபத்தில் நடைபெற்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் தமிழாற்றுபடை அரங்கேற்ற விழாவில் ஒரு குட்டிகதை சொல்லி, ஒளவையார் தமிழாற்றுபடை கட்டுரையை அறிமுகம் செய்தார் வைரமுத்துவின் மகன் கவிஞர்.கபிலன் வைரமுத்து. அரங்கில் இருந்த பலரின் கைதட்டலை பெற்ற அந்த குட்டிகதை பின்வருமாறு...

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த கதையில் வருவதெல்லாம் கற்பனையே, இதில் பறவைகள், விலங்குகள், மனிதர்கள் யாரும் துன்புறுத்தப்படவில்லை.

ஒரு அதிகாலை நட்சத்திரத்தை விட்டு வெளியேறி, கையில் கைத்தடியோடு,
வள்ளுவர்கோட்டத்தில் வந்து விழுகிறார் ஔவை. கே.பி.சுந்தராம்பாளைவிட சுமாரான தோற்றம்தான்.

முந்தைய இரவு நடந்த போராட்டத்தில், தான் உயர்த்தி பிடித்த கருப்புக்கொடியை
தலைக்கு வைத்து உறங்கி கிடந்தான் இளைஞன் ஒருவன்.

"அப்பனே" என்று அழைப்பு குரல் கேட்டது. கண்களை திறந்து கிழவியை கண்டவன்
"சில்லறை இல்ல" என்று திரும்பி கொண்டான்.

"அப்பனே, மரிக்காத புலமை எனக்கு, உன் மதிப்பிழக்கும் சில்லறை எதற்கு, ஔவை நான்.
நான் பாடிய தமிழுலகை மறுபடி காண வந்தேன். உன் வாகனத்தில் எனக்கொரு உலா கிடைக்குமா?"
மன்னிப்புகலந்த வணக்கம் சொல்லியவன், ஔவையை தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டான்.

"எவ்விடம் செல்கிறாய் அப்பனே?"
"பாட்டி, சுட்ட இடம் போகவா, சுடாத இடம் போகவா?"
"அது என்ன குமரா?"
"சுட்டு களைக்கப்பட்டது தூத்துக்குடி, சூழ்ச்சியால் களைக்கப்பட்டது மெரினா. இவை தமிழர் வீரத்தின் நவீன நினைவகங்கள். எங்கே போகலாம்?"

"வீரத்தை பொறுமையாக பார்க்கிறேன். வயிறு பசிக்கிறது, உணவளி அப்பனே"
"என்ன உணவு வேண்டும் பாட்டி?"
"பூக்களை வேகவைத்தது போல் ஒரு பதார்த்தம் உண்டாமே, இட்லி என்று சொன்னார்கள்".
இளைஞன் யோசித்தான், தெருவுக்கு தெரு இட்லி கடைகள் இருந்தாலும் முருகன் இட்லி கடையில் ஔவைக்கு விருந்து வைத்தான்.

ஊரெல்லாம் சுற்றிய ஔவை கடற்கரை சாலையில் தன் சிலைக்கு கீழே ஓய்வெடுத்தார்.
"நல்லது அப்பனே, தமிழின் எதிர்காலம் குறித்து பேசவேண்டும், உன் அரசரிடம் என்னை அழைத்து செல்."
"அவசியம் இல்லை ஔவையே. கோடை காலத்தில் தேர்தல் வருகிறது, அரசர்களே வீடு வீடாக வந்து மக்களை சந்திப்பார்கள். தமிழின் எதிர்காலம் குறித்து பேச நீ காணவேண்டியது அரசரை அல்ல, கவிப்பேரரசரை. என்னோடு வா."

அன்னிபெசன்ட் நகருக்கு ஔவை வருகிறார். கவிஞரின் இல்லத்தில் அடியெடுத்துவைக்கிறார்.
இருசக்கர இளைஞன் விடைபெறுகிறான். தன் வீட்டு புல்வெளியில், ஒரு கையில் தேனிரோடும் மறுகையில் பேனாவோடும் கவிஞர் காட்சியளிக்கிறார். ஔவை தன்னை அறிமுகம் செய்கிறார். கவிஞர் எழுகிறார்.

காலில் விழுந்து பழகாத கவிஞர், கண்களில் நீர்கட்ட ஔவையின் கைதொட்டு வணங்குகிறார்.
"ஔவையே..! தாய்நாடு திரும்பிய தாயே..! தமிநாட்டின் வணக்கம் உனக்கு."
"கவிஞனே, தமிழ்நாடெல்லாம் வேண்டாம், உன் தமிழாற்றுப்படையில் இடம் கிடைக்குமா"
கவிஞர் சிரிக்கிறார். "நூற்றாண்டுகள் கடந்து வந்த பெண்பாற் புலவரே, பாட்டியின் புகழ் பாடாத பேரன்கள் உண்டா? உன் வாழ்வும் தமிழால் ஆனது என் வாழ்வும் தமிழால் ஆனது. உன்னுடைய அதியமானும் மாய்ந்துவிட்டார், என்னுடைய அதியமானும் மாய்ந்துவிட்டார். இனி நமக்கு நாம்தானே ஆதரவு."
கவிஞர் ஔவையோடு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார். மாண்டுபோன புலமைகள், தமிழ் தாண்டவேண்டிய தடைகள் என நீண்டநேரம் உரையாடுகிறார்கள்.

கவிஞர் தந்த நெல்லிக்கனி தேனீரை மெல்ல பருகிய ஔவை, கைத்தடிபற்றி எழுகிறார்.
"கவிஞனே, உன் தமிழாற்றுப்படை சபையில் ஏதோ ஒரு வரிசையில் நானும் அமர்திருப்பேன். தாயிருக்கும்வரை கலக்கமில்லை, எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை" என ஆசிகூறி மறைந்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT